வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற பெரும் கோசத்துடன் சிறிலங்காவின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி அன்றைய தினம் (4) வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டம் 3 ஆவது நாளான இன்று திருகோணமலையை சென்றடைந்துள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு என்ற கோரிக்கைளை வலியுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகங்களினால் கடந்த 4 ஆம் திகதி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தின் தடைகள் அச்சுறுத்தல்களை மீறி பெருந்திரளான மக்கள் எழுச்சியுடன் நடைபெறும் இப்பேரணி முதல் நாள் கிளிநொச்சியையும் 2 ஆம் நாள் முல்லைத்தீவையும் சென்றடைந்திருந்த நிலையில் இன்று அங்கிருந்து திருகோணமலையை சென்றடைந்துள்ளது.
இந்நிலையில் 4 ஆவது நாளான நாளை திருமலை நகரிலிருந்து ஆரம்பமாகவுள்ள மேற்படி மக்கள் எழுச்சி பேரணி மட்டக்களப்பு வெருகல் மற்றும் களுதாவளை ஊடாக இறுதியாக மட்டக்களப்பு காந்தி பூங்காவை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.