SHARE
செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையின் 13ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்றய தினம் (16-05-2022) பிரித்தனிய பாராளுமன்ற கட்டத்தொகுதியில் மாலை 6:30 மணியளவில் தொழில்கட்சிக்கான தமிழர்களால் சிறப்புற நடாத்தப்பட்டது.

தொழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவரான திரு சென் கந்தையா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்தொழில்கட்சி நிழல் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், அனைத்து பிரதான தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இறுதியுத்தத்தில் தப்பிவந்தவர்கள், சித்திரவதையில் தப்பித்தவர்கள், மாற்றின மக்கள் மற்றும் தமிழ் மக்கள் என பெரும் தொகையில் கலந்து கொண்டனர்.

இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களுக்கு அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வை திரு சென் கந்தையா அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிமுக உரை நிகழ்த்தி ஆரம்பித்து வைத்தார். அவர் தனது உரையின் போது முள்ளிவாய்க்கால் அவலங்களை எடுத்துரைத்ததுடன் தொழில் கட்சியிடம் ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். அவரை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக வருகை வந்திருந்த, சர்வதேச வார்த்தகத்திற்க்கான நிழல் அமைச்சரும் கரோ பகுதி பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய கரேத் தாமஸ் எம் பி. (Hon. Gareth Thomas MP) அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான நிழல் வெளிவிவகார அமைச்சரும் வூட்கிறீன் பகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்பிற்குரியி கதறின் வெஸ்ட் எம்பி (Hon. Catherine West MP) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரின் உரையின் போது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பிரேரிப்பதற்கான தீர்மானத்தை தொழில்கட்சி மேற்கொண்டுள்ளதாக அறிவித்தார்.
அடுத்து தொழில் மற்றும் ஓய்வுதிய தேர்வுக்குழுவின் தலைவரும், நிழல் அமைச்சரும், ஈஸ்ட்காம் பகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய உயர்திரு ஸ்டீபன் தீம்ஸ் எம்பி (Rt. Hon. Stephen Timms MP) அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

மேலும் குடிவரவு நிழல் அமைச்சரும் ஸ்ரெதம் பகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்பிற்குரிய பெல் றிபெறியோ அடி எம்பி (Hon. Bell Ribeiro-Addy MP) அவர்மகள் மற்றும் நிதித்துறைக்கான நிழல் அமைச்சரும் ஈலிங் பகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஜேம்ஸ் முர்ரே எம்பி (Hon. James Murray MP) அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரைகளை வழங்கியிருந்தனர்.

அவர்களை தொடர்ந்து, விசேட பேச்சாளர்களாக வருகை தந்திருந்த, சித்திரவதையில் இருந்து சுதந்திரம் (Freedom From Torture) அமைப்பை சேர்ந்த ரேசி டொய்க் (Tracy Doig) அவர்கள், ரெட்றெஸ் (REDRESS) அமைப்பின் தலைமை நிர்வாகியான மேகன் சிமித் (Megan Smith) அவர்கள், இலங்கை பிரச்சார (Sri Lanka Campaign) அமைப்பின் இயக்குனரான மெலிசா றிங் (Melissa Dring) மற்றும் பேர்ள் (PEARL) அமைப்பின் பிரதிநிதியான அபிராபி ராஜ்குமார் ஆகியோரும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

அனைத்து பேச்சாளர்களும் இனப்படுகொலையாளிகளான இலங்கை இராணுவ தளபதிகள் பிரித்தானியாவால் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை ஒருமித்து வலியுறுத்தினர். பல பிரமுகர்கள் இந்த கோரிக்கைக்கு தமது முழு ஆரதவை ஒளிப்பதிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) சார்பாகவும், 2009 இல் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் போராட்டத்தை முன்னொடுத்த இளையோர் சார்பாகவும் செல்வன் கிரிஸ் சபாபதி அவர்களும், தமிழ் இளையோர் அமைப்பின் (TYO) சார்பாக செல்வி கோபிதா விக்னேஸ்வரன் அவர்களும் உரையாற்றினர்.
அத்துடன் தமிழர் வரலாற்று மையத்தின் இளையோர் அணி சார்பாகவும், முள்ளிவாய்க்கால் படுகொலையின் நேரடிசாட்சியுமான, இளந்தலைமுறையை சேர்ந்த செல்வி புகழினி பாலகிருஸ்ணன் அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டது மிகவும் சிறப்பான அம்சமாக இருந்தது.

அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறையின் சார்பில், தமிழர் வரலாற்று மையத்தின் பிரதிநிதியாகிய திரு R சங்கீதன் அவர்களால் தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிக்கை வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான போர்க்குற்றவியல் விசாரணைகளை முன்னொடுப்பதற்கான செயற்பாடுகள், ஆதாரங்கள் திரட்டல் மற்றும் இதரபடிமுறைகள் பற்றியும், சர்வேந்த்ரா சில்வாவை பிரித்தானியா தடை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருந்தனர். இந்த நினைவுக்கூட்டத்தில் புலம் பெயர் மக்களும், தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள், தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள், நாடு கடந்த தமிழீழ செயற்ப்பாட்டாளர், தமிழர் வரலாற்று மைய செயற்பாட்டாளர்கள் என பல தரப்பினரும் அமைப்பு பேதம் இன்றி ஒன்றிணைந்து கலந்துகொண்டது மிகவும் சிறப்பாக எல்லோராலும் பாராட்டப்பட்டது.

Print Friendly, PDF & Email