SHARE

ப.சுகிர்தன்

கிரிக்கெட் ரசிகர்களிடத்தே பெரும் வரவேற்பை பெற்ற விறுவிறுப்பும் அதிரடியும் சுவாரஷ்யமும் நிறைந்த இருபது-20 உலகக்கிண்ண தொடர் நடப்பாண்டில் (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 8 ஆவது இருபது-20 உலகக்கிண்ணத்தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. 16 அணிகள் களமிறங்கும் இத்தொடரில் சொந்தமண்ணில் நடப்பு சம்பியனாக அவுஸ்திரேலியா அணி களமிறங்குவது இத்தொடரின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருபது-20 உலகக்கிண்ண அரங்கில் இதுவரை மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 முறை சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்ட அதேவேளை இந்தியா பாகிஸ்தான் இங்கிலாந்து இலங்கை அவுஸ்திரேலியா ஆகியன தலா ஒருமுறை சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளன.

இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. இரு முறை உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் வெற்றியை நழுவவிட்டபோதிலும் 2021 இல் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இந்நிலையில் நடப்பு சம்பியனாக சொந்த மண்ணில் இம்முறை தொடரில் களம் காணும் அவுஸ்திரேலியா ஏனைய அணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. இதில் அவுஸ்திரேலிய அணியின் அதிகமான வீரர்கள் ஐ,பி.எல். தொடரில் தொடர்ந்து ஆடிய அனுபவமுடையவர்கள் என்பதனால் இத்தொடரில் அவர்கள் அதிரடியை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மறுபக்கத்தில் ஐ.சி.சி. இருபது-20 தரப்படுத்தலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ள இந்தியா என்றுமே தனக்குரிய தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தும். நடைபெற்று முடிந்த ஐ,பி.எல். தொடரில் இனம் கண்ட இளம் வீரர்களுடன் அனுபவ வீர்களுடனும் களம் இறங்கவுள்ள இந்தியா ஏனைய அணிகளிற்கு சிம்ம சொற்பனமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆஸ்திரேலியாவில் ஏழு இடங்களில் தொடரின் போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் முதல் போட்டி இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சூப்பர் – 12 போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதியிலிருந்து நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் 2021 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா முழுவதும் கிரிக்கெட் திருவிழாவுக் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சம்பியனாக களமிறங்கு அவுஸ்திரேலியா உலகக்கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது ஏனைய அணிகளில் ஒன்று அதனை பறித்தெடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Print Friendly, PDF & Email