SHARE

அ.மயூரன் MA.

தமிழ்ச்சமூகத்தில் திலீபன் என்ற ஒரு தனி மனிதனுடைய தீர்க்கமான கருத்துக்கள் சமூக ஆழ்மனக் கருத்துக்களாக நிலைத்திருப்பதை இன்று அவதானிக்க முடிகிறது. இன்று திலீபன் தன்னை உருக்கி 34 ஆண்டு கடந்துவிட்டது.   இன்றும் திலீபனின் கனவுகள் அப்படியேதான் நடைபோடுகிறது. ஆனால் அவன் மூட்டிய தீ இன்றும் தமிழர்கள் மத்தியில் கனன்றுகொண்டே இருக்கிறது.

ஈழமக்களின் மக்களின் ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் என்பதை திலீபனின் தியாக வேள்வி நடந்த நாட்களில்  நிகழ்கின்ற சம்பவங்களும் அதன் பின்னான கடந்த 34 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்ற  ஏதோ ஒரு வகையான தமிழ் மக்கள் எழுச்சிகள் ஒரு நினைவுகள் எதிர்பாராத சாதக நிகழ்வுகள் நடந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அந்தவகையில்  திலீபன் கூறிய  வாசகங்களில்  ஒன்றான யாழ் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் தமிழீழ விடுதலையின் முதல்நாள் என்றும் யாழ் கோட்டையில் புலிக்கொடி பறப்பதை வானிலிருந்து 651 வது ஆளாக நான் பார்ப்பேன் என்றும் கூறியவை இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த சூழலில் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கேயர்களால் 1622 இல்  பண்ணைப்பாலத்தருகில் பிலிப் தே ஒலிவேரா தலைமையில் சதுர வடிவில் கட்டப்பட்ட யாழ்க்கோட்டையை அதன்பின்னர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் புதுப்பித்து  ஐங்கோண வடிவில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் மிகவும் பலமான கோட்டையாக 1792 இல் கட்டிமுடித்தனர். இதை  ஆய்வாளர் என். டபிள்யூ ஏ நெல்சன் அவர்களே குறிப்பிட்டிருந்தார். இப்படிப்பட்ட பலமான கோட்டை ஒல்லாந்தரின் பின் பிரித்தானியரிடமும், இலங்கை இராணுவத்திடமும், இந்திய இராணுவத்திடமும், புலிகளிடமும் என கைமாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே யாழ்க்கோட்டையை 1984 ஆம் ஆண்டு ஈழத்தமிழ்ப் போராளிகள் ஒன்றிணைந்து முற்றுகையிட்டிருந்தனர். இம்முற்றுகைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின்  அன்றைய யாழ்மாவட்டத்தளபதி கேணல் கிட்டு அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.

10.07.1984  முற்றுகைக்குள் உள்ளான யாழ் கோட்டை இந்திய இராணுவம் யாழ் கோட்டைக்குள் பிரவேசிக்கும் வரை  (03.08.1987) மூன்று ஆண்டுகள் 23 நாட்கள் தொடர்ந்திருந்தன. கோட்டையின் வெளிப்புற வீதியில் புலிகளின் அரண்களோடு புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய இயக்கக் குழுக்களின் கண்காணிப்பு அரண்களும் ஆரம்பத்தில் அமைந்திருந்தன. பின்னர் அவ்வாயுதக் குழுக்கள் முரண்பட்டுக்கொண்டு வெளியேற அதாவது இம்முற்றுகைத்தாக்குதலில் இருந்து புளொட் முதலில் வெளியேற அதனைத்தொடர்ந்து ரெலோ ஈபிஆர்எல்எப் ஆகிய இயக்கக் குழுக்களும் வெளியேறினர். இதன் பின்னர் விடுதலை புலிகள் மட்டும் இக்கோட்டையைச் சுற்றி கன்னிவெடிகளை விதைத்து இறுதிவரை முற்றுகையிட்டிருந்தனர். 

03.08.1987 இந்திய இராணுவம் கோட்டைக்குள் நுழைய அப்போதைய யாழ் மாவட்ட தளபதி கேணல் கிட்டு தலைவருக்கு  பின்வருமாறு செய்தி அனுப்பினார். ‘ அன்பான தலைவரே! இந்திய அமைதிப்படையினரின் கோட்டைப்பிரசவத்துடன் தாங்கள் எனக்கிட்ட பணியை முடித்துக் கொள்கிறேன். மூன்று ஆண்டுகள் 23 நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகையில் எமக்கிட்டபணி செவ்வனே நிறைவேற்றப்பட்டது. என அறிக்கை அனுப்பிவிட்டு படையணிகளை விலக்கிக் கொண்டார்.   இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறும் வரை கோட்டைக்குள் இருந்தனர். இதன்பின்னர் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட முறுகல் நிலையால் 10.10.1987 மீண்டும் கோட்டையை சூழ விடுதலைப்புலிகளின் படையணிகள் தடுப்பரண்கள் அமைத்தனர். அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதன் பின்னர் 11.06.1990 யாழ் கோட்டை இராணுவ முகாமை மீண்டும் புலிகள் முற்றுகைக்குள் கொண்டுவந்தனர். சரியாக 107 நாட்கள் தொடர் முற்றுகையின் பின்னர் தியாகி திலீபனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில்  26.09.1990  யாழ்க்கோட்டை புலிகளின் வசமானது.

எந்த இழப்பு கொடுத்தாயினும் தியாகதீபத்தின் நாளில்  கோட்டையை கைப்பற்றுவது என்ற உறுதியில் புதுப்புது உத்திகளுடனும், முயற்சிகளுடனும் புலிகள் மேற்கொண்டனர்.  கோட்டைக்குள் இருந்த இலங்கை இராணுவமும் ஒப்பரேசன் போர்ட், வோட்டர் கேற், என பல இராணுவ நடவடிக்கைகளை  மேற்கொண்டு தோல்விகண்டது. மாறாக புலிகளின் தரப்பில் பிரிகேடியர் பாணு இம்முற்றுகை தாக்குதல்களை ஒருங்கிணைத்தார். ஒருதரம்  கோட்டையின் வரலாற்றை திரும்பி பார்போமானால்   யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய ஒல்லாந்தப்படை  போர்த்துக்கேயப் படைகளை யாழ்க் கோட்டைக்குள் ஒல்லாந்த தளபதி அட்மிரல் கொமுசாறி றைக்ளொவ்  வன்ஹுன் தலைமையில் 16.03.1658 முற்றுகையிட்டு போர்த்துக்கேயர்களுக்கு வெளியிலிருந்து உணவு, ஆயீத தளபாடங்கள் முதலான  வளங்கள் எதுவும் செல்லாது சுற்றிவளைத்து  21.06.1658  வரை 101 நாட்கள் முற்றுகையி பின்னர் கைப்பற்றினர்.

விடுதலைப் புலிகளும் இந்த ஒல்லாந்த தளபதி கொமுசாறி றைக்ளொவ் வன்ஹுன் உத்தியையே நடைமுறைப்படுத்தினர். இங்கு ஒரு வித்தியாசம் போர்த்துக்கேயரை ஒல்லாந்தர் முற்றுகையிடும் போது யாழ் கோட்டை அவ்வளவு பலமாக இல்லை.  ஆனால் விடுதலைப் புலிகள்  கோட்டையை முற்றுகையிடும் போது ஆசியாவிலேயே மிகப் பலம்வாய்ந்த கோட்டையாக இருந்ததோடல்லாமல் நவீன ஆயுதப்பாவனையையும் கொண்டதாக காணப்பட்டது. இவ்வாறு கோட்டை முற்றுகையை 107 நாட்கள் புலிகள் மேற்கொண்டிருந்தனர். 26.09.90 அதிகாலை 12.15 மணிக்கு திலீபனின் 3வது நினைவு நாளில் எப்படியாவது கோட்டையை கைப்பற்றுவது என்ற உறுதியில் பசீலன் எறிகணைகள் சரமாரியாக முழங்க  இறுதிக்கட்ட முற்றுகை தாக்குதல் ஆரம்பமானது. இதனால் நிலை குலைந்தவர்கள் கோட்டைக்குள் உணவும் இல்லாது போனதால் பெண்கள் சிறைச்சாலைக்கு அருகில் உள்ள ஒல்லாந்தர் அமைத்த நீர்வழியால் மண்டைதீவுக்குத் தப்பிச் சென்றனர்.

அதிகாலை 04.30ற்கு கோட்டை புலிகளின் வசமானது. சரியாக திலீபன் தியாகியான நேரமான 10.48 ற்கு அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த பிரிகேடியர் பாணு அவர்களால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. இதனுடன் 400 ஆண்டுகள் ஆதிக்கச் சின்னமாக விளங்கியகோட்டையில் தமிழன் கொடி பறந்தது. உலக வரலாற்றில் ஒரு கோட்டை இரண்டு படையினரால் (ஒல்லாந்தப்படை, தமிழர் படை)  100 நாட்களுக்கு மேல் முற்றுகையிடப்பட்ட வரலாறு எங்குமில்லை. இது ஈழமண்ணிலேயேதான் நடந்திருக்கிறது. இது உலக வரலாற்றில் ஒரு பதிவாகும். யாழ் கோட்டை கைப்பற்றப்பட்டதன் பின்னர் அதை தகர்க்கின்ற முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இக்கோட்டையினை  போர்த்துக்கேய கப்பித்தான் மேஜர் பிலிப் தே ஒலிவேரா கட்டும்போது யாழ்ப்பாணத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்களின் கற்களை கோட்டை கட்டுமிடத்திற்கு எடுத்துவர  யாழ் மக்களினை வரிசையில் கோட்டைவரை நிறுத்தி அவர்களின்  கைகளினால் அக்கற்களைக் கைமாற்றி கோட்டைக்கு எடுத்துச்சென்றே கோட்டையினைக் கட்டியிருந்தான் .

இந்த நிகழ்வு தலைவரை  வெகுவாகப் பாதித்ததன் விளைவுதான்  தமிழர்களை அடிமைகளாக்கி அவர்கள் இரத்தத்தில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை  இருப்பதை ஒரு அவமானச்சின்னமாகவே நான் பார்கிறேன் என்று செவ்வி வழங்கியிருக்க வைத்தது. அத்துடன்  யாழ்க் கோட்டை இடிக்கப்படும் போது அங்கிருந்து கோயில்களின் கற்களுடன் சில பொருட்களும்  கண்டெடுக்கப்பட்டன. அப்போது அவை தொல்லியல் ரீதியாக ஆராயப்படவில்லை. 1990. ஐப்பசி 13 ஆம் திகதி  யாழ் கோட்டையில் வைத்து  ஈழநாதம் பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் பேபி சுப்பிரமணியம்  அவர்கள் போர்த்துக்கேயர் இக்கோட்டை கட்டும்போது  யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களையும், பெரிய வீடுகளையும்  இடித்தே  கட்டினர். இதன் அழிபாடுகளே தற்போது நீங்கள் காணும் கற்கள். ஆனால் இக்கோட்டைக்குள் தமிழர்களின் அடையாளச்சின்னங்கள் புதைந்து கிடக்கிறது. இக்கோட்டையை முழுவதுமாக ஒருவேளை அழித்தால் அவற்றை வெளிக்கொணரலாம் என்றார்.

அவர் அன்று என்ன மனவோட்டத்தில் சொன்னாரோ இந்த உண்மை 2011 நிரூபணமாகிறது. நெதர்லாந்து அரசு (ஒல்லாந்தர்) யாழ் கோட்டையை மீள் அமைத்து அருங்காட்சியகமாக மாற்றும் நோக்குடன்  கோட்டைக்குள் புணரமைப்பு வேலையை ஆரம்பித்தது. இதன்போது சில தொல் பொருட்கள் பல கண்டெடுக்கப்ட  டர்காம் பல்கலைக்கழக பேராசிரியர்  றொபின்கொன்னிங்காம் அவர்களின் தலைமையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவும் இணைந்து  மேற்பரப்பு அகழ்வாய்வு ஒன்றை  மேற்கொண்டனர். இவ் அகழாய்வு மூலம்  வெளிக்கொணரப்பட்டது. அதாவது இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி இரும்புக் கால மக்கள்  வாழ்ந்தனர் என்பதை சான்றாதாரங்களுடன் நிரூபித்திருந்தது. 

இதன் பின்னர் 01.7.2017-27.07.2018    மீண்டும் ஒரு ஆய்வு கொன்னிங்காம் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.  இவ் அகழ்வாய்வில் கிடைத்த கருப்பு -சிவப்பு மட்பாண்டம் யாழ் கோட்டை  பெருங்கற்கால மையம் என்பதை உறுதி செய்வதாக பேராசிரியர் ரொபின் கன்னிங்காம் குறிப்பிட்டார். கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன. அத்துடன் இங்கு கிடைத்த உரோம ரவுலட் மட்பாண்டங்கள், ஜார் மதுச்சாடிகள், சீனப் பொருட்கள் என்பன கண்டெடுக்கப்பட்டதானது கிறித்துவுக்கு முந்தைய காலத்திலிருந்து யாழ்ப்பாண கோட்டை தமிழர்களின் சமுத்திர வாணிபத்தில் இலங்கையின் மையப்புள்ளியாகத் திகழ்ந்திருக்கிறது என்றார். 

என்னைப் பொறுத்தவரை யாழ் கோட்டை புலிகளினால் கைப்பற்றப்பட்டு தகர்க்கப்பட்டதனாலேயே  அங்கு தொல்லியல் சான்றுகளும் கிடைத்தன அத்துடன்  அதை மீள உருவாக்கும் பணியும் அகழாய்வும் மேற்கொள்ளப்பட்டது. இக்கோட்டையை தகர்க்காது போயிருந்தால் கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால  பெருங்கற்காலத்  தமிழனின் தடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்காது இது திலீபனின் தியாகத்தினாலேயே இவை நிகழ்ந்தது என்பேன்

Reference 1, யாழ் கோட்டையை எவ்விதம் கைப்பற்றினோம்  – விடுதலைப் புலிகள் சஞ்சிகை( ஆவணி – புரட்டாதி 1990) 2, யாழ் கோட்டையில் 107 நாட்கள் (ஈழமுரசு பிரான்ஸ்) 3, களப்பல கண்ட யாழ் கோட்டை (02.1995) 4, யாழ்க்கோட்டை வீழ்ச்சியும், எழுச்சியும் (விடுதலைப் புலிகள் 27.11.1990) 5, தமிழர் சமுத்திர வாணிப மையத்தில் எழுந்த யாழ் கோட்டை – அ.மயூரன் (2020) 6, Belamy, The Fort Of Jaffna 7,, Nelson W.A The Dutch Forts of Srilanka 1984 8,  Operation Fort , (Sunday observer) 16.09.90 9, Balachandran p.k. Jaffna Peninsula was entirely ‘Catholic during Portuguese rule 10, The antiquity of Jaffna Fort: New evidence from post-disaster archaeological investigations in northern Sri Lanka (04.2019) 11, Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade 12, Jaffna Fort was a commerce hub even at 2,700 years BP: Confirmation in the Archaeological Excavations (Tamil net July 2018)

Print Friendly, PDF & Email