SHARE

-தந்திரீகன்-

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 42 ஆண்டுகள் முழுதாக நிறைவுக்கு வந்துவிட்டது. 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிப்பீடமேறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை 1979ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தது.

1972 ஆம் ஆண்டின் குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம், 1972ஆம் ஆண்டின் செலாவணி கட்டுப்பாட்டு (திருத்த) சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதனையொத்த ஏனைய இயக்கங்களைத் தடைசெய்யும் சட்டம் ஆகியவற்றில் காணப்பட்ட ஏற்பாடுகள் சிலவற்றை உள்ளீர்த்து அவசரகால ஒழுங்கு விதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது பயங்கரவாத சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருந்து.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட சட்டமூலமானது, பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் சம்பிரதாயங்கள் அனைத்தையும் புறமொதுக்கிய வகையில் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக, சட்டமூலமொன்று பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அதுபற்றி அபிப்பிராயத்தினை உயர்நீதிமன்றத்திடத்தில் சபாநாயகர் கோருவது பாராளுமன்ற சம்பிரதாயங்களில் மிகவும் முக்கியமானதொன்றாகும்.

ஆனால், பயங்கரவாத தடைச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டபோது அவ்விதமான எந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. 1979 ஜுலை 19ஆம் திகதி பகல் உணவிற்குப் பின்னர், பாராளுமன்றம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

அப்போதைய பாராளுமன்ற விவகார அமைச்சர் வின்சன்ட் பெரேரா அன்றைய தினமே அச்சட்டமூலம் நிறைவேற்றப்படக்கூடியதாக நிலையியற்கட்டளைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென பிரேரித்தார். அதற்கு சபை அனுமதி வழங்கியது. நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் அச்சட்டமூலத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார்.அதன்பின்னர் ஆளும் எதிர்க்கட்சிகளின் வாதப்பிரதிவாதங்கள் ஒப்புக்காக நடைபெற்றன. குறித்த சட்டமூல விவதத்தின்போது ஜே.ஆரின் இரும்புக்கர ஆட்சிக்கு எதிராகவும் குறித்த சட்டமூலத்தினால் ஏற்படப்போகும் விளைவுகள் மற்றும் சட்டமூலம் நிறைவேற்றப்பட முயலும் முறை தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை துணிச்சலாக முன்வைத்தவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மைத்திரிபால சேனநாயக்க.

இவர், தனது உரையின்போது, குறித்த சட்டம் இயற்றுவதற்கு முன்னதாக ஜே.ஆர்.அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களின் பணிப்பில் யாழ்.சென்ற குண்டர்கள் 11இளைஞர்களை பண்ணையில் வைத்து சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்தமையைச் சுட்டிக்காட்டியதோடு, இந்த பயங்கரவாத தடைச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு பிராந்தியத்தில் ஹிட்லர் ஆட்சி நிலவும் என்று குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களில், மக்களின் அடிப்படை உரிமைகளில் ஏதாவதொன்றை பறித்துக்கொள்ள முயன்ற ஒவ்வொரு சட்டமூலமும் தேசிய நலனில் அவசர முக்கியத்துவமிக்கதாக விபரிக்கப்பட்டு, எந்த மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு இம் மிகப் பெரிய பெரும்பான்மை கிடைப்பதற்கு உதவியதோ, அதே பொரும்பான்மையை பயன்படுத்தி அந்த மக்களின் முதுகிற்கு பின்னால் இந்தச்சட்டமும் அவசரமாக நிறைவேற்றப்பட்டு அடிமைச்சாசனம் எழுதப்படுகின்றது” என்று எச்சரித்தார்.

அந்த வாதவிவாதங்களின் ஈற்றில் அச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அன்றிரவு 9.45 வரை தொடர்ந்து நடைபெற்றது. அமைச்சர் தேவநாயகம் தமது தொகுப்புரையை நிகழ்த்துவதற்கு இரவு 9.58 மணிக்கு எழுந்து நின்றார். தொடர்ந்து முன்றாம் வாசிப்பும் நடைபெற்று சட்டமூலம் எல்லா நிலைகளிலும் நிறைவேறியது.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமூலமொன்றின் மீது வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததன் பின்னர் உயர்நீதிமன்றத்தினது, அல்லது எதிர்க்கட்சியனது முன்மொழிவுகளை பெற்று குழுநிலையில் வாக்கியம் வாக்கியமாக படிக்கப்பட்டு திருத்தப்பட்ட பின்னரே குறித்த சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுவது மரபாகும். இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோதே உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயம் கோரப்பட்டிருக்கவில்லை. அதாவது ஜனநாயகத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறை நிராகரிக்கப்பட்டது. அடுத்து பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிரகாரம் எதிர்க்கட்சிகளின் ஆகக்குறைந்த கோரிக்கைகள் கூட உள்வாங்கப்படவில்லை.

அதன் மூலம் ஜனநாயகத்தின் ஏனைய தூண்களில் ஒன்றான நிறைவேற்றுத்துறையின் இச்சைகளை செயற்படுத்தும் ‘பொம்மையாகவே’ ஜனநாயகத்தின் மற்றத்தூணான சட்டவாக்கத்துறை செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த தினமன்று பயங்கரவாததடைச் சட்டத்தோடு தொடர்பில்லாத, பொது மக்கள் பாதுகாப்பு கட்;டளைச் சட்டத்தின் கீழான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, இரவு 10.25 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், 1982ஆம் ஆண்டில் 10ஆம் இலக்க சட்ட மூலத்தின் மூலம் பயங்கரவாத தடைச்சட்டமானது நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.
குறித்த பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இவர் பயங்கரவாத தடைச்சட்டம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை. இதற்கான காரணம் பற்றி இற்றைவரையில் வெளிப்படையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில்லை.

நான்கு தசாப்தங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக போரடிவரும், அதனை நீக்க வேண்டும் என்று கோசங்களை எழுப்பிவரும் தமிழினத்தின் ‘தளபதியாக’ இன்றும் போற்றப்படும் அமிர்தலிங்கம் ஏன் இந்த சட்டமூலத்தினை எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதுவொரு வரலாற்று முக்கியமான விடயமாகும்.

ஒரு இனம் குறித்த சட்டத்திற்கு எதிராக நான்கு தசாப்தமாக போராடிவரும் நிலையில் அந்த இனத்தின் ஆணைபெற்ற தலைமை ஏன்வாக்களிக்கவில்லை என்பது மிகவும் முக்கியமானதொரு விடயமும் கூட. உண்மையிலேயே குறித்த சட்டமூலம் தற்காலிகமாகவே கொண்டுவரப்படுகின்றது.
ஆகவே அதனை குழப்பும் வகையில் எதிர்த்து வாக்களித்தால் பாராளுமன்றத்தினை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை முன்னெடுப்பேன் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தன அமிர்தலிங்கத்தினை வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக எச்சரித்திருந்தார்.
அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தால் அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித்தலைவர் பதவி பறிபோயிருக்கும். அதன் காரணத்தினாலேயே அன்று அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்களித்திருக்கவில்லை.

இதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் இரா.சம்பந்தன் சாட்சி. அவர் இதயசுத்தியுடன் இதனை ஏற்றுக்கொள்வது அரசியல் தர்மம். அதனை அவர் செய்வரா? என்பது அவருக்கு ஆணை வழங்கிய மக்களுக்கும், அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. இனமொன்றின் பிரச்சினையாகும்.

இதேபோன்றுதான் 2015ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் கூட்டு ஆட்சிக்கு முண்டு கொடுத்த தருணத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஐ.நா.வின் 36ஆவது கூட்டத்தொடரில் சர்வதேசத்தின் முன்னாள் வாக்குறுதி அளித்தார். அதனைச் செயற்படுத்த அப்போது நீதி அமைச்சராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ முனைந்தார். அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்பதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டத்தினை வரைந்தார்.

இருப்பினும், அப்போது ரணிலின் வலது கையாகவிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்தின் குறித்த சட்டத்தினை மிக வலிமையாக்க வேண்டும் என்று தனது சகபாடியான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ணவுடன் இணைந்து மறுசீரமைப்பு செய்ய விளைந்தமையால் அதன் ஆபத்துக்கள் வெளிப்படவும் குறித்த சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது இந்த சட்டத்தினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட இனமாக தமிழினம் இருக்கின்றது. ஆனால் இந்த சட்டத்தினை அறிமுகப்படுத்தியதிலிருந்து தற்போது வரையில் நடைமுறையில் இருப்பதற்கு தமிழர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்றால் பலர் மூக்கின் மேல் கையை வைப்பார்கள்.

ஆனாலும், உண்மை அதுவே. பயங்கரவாத தடைச்சட்டத்தினை அறிமுகம் செய்தவர் அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம். அவர் ஒரு தமிழர். இந்தச் சட்டத்தினை எதிர்க்காது விட்ட எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் ஒரு தமிழர். பின்னர் இந்த சட்டத்தின் கீழ் முதலாவது வழக்கினை தொடர்ந்த அப்போதைய சட்டமா அதிபர் சிவா பசுபதி ஒரு தமிழர். பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டபோதும் அதற்கு பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோதும் அமைதியாக இருந்தவர் சம்பந்தன் ஒரு தமிழர். குறித்த சட்டத்தினை மாற்றி அமைப்பதற்கு முனைந்தபோது அதில் இழுபறி ஏற்படக்காரண கர்த்தாவாகியவர் சுமந்திரன் என்ற தமிழர்.

ஆக, தமிழர்களால் தான் பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதுவரையில் அமுலில் இருக்கின்றது. இதன் கோரங்களையும் தமிழனம் அனுபவித்துவிட்ட நிலையில் இனியாவது, தமிழனத்திற்கான பரிகாரமாக குறித்த சட்டமூலத்தினை நீக்க வேண்டும் என்பதில் ஐரோப்பிய பாராளுமன்ற தீர்மானம், ஐ.நா.அரங்கு உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் உறுதியாக இருக்கும் நிலையில் உள்நாட்டில் தமிழினத்தின் பிரதிநிதிகள் உறுதியான அழுத்தங்களை வழங்கி மாற்றி அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால், தமிழினத்துக்கு எதிரான சட்டம் நீட்சி பெறுவதற்கு அதன் பிரதிநிதிகளே காரணகர்த்தாக்கள் என்ற வரலாற்றுக்களை துடைத்தெறியப்படாது தொடர்ந்துகொண்டே இருக்கும். இனவிடுதலையில் அதுவொரு சாபக்கேடாகவே நீட்சிபெறும்.

Print Friendly, PDF & Email