SHARE

தீபச்செல்வன்

முப்பது வருடமாக நாட்டில் இருந்த பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுக் ஆகுவதாக ஸ்ரீலங்கா அரசின் வானொலி ஒன்று செய்தி ஒலிபரப்பிய சமயத்தில், கிளிநொச்சி நகரில் அதனைக் கேட்டுக் கொண்டிருந்த நம் மக்கள் மிகுந்த கோவமும் கொந்தளிப்பும் அடைந்ததை நேரடியாகப் பார்த்தேன். எங்கள் மண்ணில் குழந்தைகளின் தந்தை அல்லது தாயாரை பறித்துக் கொண்டனர். நிறைய தாய்மாரின் குழந்தைகளை கொலை செய்தனர். பலர் கைகளின்றி, கால்களின்றி, விரல்களின்றி, உடல் பாகங்கள் காயப்பட்டு உலவும் நகரில் இப்படியொரு செய்தி கேட்கையில் எப்படி இருக்கும்? நிச்சயமாக எங்கள் மனங்களை கொலை செய்யும் இன்கொலையாகவே இது இருக்கும்.

அந்த செய்தியில் இன்னும் சில வரிகளும் சொல்லப்பட்டன. மனிதாபிமானப் போரை செய்து சிங்களப்படைகள் பிரபாகரனின் ஈழக் கனவை வெற்றி கொண்டனராம். எங்கள் மக்கள் வகைதொகையின்றி அழிக்கப்பட்டு, அவர்களின் உறவுகள் பறிக்கப்பட்டு, இன்று வாழ்பவர்கள்கூட பகுதியளவில் அழிக்கப்பட்ட இந்த இனவழிப்புப் போருக்கு மனிதாபிமானப் போர் என்று அந்த சிங்களப் பேரினவாத அடிமை ஊடகம் கூறுகின்றது. ஈழப் போரின் இறுதிக் கணங்களை அறிந்த மனித மனம் உள்ள எவரும் இதனைக் கண்டு நிச்சயமாக கொதிப்பார்கள். இதனை தமிழில் எழுதிய அந்த ஊடகவியலாளர் எவ்வாறு அன்றைய இரவு உறங்கி இருப்பார்? எவ்வாறு அன்று உணவை உண்டிருப்பார்? இதெல்லாம் எத்தனை லட்சம் ஆன்மாக்களுக்கு செய்கின்ற அநீதி?

நாம் சட்டம் வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் இப்போது திருகி இனக்கொலை செய்யப்படுகிறோம் என்பதையே இப் பத்தி வலியுறுத்த முனைகின்றது. அதற்காகவே மேற்குறித்த விடயங்களை இங்கே சுட்டிக்காட்டவும் விளைகிறேன். 2021 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது எமக்கு பல படிப்பினைகளை தந்திருக்கிறது. ஈழத்தின் இன்றைய நிலமையை மாத்திரமின்றி, இனப்படுகொலையின் நீதியை வெல்ல வேண்டியதன் அவசியத்தையும் அது எதிர்காலத்தில் எப்படியெல்லாம் எமது இனத்தை அழிக்கப் போகின்றது என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ளுவதற்கான வெளியை முள்ளிவாய்க்கால் 2021 ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரோனா தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகின்றது. நாடுகள் எல்லாம் முடக்கத்தில் இருக்கின்றன. இன்று இருப்பவர்கள் நாளை இல்லை என்ற அபாய நிலை ஆட்சி செய்கிறது. கண்ணுக்குத் தெரியாத கிருமி மனித இனத்தின் இருப்பையும் ஆட்சியையும் அவனின் பேராசைகளையும்  கேள்விக்கு உட்படுத்தி நிற்கின்றது. இந்தக் காலத்திலும்கூட சிங்களப் பேரினவாத்தின் வெறி அடங்கிவில்லை என்பது வியப்பதற்குரியதல்ல. அதுவும் கொரோனவை கிருமிகளை துணைக்கு அழைத்து ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கின்ற அரசின் கொடிய நோக்கத்தை என்னவென்பது?

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் ஒரு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை வந்திருந்தால் சிங்கள அரசுக்கு மிக மகிழச்சியாக இருந்திருக்கிருக்கும். நாட்டை முழுமையாக முடக்கிவிட்டு, கொழும்பில் போர் வெற்றி விழா கொண்டாடி இருப்பார்கள். தற்போதும் கடந்த 18ஆம் திகதி செவ்வாய் கிழமை முல்லைத்தீவை முடக்கியிருந்தது அரசு. முள்ளிவாய்க்காலில் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே முல்லைத்தீவு முடக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சுற்றி இராணுவம் குவிக்கப்பட்டு நினைவேந்தலை தடுக்கும் முயற்சிகளும் இடம்பெற்றன.

அது மாத்திரமின்றி வடக்கு கிழக்கு முழுவதும் கொரோனாவை காரணம் காட்டி இராணுவம் குவிக்கப்பட்டது. பீல்பைக் இராணுவ அணி கிராமங்கள் முழுதும் திரிந்து மக்களை அச்சுறுத்தும் வேலைகளில் ஈடுபட்டன. மாபெரும் இனவழிப்புப் போரை செய்த சிங்கள இராணுவத்திற்கு பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டு போர் வெற்றி விழாக்கள் முன்னெடுக்கப்பட்டு தென்னிலங்கையை மகிழச்சி வெள்ளத்தில் நனைக்க முற்பட்ட சிங்கள அரசு, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை போரில் கொல்லப்பட்டவர்களுக்காக கண்ணீர் விடக் கூட அனுமதி மறுத்திருந்தமை மிகப் பெரிய ஒடுக்குமுறையாகும்.

முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழ் மக்களின் மறக்க முடியாத ஆழமான வடு. எமது மக்கள் ஒன்றரை லட்சம் மக்களை காவு கொண்ட இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனவழிப்பு. கஞ்சிக்கு வரிசையில் காத்திருந்த குழந்தைகளை சிங்கள அரசு அழித்தது. மருத்துமனைகளின் மீதும் அப்பாவி மக்களின் கூடாரங்களின்மீதும் பதுங்குகுழிகளின்மீதும் குண்டுகளை கொட்டி கருவில் இருந்த குழந்தைகளைகூட அழித்த மிகப் பயங்கரமான இனப்படுகொலை. எங்கள் இனத்தை மாத்திரமின்றி உலகின் மனசாட்சி உள்ள அத்தனை சமூகங்களையும் மிகவும் பாதித்த இனப்படுகொலையாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கருதப்படுகின்றது.

இசைப்பிரியாவுக்கு நடந்த பாலியல் இனவேட்டை வன்முறைதான் சிங்கள அரசின் மனிதாபிமானப் போரா? அப்பாவி சிறுவனான பாலச்சந்திரன் என்ற பாலகனின் பிஞ்சு உடலில் இரும்புத் துப்பாக்கிகளை வைத்து அவனைச் சுட்டுக் கொன்றதுதான் சிங்கள அரசின் மனிதாபிமானப் போரா? இப்படி எண்ணற்ற கொடுமைகள் நடந்ததேறின. மனித குலத்திற்கு எதிரான இந்த விடயங்களை ஈழத் தமிழ் மக்கள் மனிதாபிமானப் போர் என்ற பெயரில் எதிர்கொண்டார்கள் என்பது எத்தகைய கொடுமை? இந்தப் போரை கொண்டாடுகின்ற சிங்கள அரசு, அதில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருகின்ற உரிமையை மறுப்பது எப்படிக் கொடுமையானது?

இவைகளின் வழியாக இனப்படுகொலைக்கான நீதியே வலியுறுத்தப்படுகின்றது. நிச்சயமாக இவைகளுக்கு இலங்கை அரசு பதில் கொல்லி ஆக வேண்டும். இப்படி மிகப் பெரிய அநீதிகளை இழைத்துவிட்டு போர் வெற்றி விழாவைக் கொண்டாடி, தமிழர்களை நாயைப் போல சுட்டேன் என மார்தட்டிவிட்டு, உலகத்திற்கு மனிதாபிமான வகுப்பு எடுப்பது இந்த உலகிற்கு நல்லதல்ல. அது மிகப் பெரிய ஆபத்தை தரும். இனியும் இந்த உலகப் பந்தில் இப்படியான கொடுமைகள் நடக்க கூடாது என்பதுதானே ஈழத் தமிழ் மக்களின் பெரும் ஏக்கமாக இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பல்வேறு இடையுறுகளை ஏற்படுத்தி, சிங்களப் பேரினவாத அரசின் நெினைவுகள்மீதான இனக்கொலை தெளிவாக தென்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இனப்படுகொலைக்கான நீதியே ஈழத் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பாகவும் அவர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும், ஈழத் தமிழ் இனத்திற்கான பாதுகாப்பாகவும் இருக்கும். அத்துடன் அதுவே நினைவேந்தல் உரிமையையுக்கூட உறுதி செய்யும். இனப்படுகொலைக் காயங்களிலிருந்து விடுபட்டு, மீள் வாழ்க்கையை கட்டியெழுப்ப இனப்படுகொலைக்கான நீதியும் நினைவேந்தல் உரிமையுமே ஈழத் தமிழினத்திற்கான ஒத்தடம் ஆகும்.

Print Friendly, PDF & Email