SHARE

-தாயகன்-

‘உடயவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை’ என்ற தமிழ் பழமொழி அண்மைய காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் நடைபெற்று வரும் ‘திருக்கூத்துக்களை’ பார்க்கும் போது துல்லியமாக பொருந்தி நிற்கின்றது.

சிங்கள பெருந்தேசியவாதம், பௌத்த அடிப்படைவாதம் ஆகிய இரண்டையும் முன்னிலைப்படுத்திய பெரும்பான்மை ஆட்சியொன்று மத்தியில் இருக்கின்றது என்பதை வாயாரக் கூறும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைந்து அதனை எதிர்த்து நிற்பதற்கு எள்ளளவும் தயாராக இல்லை என்பது அப்பட்டமாக தெரிகின்றது.

தியாக தீபத்தின் நினைவேந்தலில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்ததும் போராட்டத்தினை முன்னெடுத்ததும் தமிழ்த் தேசிய அரசியலை ஒரு ‘திரட்சியாக’ அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும் என்று கொண்டிருந்த நம்பிக்கை உடைத்தெறியப்பட்டுள்ளது.

இப்பொழுது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உருவாகிய கூட்டுக்களே நிலைக்குமா என்றளவிற்கு நிலைமைகள் மோசடைந்திருக்கின்றன. இவ்வாறு மோசமடைந்துள்ள நிலைமைகள் புதிய அரசியலமைப்புக்கான உருவாக்கப்பணி, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் ஆகிய விடயங்களில் வெளிப்பட்டு நிற்கின்றன.

தமிழ் மக்களின் தலையெழுத்தையே தீர்மானிக்கவல்ல இந்த இரண்டு விடயங்களிலும் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், தலைமைகளும் தடம்புரண்டு கொண்டிருப்பது வேடிக்கையானதாகிறது.

இதில் முதலாவதாக புதிய அரசியலமைப்பு விவகாரத்தினைப் மையப்படுத்திப் பார்க்கின்றபோது, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி சலனமின்றி, தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை உள்ளக்கிய வரைவினை புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் நிபுணர்குழுவிற்கு முதலாவதாக தமிழ்த் தரப்பாக அனுப்பி வைத்துள்ளது

தற்போதைய சூழலில் தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டத்தினை வழங்கினால் பலமானதாக இருக்கும் என்று பல்வேறு கருத்தாடல்கள் இருக்கையில் முன்னணியினர் அவசரப்பட்டுவிட்டார்கள் என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றார். ஆனாலும், ஏனைய தரப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதானால் முதலில் கொள்கையில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்கிறது முன்னணி. அதுமட்டுமன்றி ‘தேசத்தினை அங்கீகரிக்கும்’ கொள்கையை கைவிட்டவர்களுடன் எப்படி நாங்கள் கைகோர்ப்பது என்பதும் அத்தரப்பின் கேள்வியாக இருக்கின்றது.

மறுபக்கத்தில் மாவை.சேனாதிராஜா, விக்னேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, அனந்தி, ஆகிய தரப்புக்கள் அதாவது (தமிழரசுக்கட்சியின் மாவை.சேனாதிராஅணியும் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தரப்புக்களும்) ஒருங்கிணைந்து புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டை மேம்படுத்துவதற்கு ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக்குழுவிற்கு அரசியல் அனுபவத்தினை விட சட்டத்துறைசார்ந்த அனுபவம் இல்லையென்பதும், வடக்கு மாகாணசபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டங்களை மையப்படுத்தியதிலிருந்து மேம்பட்ட வரைவொன்றை தயாரிப்பதாகவும் இணக்கம் ஏற்பட்டது.

ஆனால் இன்னமும் அந்த இணக்கம் முதற்படியிலேயே உள்ளது.
அத்துடன், இந்த அணி, கிழக்கு மாகாண தமிழ்த் தேசியத் தரப்புக்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்தித்ததாக இல்லை. அங்கிருந்து எந்தவொரு தரப்பினையும் முன்மொழிவு வரைவினை தயாரிக்கும் பணியில் உள்ளீர்த்திருக்கவில்லை. அதுபற்றி புத்திஜீவிகள் சிலர் எடுத்துரைத்தபோதும் அதனை கருத்தில் எடுத்ததாக இல்லை.இதேநேரம், இந்த அணியில் உள்ள விக்னேஸ்வரன் தனது கட்சியான, தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் பிறிதாக ஒருவரைபினை தயாரித்து வருகின்றார். அவர் அதுபற்றி ஒருங்கிணைந்த தரப்புக்களிடத்தில் தெரிவித்தும் இருக்கின்றார். இறுதியாக தமது தரப்பினால் கையளிக்கும் வரைபில் தான் தயாரித்து வரும் வரைபில் உள்ள விடயங்களையும் உள்ளீர்க்க முடியும் என்றும் கூறியிருக்கின்றார்.

விக்னேஸ்வரனின் இந்த முயற்சி ஒரு முற்பாதுகாப்பு நடவடிக்கை என்று தான் எண்ணத்தோன்றுகின்றது. ஏனென்றால் கடந்த 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிவொன்றை இறுதி செய்திருக்கின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனகஈஸ்வரன், மற்றும் சுமந்திரன் ஆகியோர் கூட்டிணைந்து தயாரித்த அந்த வரைபினை பங்காளிக்கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அடுத்தவாரம் நிபுணர்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது
இதில் விசேடம் என்னவென்றால், ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளினால் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்காக போடப்பட்டுள்ள ஐவர் கொண்ட குழுவின் உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜா பங்கேற்றதும், கூட்டமைப்பு வரைவினை ஏற்று அங்கீகரித்ததும் தான்.

அதாவது மாவை.சேனாதிராஜா, கூட்டமைப்பு தாயரித்த அரசியலமைப்பு வரைவு முன்மொழிவுக்கும் அதற்கு வெளியில் தயாரிக்கப்படவுள்ள வரைவுக்கும் உறுப்பினராக இருக்கின்றார். மாவையின் இரண்டு தோணிப் பயணம் பெரும்பாலும் வெற்றியடைவதற்கு வாய்ப்புக்கள் அற்றநிலை தான் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் கூட்டமைப்பின் வரைவினை ஏற்றுக்கொண்டுள்ள மாவை தற்போது விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களை அதனை அங்கீகரிக்குமாறு வலியுறுத்த விளைந்தால் அவர்கள் நிச்சயமாக அதனை எதிர்த்தே நிற்பார்கள். இதனால் ஈற்றில் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’யின் பெயரால் விக்னேஸ்வரன் தலைமையில் அவர் தயாரிக்கும் வரைவே நிபுணத்துவக் குழுவிடத்திற்குச் செல்லும் வாய்புக்களே அதிகமாகியுள்ளன.

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைவினை தயாரிப்பதில் நிலைமை இவ்வாறிருக்க, மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்பில் இனஅழிப்புச் செய்த சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலைச் செய்வதற்காக புதிய பிரேரணையொன்றே கொண்டுவருவதற்கு அதிகளவு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே சிறிங்கா அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகள் காலஅவகாசம் வழங்கப்பட்டாகிவிட்டது. கடந்தஅரசாங்கத்திற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் இருந்த தேனிலவு அதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் தற்போதைய ராஜபக்ஷ சகோதரர்களின் அரசு ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டது.
எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவேற்றும் தீர்மானத்தினையும் அந்த அரசு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனை நிராகரிக்கவே திட்டமிட்டு வருகின்றது. அதற்காக சிறிலங்காவினுள்ளும், வெளியிலும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றார்கள். புலம்பெயர் அமைப்புக்கள் இரண்டு அடுத்துவரவுள்ள ஜெனிவா பிரேரணை தொடர்பில் தமிழ்த் தரப்பு செய்ய வேண்டிய உத்தேச முன்மொழிவுகளை குறிப்பிட்டு சுமந்திரனிடம் அனுப்பி அதற்கு ஏனை தரப்புக்களின் ஆதரவினையும் திரட்டுமாறு கோரியிருக்கின்றன.

எனினும் தான் அதற்கான பணியை முன்னெடுப்பதாகவும் தான் ஏற்கனவே வரைபினைத் தயாரித்துவிட்டதாகவும் அந்த வரைவிற்கு ஆதரவினை திரட்டுவதாகவும் பதிலளித்திருக்கிறார். இதனையடுத்து ஆவணமொன்றை விக்னேஸ்வரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால் அதில் மீண்டும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கும் வடிவிலேயே பரிந்துரைகள் காணப்பட்டிருக்கின்றன. இதனை அவதானித்த விக்கியும் கஜேந்திரகுமாரும் அதனை நிரகாரித்ததோடு உள்ளடக்கத்தையும் பகிரங்கப்படுத்தினர்.

இந்தச் செயற்பாடு ‘விஷமத்தனமான பிரசாரம்’ என்று சுமந்திரன் கூறிவிட்டு தன்னுடைய அடுத்த வேலைக்குச் சென்விட்டார். ஆனால் விக்னேஸ்வரன் விட்டு வைக்கவில்லை. நான் கற்பித்த சட்டக்கல்லூரியில் என்னிடம் படித்துவிட்டு என்னையே ஏமாற்றப் பார்க்கின்றீரா? என்று பகிரங்கமாகவே சுமந்திரனை கேட்டுவிட்டார்.

இதனால் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் சுமந்திரன் விக்கிக்கும், கஜேந்திரனுக்கும் வழங்கிய ஆவணம் தன்னுடையதல்ல என்று கையை விரித்துவிட்டார். இந்த இடத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், ஏனைய பங்காளிக்கட்சிகள் ஆகியவற்றிடம் ஜெனிவா சார்ந்த ஆவணத்தினை கையளிக்காது ஏன்? என்ற கேள்விஎ எழுக்கின்றது.
அவர்களும் தனித்துவ அரசியல் கட்சியைக் கொண்டவர்கள் அல்லவா. அத்தோடு ஆவணத்தினை ஏனைய தரப்பினருடன் பகிர்ந்த விடயத்தினை சுமந்திரன் சம்பந்தனுக்கு கூட தெரிவிக்கவில்லை. சம்பந்தனே ‘ஏன் அவர் ஆவணத்தினை பகிர்ந்தாரென்று எனக்கு தெரியாது’ என்று பகிரங்கமாகவே கூறிவிட்டார்.

இப்போது எல்லாப்பக்கத்தாலும் அம்பலமாகிவிட்டார் சுமந்திரன். ஆனால் இராஜதந்திர தரப்புக்களுடன் தன்னுடைய சந்திப்புக்களை நடத்துகிறார். அமெரிக்க தூதுவர், பிரித்தானிய உயர்ஸ்தானிகர், கனடிய உயர்ஸ்தானிகர், ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.
இந்த சந்திப்புக்கள் அனைத்தையும் தனியே தான் மேற்கொள்கின்றார். இதுபற்றி கூட்டமைப்பில் இருக்கும் எந்தவொரு தரப்பினரும் கேள்வி எழுப்புவதாக இல்லை. வெறுமனே ‘சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடாகாது’ என்று ஊடக அறிக்கையை வெளியிட்டு விட்டு அமைதியாக இருக்கின்றார்கள். இது அந்த தரப்பினருக்கு தமிழ் மக்கள் வழங்கிண ஆணையை கருத்தில் கொள்ளாமையை தான் காட்டிநிற்கிறது.

அதுமட்டுமன்றி, தற்போது சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் என்று மூன்று தரப்புக்கள் ஜெனிவா பிரேரணையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் முன்மொழிவுகளைச் செய்யவுள்ளன. சிலநேரங்களில் ரெலோவும், புளொட்டும் கூட தனியான முன்மொழிவுகளை அனுப்பி வைக்கலாம். தமிழரசுக்கட்சியின் சிறிதரன், சார்ள்ஸ் போன்றவர்கள் கூட சுமந்திரனின் விடயப்பரப்புடன் இணக்கத்திற்கு வரமுடியாத நிலைமை ஏற்படலாம்.

இத்தகைய பிளவுகளால் குழப்பங்களால் நெருக்கடிகளுக்கு உள்ளாகப்போவது என்னவோ நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழ்த் தரப்பு தான். அதேநேரம், ஒன்றுக்கு மேற்பட்ட முன்மொழிவுகள் வழங்கப்படுகின்றபோது எதனை கருத்தில் கொள்வதென்ற குழப்பம் ‘இராஜதந்திர’ தரப்புக்களுக்கு தற்போதே ஆரம்பித்தாகிவிட்டது.

ஆக, மொத்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கு மல்லுக்கட்டுவதற்கு அப்பால் தமிழ்த் தரப்புக்களின் குடுமிச்சண்டைகளால் பொறுப்புகூறலை செய்வதற்கான பரிந்துரைகள் நிச்சயம் மலினப்படுத்தப்பட்டு விடும் ஆபத்தே உள்ளது. இத்தகைய மோசமான விளைவுகள் ஏற்படுவது தடுக்கப்பட வேண்டியதொன்று. ஆனால் தாயகத்தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கு உரிய ‘மேய்பர்’ இல்லையே.

Print Friendly, PDF & Email