SHARE

தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளரின் வெற்றி!

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கான உதவிக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரி நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின் வெற்றியாக, இந்த விடயம் நாளை வியாழக்கிழமை (12) பிரித்தானிய பாராளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. 

பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கீத் குலசேகரத்தினால் அவர்களாலேயே இந்த கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் நெருக்கடியினால் அரச உதவித்தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை போல, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான உதவி கொடுப்பனவும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.

கொரோனோ தொற்று நெருக்குதலில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ளும் அகதிச் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு வாராந்த கொடுப்பனவை 20 பவுண்டினால் அதிகரிக்க வேண்டுமென அகதிகளுக்கான சித்திரவதையிலிருந்து விடுபடுதல் அமைப்பு (Freedom from Torture) உட்பட 50 இற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் கூட்டாக சேர்ந்து பிரித்தானியாவின் உள்துறைசெயலருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தனர்.

ஆயினும் அவர்களின் கோரிக்கைக்கு எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து திரு கீத் குலசேகரம் அவர்கள் இந்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தார். அவரின் கோரிக்கையை தற்போது பிரித்தானிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டு விவாதிக்க இருப்பது அவரின் முயற்சிக்கு கிடைத்த பெருவெற்றியாகும்.  

இந்த கையெழுத்து போராடத்தின் விளைவாக, பாராளுமன்ற உறுப்பினரான Rushanara Ali  அவர்களால் இப்பிரேரணை பாராளுமன்றில் முன்மொழியப்பட்டு, இது தொடர்பில் நாளை வியாழக்கிழமை (12/11/2020) பாராளுமன்றில் விவாதம் நடைபெற உள்ளதாகவும் அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கொடுப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் இந்த போராட்டத்தை ஆரம்பித்தவர் என்ற அடிப்படையில்  திரு கீத் குலசேகரம் அவர்களுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் இம்முயற்சியினால் அகதித்தஞ்சக்கோரிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள அதேவேளை அவரின் செயற்பாட்டிற்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email