Home Blog Page 333

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து புலம்பெயர் தமிழர்களுடன் பேசப் போகிறாராம் மகிந்த!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கொழும்பில் இந்தப் பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சாதகமான பதிலை அளித்ததை அடுத்து, இந்தப் பேச்சுக்களுக்கான ஆரம்பக் கட்டப்பணிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், நாட்டில் மோதல் நிலையும் பதற்றமும் தொடர்கிறது.

நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய- முப்பது ஆண்டுகால மோதலைப் போன்ற சூழல் மீண்டும் எழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுக்கள் விடுதலைப் புலிகள் போன்ற குழுக்கள் மீண்டும் தலையெழுப்பதை தவிர்ப்பதை அடிப்படையாக கொண்டே நடத்தப்படவுள்ளன.

இல்லாவிட்டால், சிறிலங்கா இன்னொரு தீவிரவாதப் பிரச்சினையை பத்தாண்டு காலத்தில் எதிர்கொள்ள நேரிடும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

60 அகதிகளை சிறிலங்காவுக்கு நாடு கடத்துகிறது பிரித்தானியா!

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 அகதிகளை, பிரித்தானியா வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள ஹார்மொன்ஸ்வோர்த், கோல்புறூக் தடுப்பு முகாம்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படும் அகதிகள் அங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படக் கூடிய, கொல்லப்படக் கூடிய ஆபத்துக் கூட உள்ளதால், அதனைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு பிரித்தானிய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது இந்தியாவின் பொறுப்பு – கூட்டமைப்பிடம் மன்மோகன்சிங் உறுதி!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பிற்பகல் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவுக்குப் பொறுப்பு உள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் அமைதியான சூழலில் கண்ணியமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து இந்தியா ஒரு போதும் பின்வாங்காது.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எமது முயற்சிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தொடர்ந்து பேச்சுக்களை நடத்தும்.” என்றும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஜெனிவா கூட்டத்தில் சிறிலங்கா நிலை குறித்த நான்கு அறிக்கைகள்!

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான நான்கு அறிக்கைகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குக் கிடைத்துள்ளது.

வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இந்த நான்கு அறிக்கைகளும் பேரவையினால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

30 அரசசார்பற்ற நிறுவனங்கள், சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்கா அரசாங்கம், மற்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆகியன தயாரித்த அறிக்கைகளே இவையாகும்.

இந்த நான்கு அறிக்கைகளும் ஜெனிவா கூட்டத்தில் ஆராயப்பட்டு, ஒரு அறிக்கையாகத் தயாரிக்கப்படும்.

இந்தப் பணியை இந்திய, பெனின், ஸ்பெய்ன் நாட்டுப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே வரும் 1ம் நாள் பூகோள கால மீளாய்வுக் கூட்ட விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்க சிறிலங்கா தயாராக உள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு இதற்காக ஜெனிவா செல்லவுள்ளது.

இலங்கைப் போர்: இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்தது – விகடனுக்கு நிருபமா ராவ் செவ்வி!

நிருபமா ராவ்… அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு அனுப்பும் ‘நட்புத் தோழி’. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிவரும் நிருபமா ராவுக்கு உலகின் ஆற்றல்மிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம் உண்டு. தமிழர் பிரச்னைகளில் நம்முடைய வெளியுறவுத்துறை அக்கறை காட்டுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரு வந்திருந்த‌ நிருபமா ராவைச் சந்தித்தேன்.

”பெங்களூரு காலேஜ்ல படிக்கும்போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இப்போ எல்லாம் மறந்துபோச்சு” என்றவர், எந்தப் பிரச்னைக்கும் நிதானமாக எளிய வார்த்தைகளில் லாவகமாகப் பதில் சொல்லித் ‘தப்பிக்கிறார்’.

”கெடுபிடியான டிப்ளமெட்டாகவே உங்களைப் பார்த்து வருகிறோம். உங்கள் இன்னொரு பக்கம் என்ன?”

”இந்தக் கேள்வி என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. இப்படி ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. புதுப் புது மனிதர்களையும் அவர்களின் கலாசாரங்களையும் பற்றித் தெரிந்து கொள்வது, புதிய இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வது தான் என் இதயத்துக்கு நெருக்கமான உலகம்.

ஆனால், இப்போது கடமைகளும் பொறுப்புகளும்தான் என் அடுத்த நொடியைக் கூடத் தீர்மானிப்பதால், வேறு எதையும் யோசிக்கக்கூட முடிவது இல்லை. நன்றாகக் கவிதை எழுதுவேன். ஷேக்ஸ்பியர் புத்தகங்களை எப்போதும் என் பையில் வைத்திருப்பேன். எப்போதேனும் நேரம் கிடைத்தால் புத்தகங்கள், கவிதை வாசிப்பு, பிளாக் எழுதுவது போன்றவை ஓரளவு என் ஏக்கத்தைச் சமாதானப்படுத்தும்.”

”அது என்ன… எந்த நாட்டுடன் பிரச்னை என்றாலும் இந்திய அரசாங்கம் உங்களையே பேச்சுவார்த்தைக்கு அனுப்புகிறது. நிருபமா ராவின் பலம் என்ன?”

”உலகின் அத்தனை பிரச்னைகளுக்கும் அறிவார்ந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதி காணமுடியும் என்ற என் அழுத்தமான நம்பிக்கையே காரணமாக இருக்கலாம்.”

”பேச்சுவார்த்தையின் மூலம் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்க முடியும் என்றால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான், சீனா ஆகியவை இந்தியாவுக்கு ஏன் விரோதமாகவே இருக்கின்றன?’

”அது உண்மைதான். அதற்குப் பல காரணங்கள். முக்கியமானதாக நான் நினைப்பது அந்தந்த நாட்டு உளவுத்துறைகளின் தலையீடுதான். அதனை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நல்ல முன்னேற்றம் கண்டுவந்த இந்திய – பாகிஸ்தான் நட்புறவில் 26/11 மும்பைத் தாக்குதல் சம்பவம் பெரும் தாக்கத்தையும் எதிர்பாராத அதிர்வையும் ஏற்படுத்தியது. பாகிஸ்தானோ, சீனாவோ யாருடனும் இந்தியா நட்பு பாராட்டத்தான் விரும்புகிறது. ஏனென்றால், நமது தேசம் காந்திய வழியிலேயே பயணிக்க விரும்புகிறது.”

”எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் உங்களுக்குப் பிடித்த ஒபாமாவே ஜெயிப்பாரா?”

”ஹா… ஹா… பெர்சனலாக பராக் ஒபாமாவை எனக்குப் பிடிக்கும். மற்றவர்களிடம் எப்படிப் பணிவுடன் பழகுவது என்பதை அவரிடம் கற்றுக்கொள்ளலாம். மற்றபடி அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக நான் கருத்து கூறுவது சரியல்ல.”

”விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவி செய்து, தற்போது இந்தியாவுக்குத் தெற்கேயும் சீனா வலுவாகக் காலூன்றி இருப்பது நமக்குப் பெரிய ஆபத்தாயிற்றே?”

”இந்தியாவைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பாதுகாப்புத்துறையும் வெளியுறவு அமைச்சகமும் 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. இலங்கையின் வட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்கு முதன்முதலாகச் சென்று வந்த வெளியுறவுச் செயலர் என்ற முறையில் சொல்கிறேன். அங்கே சீனாவின் ஆதிக்கம் இல்லை. சாலை போடுவதில் தொடங்கி வீடு கட்டித் தருவது வரை 500 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை இந்தியாவே செய்து கொண்டிருக்கிறது.”

”வெளியுறவுத் துறைச் செயலராக இலங்கை சென்று தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். ஆனால், இன்னமும் மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கைக் கடற்படை நிறுத்தவில்லையே?”

”தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. 2009-10 காலகட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலர் சி.ஆர்.ஜெயசிங்க உள்ளிட்டோருடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

‘இந்தியக் கடல் எல்லையில் இருந்து சர்வதேசக் கடல் எல்லை மிகவும் அருகில் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் அமைந்திருப்பதே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அதற்காகச் சட்டப்படி வழக்குகளைப் பதியலாம். எக்காரணம் கொண்டும் தாக்கக் கூடாது’ என்று இந்திய அரசின் சார்பாகவும் ‘இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டை மடிப்பு வலை, விசைப் படகுகள் ஆகியவை இலங்கையின் வட பகுதியில் நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் பெரும்பாலான தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது என்பதோடு இலங்கையின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது’ என்ற இலங்கை அரசின் வாதத்தை முன்வைத்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஆனால், ஒரு முடிவுக்கு வராமலேயே அந்தப் பேச்சுவார்த்தை பாதியில் நின்று விட்டது. தமிழக மீனவர்களின் சிக்கல்களையும் இல‌ங்கை மீனவர்களின் சிக்கல்களையும் தெளிவாகப் புரிந்து கொண்டு இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவ அமைப்புகளுடன் பேசி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வடிவமைத்துக் கையெழுத்திட்டால் தான் தீர்வு காணமுடியும். இப்போது போர் முடிந்து இலங்கையில் அமைதி நிலவுவதால், அதற்கான சாத்தியங்கள் அதிகம்.”

”2009 இலங்கைப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என ஐ.நா. சபையே சொல்கிறது. போர் நடந்தபோது அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், போரில் இலங்கைக்கு இந்திய‌ அரசு உதவி செய்ததும் தார்மீக ரீதியில் சரிதானா?”

(கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பேசத் துவங்குகிறார்) ”முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை என்பது இந்தியாவின் நட்பு நாடு. அதனால், அவர்களுக்கு இந்தியா சில உதவிகள் செய்ததாக அறிகிறேன். அண்டை நாடு என்ற முறையில் இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை கூற முடியுமே தவிர, ஆணையிட முடியாது.

‘விடுதலைப் புலிகள் உடனான போரில் அப்பாவிப் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்’ என இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வேண்டுகோள் வைத்தனர். நானும் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர மேனனும் பல முறை அலரி மாளிகையில் இலங்கை அதிபரை இது தொடர்பாகச் சந்தித்துப் பேசினோம்.

‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போர் நடக்கிறது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு என்ன கோபம்? விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்’ என ஒட்டுமொத்த ராஜபக்ச அமைச்சரவையே சொன்னது. அதனை இந்தியாவும் நம்பியது.”

”அப்படியென்றால், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான க‌ர்ப்பிணித் தாய்மார்களையும் பச்சிளங் குழந்தைகளையும்கூட விடுதலைப் புலிகள் என நம்பச் சொல்கிறீர்களா?”

(முகம் மாறுகிறது) ”நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என நினைக்கிறேன். தமிழர் என்ற உணர்வின் காரணமாகக் கேட்கிறீர்கள். இலங்கைப் போர் முற்றிலும் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்த ஒன்று. எனக்கு விமானத்துக்கு நேரம் ஆகிவிட்டது. பை… பை…!” (என்றபடி எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்)

”ஒரு பத்திரிகையாளனாக அல்ல… ஒரு மனிதனாகக் கேட்கிறேன். வெளியுறவுத்துறைச் செயலராக இல்லாமல் ஒரு பெண்ணாக நீங்கள் பதில் சொல்லலாமே மேடம்?”

”மரணம்… எல்லாவித‌ சமாதானத்துக்கும் சமாளிப்புக்கும் அப்பாற்பட்டது என்பதை இந்த உலகம் உணர வேண்டும். போரின்போது அப்பாவிகள் பாதிக்கப்படும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்!”

– சொல்லிக்கொண்டே காரில் ஏறிச் சென்றுவிட்டார் நிருபமா ராவ்.

விரைவாக அரசியல்தீர்வு காண வேண்டும் – சிறிலங்காவுக்கு ஐ.நா பொதுச்செயலர் மீண்டும் அழுத்தம்!

சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமான பிரச்சினைக்கு, விரைவாக அரசியல்தீர்வு காணவேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை நியுயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே, சிறிலங்கா அரசாங்கம் விரைவாக அரசியல்தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

முழுமையான பொறுப்புக்கூறலுக்கான சட்டக்கடமைகளை நிறைவேற்றத் தேவையான, நம்பகமான எல்லா கூடுதல் நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், எல்லா சிறிலங்கர்களுக்கும் நீதியையும், சமத்துவத்தையும், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த சுதந்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் மகிந்த சமரசிங்கவுடன், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்னவும், ஐ.நா பொதுச்செயலருடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையின் நியுயோர்க் பிரதிநிதி ஐவன்

தனிநாடாகப் பிரிகிறது ஸ்கொட்லாந்து – கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான உடன்பாடு கைச்சாத்து!

பிரித்தானியாவுடன் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இணைந்திருந்த ஸ்கொட்லாந்தை தனிநாடாகப் பிரிப்பது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடொன்று திங்களன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து நாட்டின் தலைவர் அலெக்ஸ் சல்மன்ட் தலைமையில் ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்கொட்லாந்து இறையாண்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஐரோப்பிய சங்கத்திற்குள் தாம் தனித்து இயங்கும் அமைப்புக்கள் எனக் கருதும் கற்றலோனியா மற்றும் பிளண்டேஸ் போன்ற பிரிவினை கோரி நிற்கும் ஐரோப்பிய சமூகங்களும் தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஸ்கொட்லாந்து மக்கள் தாம் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதா இல்லையா என்பதை வெளிப்படுத்தும் கருத்து வாக்கெடுப்பை 2014ல் நடாத்துவது
தொடர்பான உடன்பாடொன்றில் பிரித்தானியாப் பிரதமர் டேவிட் கமரூனுடன் ஸ்கொட்லாந்து தலைநகரான எடின்பேர்க்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘இது ஸ்கொட்லாந்து மக்களைப் பொறுத்தளவில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நாளாகும்’ என சல்மன்ட் தெரிவித்துள்ளார். இதற்கான பரப்புரையில் தாம் வெற்றிபெறுவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடகடலில் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாத 20 பில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் உள்ளன. இவை பிரித்தானியாவுக்கா அல்லது ஸ்கொட்லாந்து பிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்துக்குச் சொந்தமா என்பது தற்போது மிகப் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது.

அத்துடன் ஸ்கொட்லாந்தில் தற்போது காணப்படும் பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கித் தொகுதியின் எதிர்காலம் தொடர்பாக பிரித்தானியா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. ஸ்கொட்லாந்து சுதந்திரமடைந்ததன் பின்னர் அங்கே அணுவாயுதங்களுக்கு இடமில்லை என சல்மன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நீர்மூழ்கித் தொகுதியை வேறிடம் நகர்த்துவதானது செலவு மிக்கதும், நேர விரயமானதும் ஆகும்.

ஸ்கொட்லாந்து மக்கள் கருத்துவாக்கெடுப்பில் வழங்கும் வாக்குகளைப் பொறுத்தே இதற்கு சுதந்திரம் வழங்க முடியும் என கமரூன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான ஸ்கொட்லாந்து மக்கள் தாம் பிரிந்து செல்வதற்கு ஆதரவளிக்கவில்லை. அதாவது 34 சதவீதமான மக்களே ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவதை ஆதரிப்பதாகவும், ஸ்கொட்லாந்து சுதந்திரமடைந்தால் இதன் பொருளாதாரம் பாதிக்கப்படும் என 55 சதவீதமான மக்கள் கருதுவதை தொலைக்காட்சி சேவை ஒன்றினால்  நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு காண்பிக்கிறது.

16 வயது இளையோர் தொடக்கம் ஏனையோர் வாக்களிக்க முடியும் என்பதும் இவ் உடன்பாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் வாக்காளர்கள் தாம் சுதந்திர தேசம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கே அதிகம் விரும்புவர் என சல்மன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘நான் யுத்தத்தில் பிரித்தானியா இராணுவத்தின் கீழ் பணியாற்றியுள்ளேன். இதனால் என்னைப் பொறுத்தளவில் பிரித்தானியாக் குடிமகனாக வாழ்வதையே நான் அதிகம் விரும்புகிறேன்’ என 24 வயதான முறே பூல் தெரிவித்துள்ளார். ‘ஆனால் எனது நண்பர்களில் சிலர் இங்கிலாந்தை விரும்பவில்லை. அவர்கள் ஸ்கொட்லாந்து குடிமக்களாக வாழவே விரும்புகிறார்கள்’ எனவும் முறே பூல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்து செல்வது முட்டாள்தனமானதாகும்’ என இளம் பணியாளரான ஜெமி சுமித் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவுடன் இணைந்திருந்தால், பிரித்தானியா மேலும் பலமான நாடாகத் திகழும் என கருத்து வாக்கெடுப்பை நடாத்துவதற்கான உடன்பாட்டில் கைச்சாத்திட்ட பின்னர் கமரூன் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘ஸ்கொட்லாந்தைப் பொறுத்தளவில் பிரித்தானியாவுடன் இணைந்திருத்தல் சிறப்பானதாகும் என நான் நம்புகிறேன். ஆனால் ஸ்காட்லாந்துடன் பிரித்தானியா இணைந்திருப்பதானது பிரித்தானியாவுக்கு நலன் பயக்கும் என்பது முக்கியமானதாகும். இந்தக் குடும்பத்தை ஒன்றாக இணைப்பதற்காகவே நான் வாதாடுவேன்’ என கமரூன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்து ஏற்கனவே தனக்கான தேசியக் கொடி, சட்ட முறைமை, விளையாட்டுக் குழுக்கள் மற்றும் ஏனைய தேசிய அடையாளம் என்பவற்றை உருவாக்கிவிட்டது.

றொபேற்றின் தலைமையில் என்ற Bannockburn களத்தில் போர் புரிந்த ஸ்கொட்லாந்து வீரர்கள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து வெற்றி கொண்ட 700வது நிறைவு ஆண்டான 2014லேயே கருத்து வாக்கெடுப்பும் நடாத்தப்படவுள்ளது.

தற்போது கருத்து வாக்கெடுப்பை மேற்கொள்வதற்கான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இதில் யார் வாக்களிப்பது, இது நடாத்தப்படவுள்ள திகதி, சட்ட ஒழுங்குகள் போன்றவற்றை வரையவுள்ளது.

இக்கருத்து வாக்கெடுப்பானது ‘ஆம் அல்லது இல்லை’ என்ற இரு நேரடி விடைகளைப் பெறக் கூடியதாக மட்டுமே ஏற்படுத்தப்படும் என பிரித்தானியாவால் முன்வைக்கப்பட்ட முக்கிய நிபந்தனையை சல்மன்ட் ஏற்றுக் கொண்டுள்ளார்.

வடகடலில் காணப்படும் எண்ணெய் வளம் மூலமான பெருமளவு வருவாயை ஸ்கொட்லாந்து ஈட்டிக்கொள்ள முடியும் என்பதால் இது எதிர்காலத்தில் வளம்மிக்க நாடாகக் காணப்படும் என முன்னாள் எண்ணெய் வள பொருளியல் ஆய்வாளர் ஒருவர் நம்புகின்றார்.

தற்போது பிரித்தானிய அரசாங்கத்தால் ஸ்கொட்லாந்தவர்களுக்கு வழங்கப்படும் 48 பில்லியன் டொலர்கள் மானியமானது நிறுத்தப்பட்டால் ஸ்கொட்லாந்து மக்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்குவர் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய அரபுக் குடியரசில் பிடிபட்டது சிறிலங்காவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் – கோத்தாவின் ஆயுத வர்த்தகம் அம்பலம்!

சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது.

கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் Avant Garde Maritime Services என்ற நிறுவனமே இயக்கி வருகிறது.

இந்த நிறுவனம் சிறிலங்காவுக்குத் தெற்கிலும், செங்கடலிலும் மேலும் இரு மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை கொண்டுள்ளது.

இந்த மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் உள்ள தன்னியக்க துப்பாக்கிகள், வெடிபொருட்கள், உடற்கவசங்கள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பாதுகாப்பு நிறுவனங்கள் வாடகைக்குப் பெற முடியும் என்று Avant Garde நிறுவனத்தின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, யேமன் போன்ற நாடுகளில் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நிறுவனங்களின் ஆயுதங்கள், வெடிபொருட்களை இந்தக் கப்பலில் நாளொன்றுக்கு 25 டொலர் வாடகைக் கட்டணம் செலுத்தி பாதுகாக்கவும் முடியும்.

சிந்துபாத் கப்பலில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை வெளியிட Avant Garde நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி மறுத்து விட்டபோதும், அந்த ஆயுதங்கள் சிறிலங்கா அரசுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“சிந்துபாத் கப்பலில் இருந்த எவரும் கைது செய்யப்படவில்லை. கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை மட்டும் நடத்தப்பட்டுள்ளது.

தடுப்புக் கைதிகள் போல அவர்கள் நடத்தப்படவில்லை.

கப்பல் சோதனையிடப்பட்ட போது, சிறிலங்கா அரசுடன் இணைந்த கூட்டு முயற்சி என்ற நம்பகத்தன்மையை நிரூபித்து விட்டோம்.

5 – 7 நாட்களுக்குப் பின்னர் கப்பல் விடுவிக்கப்பட்டு விட்டது.” என்றார் அவர்.

இந்தக் கப்பல் தொடர்பாக விசாரிக்கப்பட்டதை ஐக்கிய அரசு குடியரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் கப்பல் கைப்பபற்றப்பட்ட புஜாய்ரா பகுதியின் சட்டநடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்கள் தவறான கைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்துலக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, மேஜர் சேனாதிபதி,  “நாம் மிகவும் உயர்ந்த பாதுகாப்பை அளித்துள்ளோம்.

எந்தநேரத்திலும், சிறிலங்காவின் ரக்ன ஆரக்சக லங்கா நிறுவனத்தின் கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

ரக்ன ஆரக்சக சேனா பாதுகாப்பு நிறுவனம், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால், உருவாக்கப்பட்டு நடத்தப்படுவதாகும்.

இது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்ற போதும், கோத்தாபய ராஜபக்சவே அதனை நிர்வகித்து வருகிறார்.

அத்துடன், தரையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினரையும், கடல் பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்களையும் ஈடுபடுத்தி பெருமளவு வருமானத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களையும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபயவே நடத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சிறிலங்கா படையினருக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ராஜபக்ச அனைத்துலக அளவில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது – கொக்கரிக்கிறது சிறிலங்கா!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து, இந்தியாவிடம் போய் முறையிட்டு எந்தப் பயனும் இல்லை, இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்று கொக்கரித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடெல்லிக்குச் சென்று இந்திய அரசியல் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியாவிற்கு சென்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு இந்தியாவிடம் கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளிடம் தீர்வுக்காக செல்வதைக் கைவிட்டு, ௭ம்முடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

இல்லையென்றால், அரசியல் தீர்வு ௭ந்தக்காலத்திலும் சாத்தியமற்றதாகி விடும்.

அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கதவுகள் திறந்தே உள்ளன.

இதில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.

இந்தியாவிடம் தீர்விற்காக கையேந்துவதால் ௭வ்விதமான பலனும் கிடைக்கப் போவதில்லை.

இந்தியாவால் எம்மீது ௭ந்த நடவடிக்கையையும் ௭டுக்க முடியாது.

ஏனென்றால், சிறிலங்கா ஒரு சுதந்திரமான இறைமையுள்ள நாடு.

இங்கு மக்களின் ஆணையின் பேரில் ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கமே உள்ளது.

எமது மக்களின் பிரச்சினைகளை ௭வ்வாறு தீர்க்க வேண்டும் என்று எமது நாட்டு அரசுக்குத் தெரியும்.

இதில் ஏனைய நாடுகளால் தலையிட முடியாது. இதனை நாம் பலமுறை கூறியுள்ளோம்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான்!

கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து இந்தியாவின் இராணுவ இலக்குகள் தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான இராஜதந்திரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.

ஏசியன் ஏஜ் ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அமீர் சுபைர் சித்திக் என்ற இராஜதந்திரி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து இந்தியா தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்தார்.

இவரால் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐக்கு உளவு பார்க்கும் முகவராக உள்வாங்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்காய ஏற்றுமதியாளரான தமீம் அன்சாரி திருச்சியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருந்தனர்.

இந்தநிலையிலேயே. குற்றச்சாட்டுக்கு உள்ளான பாகிஸ்தான் இராஜதந்திரி இஸ்லாமாபாத்திற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு அமைச்சை கைகழுவ வேண்டும் – ஊவா முதல்வர் சசீந்திர ராஜபக்ச ஆலோசனை!

போர் முடிந்து மூன்றாண்டுகளாகி விட்ட நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை வேறு எவரிடமாவது ஒப்படைத்து விடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் ஊவா மாகாண முதல்வர் சசீந்திர ராஜபக்ச.

சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரும், சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் மகனான சசீந்திர ராஜபக்ச, வெலிமடவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே, பகிரங்கமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முக்கியமான இந்தத் தருணத்தில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கல்வி, உயர்கல்வி அமைச்சை தன்வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இப்போது போர் முடிந்து விட்டது. பெரும்பாலான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் மேலும் துறைமுகங்களை அமைப்பதற்கும் இடமில்லை.

எனவே, பாதுகாப்பு அமைச்சு, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சை வேறு எவரிடமாகவது ஒப்படைத்து விட்டு கல்வி சம்பந்தமான அமைச்சுக்களை அவர் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கல்வி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல, ஆறு தடவைகள் யோசிக்க வேண்டும்.

ஏனென்றால் அந்தமுடிவு அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

இப்போது பெரும்பாலான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதில் ஏன் நேரத்தை செலவிடவேண்டும்?

இன்னொரு பக்கத்தில் வேறு துறைமுகங்களை அமைப்பதற்கும் நாட்டில் இடமில்லை.

இந்த அமைச்சுக்களை வைத்துக் கொண்டிருக்காமல், கல்வி அமைச்சின் மீது சிறிலங்கா அதிபர் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் அவர் மேலும் ஆலோசனை கூறியுள்ளார்.

மழை பெய்யவும் சீனாவின் உதவியை நாடுகிறது சிறிலங்கா!

எதிர்காலத்தில் வறட்சியை சமாளிக்க, செயற்கை மழையைப் பெய்விப்பதற்கு சீனாவின் உதவியை நாட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொக்கலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“வறட்சி என்பது எமக்குப் புதியது அல்ல. முன்னைய சந்தர்ப்பங்களில் வறட்சியை சமாளிக்க நாம் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.

ஆனால் இப்போது வறட்சியை எதிர்கொள்ள முன்கூட்டியே நாம் தயாராக வேண்டும்.

அதற்கு முன்னதாகவே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை ஆழப்படுத்தல் அதில் ஒன்று.

அதைவிட எதிர்காலங்களில்,வறட்சி ஏற்படும் போது செயற்கை மழையை பெய்விக்க, சீனாவின் தொழில்நுட்ப உதவியைப் பெறவும் சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

error: Content is protected !!