SHARE

பிரித்தானியாவுடன் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இணைந்திருந்த ஸ்கொட்லாந்தை தனிநாடாகப் பிரிப்பது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடொன்று திங்களன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து நாட்டின் தலைவர் அலெக்ஸ் சல்மன்ட் தலைமையில் ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்கொட்லாந்து இறையாண்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஐரோப்பிய சங்கத்திற்குள் தாம் தனித்து இயங்கும் அமைப்புக்கள் எனக் கருதும் கற்றலோனியா மற்றும் பிளண்டேஸ் போன்ற பிரிவினை கோரி நிற்கும் ஐரோப்பிய சமூகங்களும் தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஸ்கொட்லாந்து மக்கள் தாம் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதா இல்லையா என்பதை வெளிப்படுத்தும் கருத்து வாக்கெடுப்பை 2014ல் நடாத்துவது
தொடர்பான உடன்பாடொன்றில் பிரித்தானியாப் பிரதமர் டேவிட் கமரூனுடன் ஸ்கொட்லாந்து தலைநகரான எடின்பேர்க்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘இது ஸ்கொட்லாந்து மக்களைப் பொறுத்தளவில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நாளாகும்’ என சல்மன்ட் தெரிவித்துள்ளார். இதற்கான பரப்புரையில் தாம் வெற்றிபெறுவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடகடலில் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாத 20 பில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் உள்ளன. இவை பிரித்தானியாவுக்கா அல்லது ஸ்கொட்லாந்து பிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்துக்குச் சொந்தமா என்பது தற்போது மிகப் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது.

அத்துடன் ஸ்கொட்லாந்தில் தற்போது காணப்படும் பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கித் தொகுதியின் எதிர்காலம் தொடர்பாக பிரித்தானியா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. ஸ்கொட்லாந்து சுதந்திரமடைந்ததன் பின்னர் அங்கே அணுவாயுதங்களுக்கு இடமில்லை என சல்மன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நீர்மூழ்கித் தொகுதியை வேறிடம் நகர்த்துவதானது செலவு மிக்கதும், நேர விரயமானதும் ஆகும்.

ஸ்கொட்லாந்து மக்கள் கருத்துவாக்கெடுப்பில் வழங்கும் வாக்குகளைப் பொறுத்தே இதற்கு சுதந்திரம் வழங்க முடியும் என கமரூன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான ஸ்கொட்லாந்து மக்கள் தாம் பிரிந்து செல்வதற்கு ஆதரவளிக்கவில்லை. அதாவது 34 சதவீதமான மக்களே ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவதை ஆதரிப்பதாகவும், ஸ்கொட்லாந்து சுதந்திரமடைந்தால் இதன் பொருளாதாரம் பாதிக்கப்படும் என 55 சதவீதமான மக்கள் கருதுவதை தொலைக்காட்சி சேவை ஒன்றினால்  நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு காண்பிக்கிறது.

16 வயது இளையோர் தொடக்கம் ஏனையோர் வாக்களிக்க முடியும் என்பதும் இவ் உடன்பாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் வாக்காளர்கள் தாம் சுதந்திர தேசம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கே அதிகம் விரும்புவர் என சல்மன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘நான் யுத்தத்தில் பிரித்தானியா இராணுவத்தின் கீழ் பணியாற்றியுள்ளேன். இதனால் என்னைப் பொறுத்தளவில் பிரித்தானியாக் குடிமகனாக வாழ்வதையே நான் அதிகம் விரும்புகிறேன்’ என 24 வயதான முறே பூல் தெரிவித்துள்ளார். ‘ஆனால் எனது நண்பர்களில் சிலர் இங்கிலாந்தை விரும்பவில்லை. அவர்கள் ஸ்கொட்லாந்து குடிமக்களாக வாழவே விரும்புகிறார்கள்’ எனவும் முறே பூல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்து செல்வது முட்டாள்தனமானதாகும்’ என இளம் பணியாளரான ஜெமி சுமித் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவுடன் இணைந்திருந்தால், பிரித்தானியா மேலும் பலமான நாடாகத் திகழும் என கருத்து வாக்கெடுப்பை நடாத்துவதற்கான உடன்பாட்டில் கைச்சாத்திட்ட பின்னர் கமரூன் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘ஸ்கொட்லாந்தைப் பொறுத்தளவில் பிரித்தானியாவுடன் இணைந்திருத்தல் சிறப்பானதாகும் என நான் நம்புகிறேன். ஆனால் ஸ்காட்லாந்துடன் பிரித்தானியா இணைந்திருப்பதானது பிரித்தானியாவுக்கு நலன் பயக்கும் என்பது முக்கியமானதாகும். இந்தக் குடும்பத்தை ஒன்றாக இணைப்பதற்காகவே நான் வாதாடுவேன்’ என கமரூன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்து ஏற்கனவே தனக்கான தேசியக் கொடி, சட்ட முறைமை, விளையாட்டுக் குழுக்கள் மற்றும் ஏனைய தேசிய அடையாளம் என்பவற்றை உருவாக்கிவிட்டது.

றொபேற்றின் தலைமையில் என்ற Bannockburn களத்தில் போர் புரிந்த ஸ்கொட்லாந்து வீரர்கள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து வெற்றி கொண்ட 700வது நிறைவு ஆண்டான 2014லேயே கருத்து வாக்கெடுப்பும் நடாத்தப்படவுள்ளது.

தற்போது கருத்து வாக்கெடுப்பை மேற்கொள்வதற்கான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இதில் யார் வாக்களிப்பது, இது நடாத்தப்படவுள்ள திகதி, சட்ட ஒழுங்குகள் போன்றவற்றை வரையவுள்ளது.

இக்கருத்து வாக்கெடுப்பானது ‘ஆம் அல்லது இல்லை’ என்ற இரு நேரடி விடைகளைப் பெறக் கூடியதாக மட்டுமே ஏற்படுத்தப்படும் என பிரித்தானியாவால் முன்வைக்கப்பட்ட முக்கிய நிபந்தனையை சல்மன்ட் ஏற்றுக் கொண்டுள்ளார்.

வடகடலில் காணப்படும் எண்ணெய் வளம் மூலமான பெருமளவு வருவாயை ஸ்கொட்லாந்து ஈட்டிக்கொள்ள முடியும் என்பதால் இது எதிர்காலத்தில் வளம்மிக்க நாடாகக் காணப்படும் என முன்னாள் எண்ணெய் வள பொருளியல் ஆய்வாளர் ஒருவர் நம்புகின்றார்.

தற்போது பிரித்தானிய அரசாங்கத்தால் ஸ்கொட்லாந்தவர்களுக்கு வழங்கப்படும் 48 பில்லியன் டொலர்கள் மானியமானது நிறுத்தப்பட்டால் ஸ்கொட்லாந்து மக்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்குவர் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

Print Friendly, PDF & Email