Home Blog Page 272

மீனவர்கள் வெளியேற்றப்படவில்லை

image_pdfPRINT

யாழ்.வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனிசொய்ஷா உத்தரவிட்டிருந்தபோதும், குறித்த வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. அவர்கள்  தொடர்ந்தும் தங்கியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த 21ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த மத்திய கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் கடற்றொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்  சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சரை  தனியே சந்தித்து வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களால் தாம் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து கூறியதுடன், அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி கேட்டிருந்தனர்.

இதனடிப்படையில் மேற்படி வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும்படி மத்திய கடற்றொழில் அமைச்சர் கடற்படை, கடற்றொழில் நீரியல்வளத்துறைத்திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவு வழங்கப் பட்டு 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அடாத்தாக தங்கியுள்ள வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. என வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 18ம் திகதி வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் சட்டத்திற்கு மாறாக இரவில் ஒளிபாய்ச்சி கடலட் டை பிடித்துக் கொண்டிருந்த 81 வெளிமாவட்ட மீனவர்களையும், 28 படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் தலையீட்டினால் சட்டத் திற்கு மாறாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் வெளிமாவட்ட மீனவர்களை  வெளியேற்றக்கோரி ஜனாதிபதி வருகையின்போது கறுப்பு கொடி போராட்டத்தை நடத்துவதற்கு மீனவர்கள் திட்டமிட்டமிட்டிருந்த நிலையில் 21ம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சர் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 நாட்களாகும்  நிலையில் எந்தவொரு மீனவரும் வெளியேற்றப்படவில்லை. என்பதுடன் அமைச்சரின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான சமிக்ஞை கூட வெளிக்கா ட்டப்படவில்லை. ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கில் மத்திய கடற்றொழில் அமைச்சர் இந்த உத்தரவை வழங்கினாரா? என தமக்கு சந்தேக எழும்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்

image_pdfPRINT

திருமதி புவனேஸ்வரி இராமகிருஷ்ணா

(SLEAS-1, முன்னாள் பணிப்பாளர், கல்வி அமைச்சு கொழும்பு, முன்னாள் விரிவுரையாளர்- ஆசிரிய பயிற்சி கல்லூரி கோப்பாய் & பலாலி)

பிறப்பு : 1 April 1942                                                       இறப்பு : 20 August 2018


யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராமகிருஷ்ணா அவர்கள் 20-08-2018 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்ரமணியம், ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரிமணியம், அன்னபூரணி தம்பதிகளின் நேசமிகு மருமகளும்

காலஞ்சென்ற இராமகிருஷ்ணா(முன்னாள் சிரேஷ்ட நிறைவேற்று நிர்வாக அதிகாரி, பிரவுன் அண்ட் கோ- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும் புவிராம் அவர்களின் ஆருயிர் தாயாரும், சிந்துஜா அவர்களின் ஆசை மாமியும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் ஜெகதீசன்(கனடா) ஆகியோரின் அருமை சகோதரியும்

காலஞ்சென்றவர்களான செந்தில்வேல்ராஜா, கதிர்காமத்தம்பி மற்றும் திருமலர், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணதாய், விஜயலஷ்மி மற்றும் சிவகாந்தி, காலஞ்சென்றவர்களான ஜெயலஷ்மி, துரையப்பா மற்றும் ஆனந்தலஷ்மி ஆகியோரின் பிரியமான மைத்துனியும்,

சிவராஜா மஹாலஷ்மி(உசன் மிருசுவில்) தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
23 Alexandra Ave,
Harrow HA2 8PQ,
UK.

தகவல்

குடும்பத்தினர்

மாணவி றெஜினா கொலை வழக்கு; சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு

image_pdfPRINT

“படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக இந்த நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தவரின் மகளான சிறுமி ஒருவர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதனால் இந்த கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அதுதொடர்பில் அந்தச் சிறுமியை நீதிமன்றில் முற்படுத்தி அவரிடம் சாட்சியம் பெறப்படவேண்டும்.அதன்மூலமே இந்த வழக்கின் சரியான போக்கை உறுதிப்படுத்த முடியும். அத்துடன், குற்றவாளி எவராவது வெளியில் இருந்தால் அவரைக் கைது செய்ய முடியும்”

இவ்வாறு பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் மன்றுரைத்தார்.

அத்துடன், இரண்டாவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுதாகரனும் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டி மன்றுரைத்தார்.

பாதிக்கப்பட்டோர் சார்பான விண்ணப்பதை ஏற்ற மல்லாகம் நீதிவான் நீதிமன்று,  சம்பந்தப்பட்ட சிறுமியையும் வழக்கின் மற்றொரு சாட்சியான சிறுவனையும் வரும் 4ஆம் திகதி மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

அன்றைய தினம்வரை சந்தேகநபர்கள் 3 பேரினதும் விளக்கமறியல் நீதிமன்றால் நீடிக்கப்பட்டது.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த ஜூன் 25ஆம் திகதி  திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் வழக்கு இன்று (21) செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு வந்தது.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.  வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணை அறிக்கையை மன்றில் முன்வைத்தனர். இதனை அடுத்தே நீதிமன்று மேற்படி உத்தரவுகளை வழங்கியது.

யாழ். நகரில் குப்பை கொட்டிய ஐவருக்கு 5 ஆயிரம் தண்டம்

image_pdfPRINT

யாழ். மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர வீதி ஓரங்களில் குப்பை கொட்டியதாக 5 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் தனித்தனியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னதுரை சதீஸ்தரன் முன்னிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் 5 பேரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.

குடியிருப்பாளர்கள் ஐவரையும் எச்சரித்த நீதிவான், தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து அவர்களை விடுத்தார்.

இதேவேளை, டெங்கு நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவாக குடியிருப்பை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால், குடியிருப்பாளர்கள் மூவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மூவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களையும் எச்சரித்த நீதிமன்று, தலா ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து விடுவித்தது.

சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல்

image_pdfPRINT

பிரித்தானியாவிடம் இருந்து 1948ம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக் கொண்ட இலங்கையின் அரசியல் யாப்பானது ஒற்றையாட்சி முறையை அடிப்படையாக கொண்ட அரசியல் யாப்பாகவே காணப்பட்டது. அக்காலப்பகுதியில் சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்தமையால் “நாம் இலங்கையர்” என்ற கருப்பொருளே வலுப்பெற்றிருந்தது.

காலாணித்துவம் காலத்தில் இருந்தே தமிழர்கள் கல்விமான்கள் ஆகவும் அரசின் முக்கிய பொறுப்புக்களில் உயர் பதவி வகிப்பவர்கள் ஆகவும் மற்றும் வர்த்தகர்கள் ஆகவும் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்து வந்தார்கள்.
இது சிங்களவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை செலுத்தியது. இதனால் சுதந்திரம் அடைந்து ஒரு தசாப்த காலத்திலேயே தமிழர்கள் மீது 1957 இல் இன கலவரம் ஒன்று நிகழ்ந்தது.

முன்னைய காலங்களில் இருந்து வந்த கசப்பான அநுபவங்களினாலும் இனக் கலவரத்தினாலும் அச்சம் அடைந்த தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் சமஸ்டி முறையிலான ஒரு அரசியல் யாப்பு முறையை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார். அதன் அடிப்படையில் 1957இல் இலங்கை பிரதமர் பண்டார நாயக்கவுடனும், 1965இல் டட்லி சேனநாயக்கவுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தார். இவை இலங்கை அரசினால் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் அகிம்சை வழி போராட்டமும் அரச அடக்கு முறையினால் நசுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு யாப்பு, இரண்டாம் குடியரசு யாப்பு ஈழத்தமிழரது அபிலாசைகளை அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. அவை அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தில் அமைந்த ஒற்றை ஆட்சி முறையாகவே காணப்பட்டது.

புரிந்துணர்வு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டமை, இனக்கலவரம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் அகிம்சை போராட்டத்தின் தோல்வி என்பவற்றால் விரக்தியுற்றிருந்த தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் 1976ம் ஆண்டு தமிழர்களுக்கான தீர்வு ‘தனி தமிழ் ஈழம்’ என்ற தீர்மானத்தை வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நிறைவேற்றினார். இது தமிழர்களின் சுயநிருநயத்திற்கான போராட்ட வரலாற்றில் முக்கிய தீர்மானமாக “வட்டுக்கோட்டை தீர்மானம்” என்று அழைக்கப்படுகின்றது.

விடுதலை அமைப்புக்களின் தோற்றம்

இத்தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் பலர் சிறிது சிறிதாக ஆயுத போராட்ட இயக்கங்களை ஆரம்பித்தனர். தாயகப்பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம், கல்வி தரப்படுத்தல் சட்டம் மூலம் பல்கலைக்கழக கல்வியை இழந்த இளைஞர்கள் 1983ம் ஆண்டில் இலங்கை முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக அரச ஆதரவுடன் நடைபெற்ற இனக்கலவரம், யாழ்நூலகம் எரிப்பு என்பவற்றால் விரக்தியுற்றிருந்த இளைஞர்கள் பெருமளவில் ஆயுத போராட்ட இயக்கங்களில் சேரத் தொடங்கினர். இதனால் ஆயுத போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி முனைப்பு பெற்றது.

இதன் விளைவாக 1987ம் ஆண்டு இந்திய அரசின் வலியுறுத்தலின் பிரகாரம் இலங்கையின் அரசியல் யாப்பில் 13ம் இலக்க திருச்சட்டம் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை ஈழத்தமிழர்களது சுயநிருநய உரிமையை ஏற்பதாக அமையவில்லை. இதனால் எமது விடுதலை அமைப்பு இத் தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.

சுயநிருநய உரிமை

1860ம் ஆண்டுகளிலேயே சுயநிருணய உரிமை தொடர்பான எண்ணக்கரு உலகில் தோற்றம் பெற்றுவிட்டது. இருந்தும் 19ம், 20ம் நூற்றாண்டுகளிலேயே சுயநிருநயம் தொடர்பான கோட்பாடு வலுப்பெற தொடங்கியது. முதலாம் உலகப்போர் காலத்தில் சுய நிருநயம் தொடர்பாக அமெரிக்க அதிபர் வூட்றோவ் வில்சன் கூறுகையில் “மக்களது தேசிய அபிலாசைகளுக்கு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் சுயமாக தங்களை தாங்களாகவே ஆழக்கூடியதாக ஆட்சி முறை அமைதல் வேண்டும்.”

தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் கால முடிவில் காலாணித்துவத்திற்கு எதிராக சுதந்திரவாதம், தன்னாட்சி வாதம், பாதுகாப்பு வாதம் என்ற கோட்பாடுகள் நவீன உலகில் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. இவை சுயநிருநயத்திற்கான வெற்றியாகவும் அமைந்துவிட்டன.

ஆனால் அக்காலப் பகுதியில் காலாணித்துவத்திற்கு எதிரான போராட்டம் சுயநிருநயத்திற்கான வெற்றியாக அமைந்தாலும் அவை பல்லின மக்களையும் இணைக்கின்ற ஒரு தேசிய வாதமாகவே காணப்பட்டது. காலப்போக்கில் இத்தேசிய வாதமானது நிலப்பகுதி ஒன்றில் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரு இனம் இன்னொரு தேசிய இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமைந்துவிட்டது. இதனால் உள்ளக சுயநிருநய உரிமை எனும் கோட்பாடு வலுப்பெறத் தொடங்கியது.
உள்ளக சுயநிருநய உரிமை எனும்போது ஒரு நிலப்பகுதி ஒன்றில் ஒரேமொழி கலாசாரங்களைக் கொண்டு கூட்டமாக சிறுபான்மையாக வாழ்கின்ற தேசிய இனம் ஒன்றிற்கு சம உரிமையும், சம சந்தர்ப்பமும் வழங்கப்பட்டதுடன் சுதந்திரமாக தமது இறையாண்மையை தீர்மானிக்கும் உரிமையாகும்.

எமது விடுதலை அமைப்பும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எமது நிலங்களை விடுவித்து அங்கு பொலிஸ், நீதிமன்றம், மனிதவுரிமைகள் போன்ற சிவில் அமைப்புக்களை உருவாக்கி ஒரு நடைமுறை அரசையே நிர்வகித்து வந்தது. இத்தகையதொரு படை வலுச்சமநிலையில்தான் ஜரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இலங்கை அரசுடன் இணைந்து உள்ளக சுயநிருய அடிப்படையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற ஒரு பிரகடணத்தை வெளியிட்டனர். அதுவே “ஒஸ்லோ பிரகடனம் ” என்று அழைக்கப்படுகின்றது.

இன அழிப்பு

அதனை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இலங்கை அரசானது சுயநிருநய உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் மீது தன்சார்பிணை நாடுகள் சிலவற்றின் மறைமுக ஆதரவுடன் ஒரு இனவழிப்பு யுத்தத்தை நடாத்தி விடுதலைப் புலிகளின் இராணுவக்கட்டமைப்பை முற்றாக அழித்து தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது.

இதனையடுத்து இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் வெளிவரத் தொடங்கியது அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகள் ஜ.நா. மனித உரிமை ஆணைக்குழு ஊடாக போர் குற்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற தீர்மானத்தை இலங்கை மீதி கொண்டுவந்தது. ஆனால் இலங்கை அரசும் தன்மீதான சர்வதேச அழுத்தத்தில் இருந்து விடுபடுவதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

நல்லிணக்கம் என்பது ஒரு தரப்பு மற்றைய தரப்பை சரிசமனாக ஏற்று பரஸ்பரம் விட்டுக்கொடுத்து நடப்பதாகும். மாறாக சுய நிருநயம் வேண்டி சுமார் அறுபது ஆண்டுகாலம் போராடி இனப்படுகொலைக்கு உள்ளான இனத்தை சரணாகதி அடையச்செய்வதல்ல.

இவ் நல்லாட்சி காலத்திலும் தமிழர் தாயக பிரதேசங்களில் அத்து மீறிய சிங்கள குடியேற்றம், இராணுவத்தால் நில ஆக்கிரமிப்பு, சிவில் நிருவாகத்தில் இராணுவ தலையீடு, இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, போர் குற்ற விசாரணை என தமிழர்களது அடிப்படை பிரச்சனைகள் தீர்வின்றி தொடர்கின்றது.

சிங்கள பேரினவாத அரசு உண்மையிலேயே நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்த விரும்பினால் தமிழர்களது இப்பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். இவ் நல்லிணக்க கோரிக்கைகள் தமிழர் தரப்பில் 1987ம் ஆண்டு காலப் பகுதியிலேயே விடுதலை அமைப்பின் யாழ்ப்பாண அரசியல்துறை பொறுப்பாளரும், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுமாகிய திலீபன் அவர்களாள் முன்வைக்கப்பட்டு உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இந்திய இலங்கை அரசுகள் அதனை நிறைவேற்றாமையினால் இறுதியில் அவர் வீரச்சாவினை தழுவிக் கொண்டார்.

திலீபன் அண்ணாவின் கோரிக்கைகளாக,
1. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்.
2. தமிழர் தாயக பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்து.
3. பாடசாலை, கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள இராணுவ முகாங்களை அகற்று.
4. துணை ஆயுத குழுக்களிடம் இருக்கும் ஆயுதங்களை மீளப் பெறு.
5. தமிழர் தாயகத்தில் புதிதாக திறக்கும் பொலிஸ் நிலையங்களை நிறுத்து.
இவை தமிழீழ தனியரசை அமைப்பதற்கான கோரிக்கைகள் அல்ல, அடிப்படையில் நல்லிணக்கத்திற்கான கோரிக்கையே.

இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக இன அழிப்பு சிங்கள அரசு யுத்த வெற்றிச் சின்னங்களையும் பௌத்த சின்னங்களையும் தாயக பிரதேசங்களில் அமைத்து சிங்கள மயமாக்கலை மேற்க்கொண்டு வருகின்றது.
வரப்போகும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் தமிழர்களின் நிலைப்பாடும்.
மலரப்போகும் இலங்கையின் அரசியல் யாப்பானது ஒருமித்ததும், பிளவுபடாததுமான ஒரு நாட்டிற்குள் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காண்பதாக அமையும் என யாப்புருவாக்க குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரம ரத்தின குறிப்பிடுகின்றார். மேலும் இது ஒரு ஒற்றையாட்சி முறையில் அமைந்த யாப்பாகவே இருக்கும் என்பதும் இதற்கு தமிழர் தலமை இணங்கியது வரவேற்கத்தக்கதென்றும் குறிப்பிடுகின்றார்.

உண்மையிலேயே இத்தகய தீர்வானது சுமார் அறுபது ஆண்டுகாலமாக சுயநிருநயத்திற்காக போராடி இனப் படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு தீர்வாக அமையப் போவதில்லை.

தமிழர்களின் நடைமுறை அரசியல் தலைமைகளில் சிலர் விடுதலை போராட்டத்தை ஏற்காதவர்களாகவும், விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களையும் மக்களது அபிலாசைகளையும் அறியாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

சுயநிருநயத்திற்காக போராடும் ஒரு இனத்தின் தலைவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டார்கள். சலுகை அரசியலையோ சரணாகதி அரசியலையே மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தமாட்டார்கள். ஒரு விடுதலை இயக்க காலத்தில் வாழ்ந்த தாயக மக்களுக்கு இதன் அனுபவம் நிச்சயமாக இருக்க வேண்டும். தோல்வி மனப்பாங்கில் இருந்து நாம் மீண்டும் வர வேண்டும்.

இலங்கை நாடாளுமன்றத்தினால்தான் எமது சுயநிருநய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டுமென்றால் அது நடை பெறாத விடயம். இலங்கை அரசுதான் எமக்கான தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழர்கள் நினைப்பது பயனற்ற எண்ணக்கரு.
எமக்கு போர்க்குற்றம், இனவழிப்புக்கான நீதி வழங்கப்பட வேண்டும். நாம் இவற்றை ஜக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வதன் மூலம்தான் பெற்றுக் கொள்ள முடியும். உள்நாட்டு நீதி விசாரனை ஊடாக நாம் ஒருபோதும் நீதியினைப் பெற்றுவிட முடியாது.

நவீன காலத்தில் சுயநிருநய உரிமைக்கான போராட்டங்கள்

இன்றும் எம்மைப் போல பல தேசிய இனங்கள் தமது சுயநிருநய உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது அரச அடக்குமுறை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

ஸ்பெயினில் உள்ள கட்டலோனியா நாடாளுமன்ற தலைவர் அந் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணாகவே பிரிந்து போவதற்கான வாக்கெடுப்பை நடாத்தினார். இன்று அவர் நீதி விசாரனையை எதிர் கொள்கின்றார். சில வேளைகளில் அவர் சிறைத்தண்டனை கூட அனுபவிக்க கூடும். ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவர் தன் மக்களுக்காக ஆபத்தினை எதிர் கொள்வதற்கு தயாராகவே இருந்தார்.

அதுபோல குர்திஸ் மக்களும் சுய வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து செல்வதற்கான தமது விருப்பத்தினை தெரிவித்தார்கள். சர்வதேச நீதி மன்றத்திடம் தமது பிரச்சினைகளை எடுத்துச் சென்று அங்கு கிடைக்கப்பெறுகின்ற நீதியின் மூலம் தென்சூடான் மற்றும் கொசாவா மக்கள் தமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுத்தனர்.

(சுயநிருணயத்திற்கான பொது வாக்கெடுப்பில் குர்திஸ்தான்)

ஜக்கிய இராச்சியத்தில் உள்ள ஸ்கொட்லாந்து மக்கள், கனடாவின் கியுபெக் மக்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் தாம் சேர்ந்து வாழ்வதென்று தமது சுய நிருநய உரிமையை வெளிப்படுத்தினார்.

எனவே ஈழத்தமிழர்களும் சுயநிருநய அடிப்படையில் அமையப்பெறாத இலங்கையின் புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக வாக்களித்து எமது எதிர்ப்பை தெரிவிப்பதுடன் எமது சுய நிருநயத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல்

தமிழர்களை பொறுத்த வரையில் அவர்கள் இலங்கை உட்பட தமிழ்நாடு, ஜரோப்பியா, கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் சகல பாகங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள்.

இவ்வாறு பரந்து வாழும் எங்களது இரண்டாம் தலைமுறையினர் கல்வியாளர்களாக, மனிதவுரிமை செயற்பாட்டாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக, வர்த்தகர்களாக, ஊடகவியலாளர்களாக, சட்டத்தரனிகளாக இருக்கின்றார்கள். இவர்களில் பலர் தாம் வாழ்கின்ற அந்தந்த நாடுகளின் தாய்மொழிகளை சரளமாக பேசக் கூடியவர்கள்.

புலம் பெயர் தேசங்களில் உள்ள இளைஞர் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், கோயில்கள் என்பவற்றின் ஊடாக இவர்களை அணுகி நாம் பலம்மிக்க ஒரு வலையமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
அதைவிட ஜரோப்பியா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பொதுவாக எல்லா நாடுகளினதும் தூதுவராலயங்கள் இருக்கும். நாம் இவ் அதிகாரிகளை சந்தித்து எமது பிரச்சனைகளைக் கூறி எமக்கான ஆதரவினை பெற முடியும்.

எம்மைப் போல சுயநிர்ணயத்துக்காக போராடுகின்ற பல தேசிய இனங்களும் அவற்றின் அமைப்புக்களும் இந் நாடுகளில் இருக்கின்றது. நாம் இவர்களை அணுகி எமக்கான ஆதரவினை திரட்டிக்கொள்ள முடியும். அதே போல தாயகத்திலும் நாம் எல்லை கிராமங்களில் இருந்து எமது பிரச்சாரங்களை ஆரம்பிக்க வேண்டும். அங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மாணவர் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்றவர்களை அணுகி எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். விளையாட்டுக்கள், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என்பவற்றை நடாத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தால் வடக்கு, கிழக்காக பிரிக்கப்பட்டிருக்கும் எமது தாயகப்பகுதியை நாம் ஒன்று சேர்க்க முடியும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நாம் ஊடக ஆதரவினை கட்டியெழுப்புதல் வேண்டும். சர்வதேச மட்டத்திலும் எமக்கு ஊடக ஆதரவை பெறவேண்டும்.

இவ்வாறு நாம் ஒன்றிணைந்து ஒரே நாளில் சம நேரத்தில் உலகம் முழுவதும் வீதிக்கு இறங்கி எமக்கான சுயநிருநய உரிமையையும், இனவழிப்பிற்க்கான நீதியை கேட்டு போராடுவோமாக இருந்தால் நிச்சயமாக உலகநாடுகளின் ஆதரவை எமதாக்கி கொள்ளலாம. கட்டலோனிய மக்கள் தங்கள் தாய் நிலத்தில் மட்டும்தான் போராடினார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதிலும் போராடும் ஆற்றல் உடையவர்கள் என்பதை எல்லோரும் நினைவில் கொள்க. 

-தாமோதரம்பிள்ளை மயூரன்
(ஆசிரியர், தாயக விடுதலை செயற்பாட்டாளர் )

கைதுசெய்த தென்னிலங்கை மீனவர்களை சிலமணிநேரத்தில் விடுதலை செய்த கடற்படையினர்

image_pdfPRINT

யாழ்.நாகர் கோவிலில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை சில மணி நேரத்தில் கடற்படை விடுவித்தது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்.நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்த  81 தென்பகுதி மீனவர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களின் 21 படகுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களிடம் கைப்பற்றப்பட படகுகளையும் கடற்படையினர் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று தடுத்து வைத்திருந்தனர்.

அதன் பின்னர் சில மணிநேரம் கழித்து  கைப்பற்ற பட்ட படகுகளையும் , கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கடற்படையினர் விடுவித்துள்ளனர்.

தென்னிலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டமையை அடுத்து பருத்தித்துறை மீனவர்கள் கடற்படை முகாம் முன்பாக கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அதன் போது குறித்த மீனவர்களுடன் பேசிய கடற்படை அதிகாரி , குறித்த பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கான அனுமதி உண்டு என யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்தே தாம் கைது செய்த மீனவர்களை விடுவித்தோம் என தெரிவித்தார்.

அதன்பின்னர் கடற்படை முகாம் முன்பாக கூடி தமது எதிர்ப்பை தெரிவித்த பருத்தித்துறை மீனவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு; ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைப்பு

image_pdfPRINT

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்காக  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கையின் பிரகாரம் யாழில் இயங்கும் தனியார் தொலைக்காட்சியின் அலுவலகச் செய்தியாளர் நடராஜா குகராஜா என்ற ஊடகவியலாளரே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் கடந்த ஜூன் 20ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

இதன்போது, வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, “இந்த வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று வழக்கின் கோவை தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு  கையளிக்கப்பட்டுள்ளது” என மன்றில் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிவரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபெசி உரையாடல் தொடர்பான அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாண ஊடகவியலாளர்  நடராஜா குகராஜா என்பவரை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு அனுப்பியுள்ளார்.

கொழும்பு 01இல் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஊடகவியலாளரை சமுகமளிக்குமாறு அந்த அழைப்பில் கோரப்பட்டுள்ளது.

மயிலிட்டி வரும் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

image_pdfPRINT

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் ஐனாதிபதி வருகையின் போது கறுப்பு கொடி போராட்டம் நடாத்த வடமராட்சி கிழக்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டத்தை மீறி கடலட்டை பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் தொடர்ந்தும் அமைதியாக இருப்பதுடன் தென்னிலங்கை மீனவர்களுக்கு ஆதரவாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நாளை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.இந்த சந்திப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம் நடாத்துவதெனவும், 22ம் திகதி மயிலிட்டி பகுதிக்கு வரும் ஐனாதிபதிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடாத்த தீர்மானிப்போம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

வீதி தடைகளை தாண்டி நல்லூரில் ரீ.வி.யை நாட்டிய இராணுவம்

image_pdfPRINT

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன் வீதியில் இராணுவத்தினரால் பிரமாண்டமான தொலைக்காட்சி திரை (LED TV.) அமைக்கப்பட்டுள்ளது.

ஆலய முன் வீதியில் ஆலயத்திற்கு சுமார் 150 மீற்றர் தூரத்தில் செட்டித்தெரு சந்திக்கு அருகில் இந்த பிரமாண்ட தொலைக்காட்சி திரை அமைக்கப்பட்டு உள்ளது.

ஆலய சுற்று வீதிகள் கடந்த 16ஆம் திகதி முதல் வீதி தடைகள் போடப்பட்டு , வாகனங்கள் உட்பிரவேசிக்க தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை நேர உற்சவ பூஜைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை , வீதி தடைகளை தாண்டி இராணுவத்தினர் தமது வாகனத்தில் வந்து இந்த பிரமாண்ட தொலைக்காட்சி திரையை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் குறித்த திரை பொருத்தப்பட்ட போதிலும் இன்று அதில் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தமிழில் பெயர்கள் வேண்டும்- முதலமைச்சர் கோரிக்கை

image_pdfPRINT

வடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்.மொழிகள் விவகார அமைச்சர் மனோகணேசனிடம் இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வடக்கின் எல்லைக்கிராமங்களிலும் யாழின் தீவகப்பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்களது பூர்வீக கிராமங்கள்,மற்றும் வீதிகளிற்கு சிங்கள பெயர்களை சூட்டுவதில் படையினரும் பௌத்த பிக்குகளும் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையிலேயே தமிழில் பெயர்களை வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு சூட்டவேண்டுமென்ற கோரிக்கையினை முதலமைச்சர் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சர் அமைச்சிலிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனோகணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலிருந்து இலங்கை வந்த பெண் சடலமாக மீட்பு

image_pdfPRINT

லண்டனில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பெண் ஒருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 64 வயதான குறித்த பெண், அவருடைய உறவினர்களுடன் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

நாயாற்றிலிருந்து வெளியேறினர் சிங்கள மீனவர்

image_pdfPRINT
-வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்புக்கோரினர்

முல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று மாலை அதியுச்ச பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்கள்.

நாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் கடந்த 13ம் திகதி திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

இதயைடுத்து தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன், சிங்கள மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சிங்கள மீனவர்கள் வெளியேறும் போது , தமிழ் மீனவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் எனவும், வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமது வருத்ததைத் தெரிவித்து மன்னிப்புக்கோரியதாகவும் தமிழ் மீனவர்கள் தெரிவித்தனர்.

இது  தொடர்பாக சம்பவ இடத்தில் நின்றிருந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கடந்த 13ம் திகதி தமிழ் மக்களுக்கு சொந்தமான வாடிகள் அநியாயமாக தீக்கிரையாக்கப்பட்டு இன்று அந்த மக்கள் தொழிலுக்கும் செல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்கிறார்கள்.

இந்நிலையில் மக்களும் அதனுடன் இணைந்து பல்வேறு தரப்புக்கள்  ஊடாகவும் நாங்கள்கோரிக்கையை முன்வைத்தோம்.

அதாவது, நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும், கொழுத்தப்பட்ட நாசமக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படவேண்டும். இது நிறைவேற்றப்படும்வரை பட்டினிசாவை எதிர்கொண்டாலும் பரவாயில்லை. எமது மீனவர்கள் தொழிலுக்கு செல்லமாட்டார்கள்.

இந்நிலையில் இன்று மாலை மக்கள் என்னை அழைத்தார்கள் அதிகளவான பொலிஸார் வந்து நிற்பதாக.

அதனையடுத்து நான் நாயாறு பகுதிக்கு சென்றபோது அங்கே தென்னிலங்கை மீனவர்கள் தங்களுடைய பொருட்களை வானங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பல நூற்றுக்கணக்கான பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையை யார் எடுத்திருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

காரணம் மிக மோசமான போரை சந்தித்த மக்கள் மீள்குடியேற்றத்தின்போது எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வந்தார்கள்.

அந்த மக்களுடைய பொருளாதாரத்தை அல்லது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

அதற்கு மேலாக சட்டவிரோத தொழில்கள் அத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு பூரணமான அனுமதி கொடுக்கப்பட்டது.

இதனால் போருக்கு பின்னரான காலத்தில் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் எமது மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கதன சந்தர்ப்பமாக தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் அமையும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

error: Content is protected !!