SHARE
image_pdfPRINT

யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

அதனை இறைச்சிக்காக வெட்டப்படவுள்ளதாகவும் , அதன் ஒரு பங்கு இறைச்சி ஆயிரம் ரூபாய் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த மாடு யாழ்.குப்பிளான் பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்துள்ளார், குடும்பத்தின் பொருளாதார நிலைமை காரணமாக அதனை தமிழர் ஒருவருக்கு விற்றோம். அவர் அதனை வளர்க்க எனவே வாங்கி சென்றார். இறைச்சிக்காக அதனை விற்பார் என தெரிந்திருந்தால் அதனை அவரிடம் விற்று இருக்க மாட்டோம்.

இந்த மாடு 2016.03 25 ஆம் திகதி பிறந்தது. இரண்டரை வயதுடைய மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த மாட்டை தன்னார்வலர்கள் முன் வந்து அதனை காப்பற்றுங்கள் என மாட்டின் ஆரம்ப உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த மாட்டினை விலைக்கு வாங்கி அதனை காப்பாற்ற சில தன்னார்வலர்கள் முன் வந்து , மாட்டின் தற்போதைய உரிமையாளரை தொடர்பு கொண்ட போது , அதனை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என காட்டமாக பதில் அளித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதே போன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாட்டினை காட்சிப்படுத்தி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த போது யாழில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது பின்னர் அந்த மாடு சிலரின் நிதியுதவியுடன் மாட்டினை தாம் வாங்கி அதனை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் பிரதேச சபையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் , சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதியளிக்க கூடாது எனவும். மாடு வெட்டவும் அனுமதிக்க கூடாது என தீர்மானம் முன் மொழியப்பட்டு , அது சபையில் ஏக மனதாகவும் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.