SHARE

மாகாண சபை தேர்தலை புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பான முக்கியமான கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போதே அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ளார். இதன் பிரகாரம் விரைவில் எல்லை நிர்ணய அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படும் என்றார்.

எனினும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் புதிய முறைமையின் பிரகாரம் தேர்தல் நடத்துவது சிறுப்பான்மை இனத்தவர்களுக்கு பெரும் அநீதியாகும். சிறுப்பான்மை இன மக்களுக்கு சாதகமான தேர்தல் முறைமைக்கு ஆதரவளிப்போம். ஆகவே இந்த விவகாரத்தை இழுத்தடிப்பு செய்து தேர்தல் தாமதப்படுத்தாமல் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை உடன் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் புதிய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்த முடியாவிடின் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினரும் வலியுறுத்தினர்.

ஆகவே மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கம் இல்லாத நிலைமையை அடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளையில் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email