SHARE

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை வழக்கின் சந்தேக நபர்களான ஐந்து பொலிசாரில் மூவர் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யாழ்.பல்கலைகழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் , நடராஜா கஜன் ஆகிய இரு மாணவர்கள் மீது  கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி அன்று யாழ்.பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு மாணவர்களும் உயிரிழந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் 11 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அந்நிலையில் சந்தேக நபர்கள் ஐந்து பேரில் மூவர் மீது குற்றசாட்டுக்கள் இல்லை என அவர்களை முற்றாக வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் , ஏனைய இருவர் மீது குற்றப்ப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
அதேவேளை மாணவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி யாழ்.பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் நடாத்திய போது , மாணவர் ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட மாணவ பிரதிநிதிகளை கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்புக்கு அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மாணவர்கள் படுகொலை தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு மூன்று மாத கால பகுதிக்குள் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email