SHARE

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் நாயாற்று பாலத்தில் இருந்து கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதியை கையகப்படுத்த தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் திணைக்களத்திற்குரிய காணியென அடையாளப்படுத்தும் நடுகல் நேற்று முன்தினம் அங்கு நடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுளார்கள். இதே சாக்கில், அங்கு வாடியமைத்து பெருமளவு நிலங்களை அபகரித்து வருகிறார்கள். மறுபுறம் மகாவலி எல் வலயம் என்ற திட்டத்தின் பெயரில் தமிழர்களின் பாரம்பரிய வளம்கொழிக்கும் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இது போதாதென, வனவிளங்கு திணைக்களத்தினர் இன்னொரு முனையில்- மக்களின் காணிகளைகூட தமது திணைக்களத்திற்கு சொந்தமானதென அடையாளப்படுத்தி மக்களின் தலையில் இடியை இறக்கி வருகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தை அபகரிப்பதில் மிக நூதனமாக திட்டமிட்டு, எல்லா வழிகளிலும் அரச இயந்திரம் செயற்பட்டு வரும் நிலையில், இப்பொழுது புதிதாக தொல்பொருள் திணைக்களமும் தமது கைவரிசையை ஆரம்பித்துள்ளது.
நாயாற்று சந்தியில் இருந்து கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோமீற்றர் பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான பெருமளவு காணிகள் உள்ளன. அவற்றையும் அபகரிக்கும் விதத்திலேயே தொல்பொருள் திணைக்களம் நடுகல் நாட்டியுள்ளது.

அத்துடன் நாயாற்றிலுள்ள விகாராதிபதி தங்கியுள்ள வீட்டிலேயே தொல்பொருள் திணைக்களம் இயங்குகிறது. அந்த வீட்டிலேயே தொல்பொருள் திணைக்களத்தின் பெயர் பலகையும் மாட்டிவைக்கப்பட்டுள்ளது.