SHARE

ஒரு தமிழ் பொதுமகன் என் தாயகம் தமிழீழம் என்று கூறுவது எந்தவிதத்திலும் தேசத்துரோகம் தான் எனது கேள்வியிடுகிறது. தமிழீழம் தமிழர் ​​தாயாகம்  என அங்கீகரிக்கப்பட வேண்டும் இவ்வாறு மட்டக்களப்பை பிறப்பிமாகக் கொண்டுள்ள இலங்கைத் தமிழ்ச்சரட்சியின் ஆரம்பகால இளைஞர் அணியில் செயற்பட்டாளரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் விவகார பிரிவின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் உணர்ச்சிக் கவிஞருமான காத்தமுத்து சிவன்ந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட கசி.ஆனந்தன் கூறியுள்ளார்.

பெரும்பான்மை இனத்தின் போக்குகள், தமிழ் இன,மொழியின் வரலாற்றுப் பெருமைகள், தமிழர்களுக்கான தயாகம், தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுள், தமிழனத்துக்கான மாற்றுத்தலைமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
புரிதலற்ற செயற்பாடுகள் பிரித்தானியர்கள் வெளியேறியவுடன் தந்தை செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். அவர் சிங்கள இன வெறுப்புடனோ அழிப்புடனே கட்சியை ஆரம்பித்திருக்கவில்லை. சிங்கள மக்களுடன் ஒரு நாட்டுக்குள் வாழ முடியும் என்ற நம்பிக்கையுடதான் கட்சியை ஆரம்பித்திருந்தார்.  தந்தை செல்வாவின் அத்தகைய நல்லெண்ண முயற்சியை சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் தமது சிங்கள, பௌத்த பேரினவாத எண்ணத்தினையே முன்னிலைப்படுத்தலானார்கள். அதன் விளைவாக தற்போது இலங்கைத் தீவு எங்கோ சென்றுகொண்டிருக்கின்றது.

அஹிம்சை, ஆயுதப்போராட்ட காலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஓட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கின்றபோது இலங்கை நாடு இரு தேசங்களைக் கொண்டது என்பதான சாரம்சமாகின்றது.

இருதேசக் கொள்கை என்பது ஒன்றும் இனவெறிபிடித்த கொள்கை அல்ல. அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று அடிப்படையில் இலங்கைத்தீவு இரு தேசங்களாக இருந்துள்ளது என்பது மறுதலிக்க முடியாதவொன்றாகின்றது.

சிங்களவர்களுக்கு கண்டி அரசு, கோட்டை அரசு என தனி அரசுகள் இருந்துள்ளன. அதேபோன்று தான் தமிழர்களுக்கும் யாழ்ப்பாண அரசு, மட்டக்களப்பு அரசு, வன்னி அரசு திருகோணமலை அரசு என இருந்துள்ளன. யாழ்ப்பாணத்தினை சங்கிலியன், வன்னியில் பண்டார வன்னியன், திருகோணமலையில் குளக்கோட்டன் மட்டக்களப்பில் உலகநாச்சியன் என தமிழர்களும் அரசு கொண்டு வாழ்ந்த வரலாறுகள் காணப்படுகின்றன.

அவ்வாறிருக்கையில் தற்போது வரையில் சிங்களவர்கள் இனரீதியான பெரும்பான்மையை மையப்படுத்தி சிங்கள, பௌத்த மேலாதிக்கவாத்தின் பால் ஒட்டுமொத்தமாக தமிழினத்தனையே அழித்து துடைந்தெறிந்து விடவேண்டும் என்ற நோக்கத்தினையே தற்போது வரையில் கொண்டிருகின்றது. தற்போதும் இந்த மனநிலையல் சிங்கள மக்கள் இருப்பதானது ஒருமித்த நாட்டிற்குள் அவர்களுடன் இணைந்து வாழ்வதை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது.

பூர்வீக தேசத்தினை பூர்வீக இன மக்கள் இழப்பது என்பது மிகப்பெரும் துயராகும்.சிங்கள மக்கள் இலங்கைத் தீவில் உள்ள சிக்கலை வெறிகொண்டு பார்க்ககூடாது. அவர்கள் இதனை அறிவு பூர்வமாக பார்க்கவேண்டும். ஆகக்குறைந்தது அவர்கள் அவ்வாறு சிந்திக்க கூட இல்லை. இங்கு ஒரு முக்கியமான விடயத்தினை குறிப்பிட விரும்புகின்றேன்.

மறுதலிக்க முடியாத வரலாற்று பின்னணி

ஆபிரிக்காவில் தோன்றி ஹோமோசேப்பியன்ஸ் இனம் கண்டத்திட்டுக்கள் வழியாக தமிழ் நாட்டிற்கு வந்திக்கின்றன. அதாவது 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமாக தோன்றிய மொழி இனமாக தமிழினம் இருக்கின்றது. இதனை பாவணர் என்ற மொழி ஆய்வாளர் ஆய்வு செய்து லெவி போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் கீழ் திசை வழியாக அவுஸ்திரேலிய கண்டத்திற்கு தமிழ் மொழி நகர்ந்துள்ளது. அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தினர் பேசும் மொழியில் தமிழ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பனி உழிக்காலம் வந்தபோது தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கிப் போனவர்கள் சிந்துவெளி சுமேரியா போன்ற வரலாற்றில் இருப்பதும் உறுதியாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான வரலாறு இருக்கையில் தமிழகத்திலிருந்து 10ஆயிரம் ஆண்களுக்கு முன்னர் பனி உழிக்காலத்தில் தான் இலங்கை தீவு பிரிந்துள்ளது. ஆகவே இலங்கை தீவில் தமிழ் மொழியின் வரலாறு மிகப்பழமையானது. இதன் பின்னர் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் தான் சிங்கள மொழியும் சிங்கள இனமும் தோற்றம் பெறுகின்றது. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட மாகாவம்சம் கூட பாளி மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. அப்போது கூட சிங்கள மொழி இருந்திருக்கவில்லை. இவ்வாறான வரலாற்றுப்பின்னணிகளை வைத்துப்பார்க்கின்றபோது இலங்கைத் தீவில் சிங்கள மக்களின் வரலாறு 1400 ஆண்டுகளாகவே இருக்கின்றது. இதனடிப்படையில் பார்க்கின்றபோது 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள தமிழினத்தை 1400 ஆண்டுகள் வரலாற்றுப்பின்னணி கொண்ட சிங்கள இனம் அழித்தொழித்து கோலோச்ச நினைப்பது மிகப்பெரும் கொடுமையாகின்றது.

இந்தக் கொடுமையை எதிர்த்து தான் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலுடன் அனைத்தும் முடிவுக்க வந்து விட்டதாக தற்போதைய சிங்கள ஆட்சியாளர்கள் முழுமூச்சுடன் மார்பு தட்டிக் கூறுகின்றார்கள். தனி ஈழம் எல்லாம் கிடையாது என்று பறைசாற்றுகின்றார்கள். உலகம் முழுதும் வாழுகின்ற ஒரு இனம் தான் தமிழினம். ஆகக்குறைந்தது சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு தேசிய இனத்தின் உணர்வை மதிக்கின்ற மனிதநேயப் பண்பு கூட தற்போதுவரையில் ஏற்படவில்லை என்பது மிகவும் வேதனையாக விடயம்.

தாயகம் தமிழீழமே

தமிழ் ஈழத்திற்கான விடுதலைக் கோரிக்கையை முன்வைக்க கூடாது அவ்வாறு கோருவது தேசத்துரோகம் என்று தற்போது ஆணித்தனமாக பெரும்பான்மை ஆட்சியார்கள் கூறுகின்றார்கள். இலங்கை தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக சிங்களவர்களே இருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் அதனை நியாயப்படுத்த விடலாம். ஆனால் ஒரு தமிழ் பொதுமகன் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று கூறுவது எந்தவகையில் தேசத்துரோகம் என்பது தான் எனது கேள்வியாகின்றது.

“சிங்கள சிறிலங்கா” எவ்வாறு சிங்களவர்களின் தயாகமாகின்றதோ அதேபோன்று தான் “தமிழீழம்” என்பது தமிழர்களின் தயாகமாகின்றது. தமிழீழம் தனியாக அமைய வேண்டும் என்பதானது நாட்டினை பிரிக்க முயல்கின்றார்கள் என்ற அடிப்படையில் தேசத்துரோகமாக கருதலாம். ஆனால் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதில் எவ்விதமான பிரிவினையும் இல்லையே. அது தேசத்துரோக வரையறைக்குள்ளே இடம்பெறதே.

தேசிய இனச் சிக்கிலை தீர்ப்பதற்கு ஆத்மாத்தமாக செயற்பட சிங்கள ஆட்சியாளர்கள் விரும்புவார்களாயின் “தமிழர்களின் தாயகம் தமிழீழம்” என்பதை அரசியலமைப்பில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசியலமைப்பினை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் அதில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து என்றெல்லாம் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரதேசங்களில் தனித்தனியான தேசிய இனங்கள் உள்ளன. அந்த தேசிய இனங்களின் தேசங்களின் பெயர்கள் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று தான் இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் இங்கு பல்தேசிய இனங்கள் காணப்படுகின்றன. அந்தந்த தேசிய இனங்களுக்கு சொந்தமான தாயகங்களின் பெயர்கள் இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஒரு காலத்தில் தனிநாட்டுக்கோரிக்கையை எழுப்பிய தமிழ் நாட்டின் பெயரே அரசியலமைப்பில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இலங்கை அரசியல் அமைப்பில் தமிழர்களின் தயாகமான தமிழீழத்தின் பெயர் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கின்றது.

திட்டமிட்ட செயற்பாடுகள்

எமது தயாகத்தில் புற்றுநோயாக பரவும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதில் எம்மால் எந்தளவிற்கு வெற்றிபெற முடிந்திருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது தயாகத்தினை விழுங்காதீர்கள். திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துங்கள் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்கள் அந்தச் செயற்பாட்டை கைவிட்டதாக இல்லை. இந்த செயற்பாட்டின் உள்ளாந்தத்தினை புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ள சிங்களவர்கள் அதனை அவ்வாறான தாயகத்தினை இல்லாதொழிக்கின்ற செயற்பாட்டினைத் தான் திட்டமிட்டுச் செய்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றம் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் அதேசெயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி சிங்கள மொழி, பௌத்த மதம் என்று அனைத்தையும் திணிக்கின்ற செயற்பாடுகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏ -9 வீதியில் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் காணப்படுகின்ற அரச மரங்களுக்கு கீழ் எல்லாம் எவ்வாறு புத்தர் வந்தார். அனைத்துமே முள்ளி வாய்க்காலுக்கு பின்னர் முளைத்த பௌத்த கோவில்கள். கி.பி.3ஆம் நூற்றாண்டில் தான் பௌத்த சமயம் இலங்கைக்கு வருகின்றது. பௌத்த சமயம் இலங்கைக்கு வருகின்றபோது மூத்த சிவனின் மகனான தேவநம்பிய தீசன் அதனை ஏற்றுக்கொள்கின்றார். தேவநம்பி தீசன் என்பது சைவப்பெயர். இவ்வாறு இந்து சமயத்திற்கு பின்னர் வருகை தந்த ஒரு மதம் அந்த தேசத்தில் உள்ள பூர்வீக மதத்தனை ஒழிக்க நினைப்பது என்பது எந்தவகையில் நியாயம். அந்தந்த இனக்குழுக்களுக்கு அந்தந்த மதங்கள் பெரியவை தான். அதற்காக இன்னொரு மதத்தினை அழிக்க வேண்டிய அவசியமில்லை.

செல்வாவின் தீர்க்க தரிசனமும் தற்போதைய தலைமைகளும்

இதனை தீர்க்கதரிசனமாக உணர்ந்து கொண்டதனால் தான் தந்தை செல்வா 1977ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதை கருப்பொருளாக கொண்டு தீர்மானத்தினை நிறைவேற்றினார். தற்போதைய தலைமைகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்று கோரலாம். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்பது தயாக கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்பதனையே வெளிப்படுத்துகின்றது.

தந்தை செல்லாவின் பாசறையில் நான் இளைஞனாக இளம் வயதில் இணைந்த போது அவரிடமிருந்து பலவிடயங்களை கற்றிருக்கின்றேன். என்னுடடைய சகபாடிகள் பலரும் அதே பாசறையில் தான் கற்றார்கள். அவர்கள் தற்போது தாயகத்தில் செயற்பாட்டு அரசியலில் இருக்கின்றார்கள். தந்தையைப் பொறுத்தவரையில் எந்தவொரு காலத்தில் அவர் கொள்கையின் அடிப்படைகளை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அரசியல் தலைவர்களிடத்தில் இருக்க வேண்டிய கொள்கை சார்ந்த மிக உயரிய பண்பு தந்தை செல்வா இடத்தில் இருந்தது.

தந்தை செல்வா இடத்தில் அரசியல் விட்டுக்கொடுப்பு என்பதே என்றும் இருந்தது கிடையாது. ஆனால் அவர்களின் வழி வந்தவர்கள் தற்போது எதனையெல்லாம் விட்டுக்கொடுக்க கூடாதோ அதனையெல்லாம் விட்டுக்கெர்டுக்க தயார் என்பதை உறுதிப்படுத்துகின்றார்கள். அதுவொரு தவறான அணுகுமுறையும் அரசியல் பண்பாடுமாகும். நாம் எங்கு நிமிர்ந்து நிற்க வேண்டுமோ அங்கு நிமிர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு நிமிர்ந்து நிற்க முடியாதென்றால் தலைமையிலிருந்து ஒதுங்கிப்போவது தான் சிறந்த வழியாகும்.

தலைமை என்ற ஸ்தானத்தில் இருக்கின்றபோது தந்தை செல்வா எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் கவனமாக பார்க்க வேண்டும். அந்த அனுபவங்களை நுணுக்கமாக எடுத்துகொள்ள வேண்டும். தந்தை செல்வாவின் பாசறையில் உருவாகி தற்போது தமிழினத்திற்கு தலைமை ஏற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் தயாக விடயத்தினை மிகக் கவனமாக கொள்ளவேண்டும்.

அவர்கள் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதை அரசியலமைப்பில் இடம்பெறச் செய்வதனை வலியுறுத்த வேண்டும். அதற்கு அழுத்தங்களை அளிக்க வேண்டும். அந்தக்கோரிக்கையை முன்னிலைப்படுத்தி மக்கள் மயப்படுத்த போராட்டத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும். அதனை அவர்கள் தற்போது வரையில் ஏன் செய்யாதிருக்கின்றார்கள் என்பது தான் எனது ஆதங்கமாக இருக்கின்றது.

அதேநேரம் தந்தையின் காலத்தில் எமது கட்சியானது தாயக தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சிக்காரியாலங்கள் அமைந்திருந்தன. மக்களின் கருத்துக்கள்ரூபவ் தேவைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களும் அளிக்கப்பட்டன. பின்னர் அவற்றின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று தான் கட்சியின் தீர்மானம் எடுக்கப்படும்.

ஆனால் தற்போதைய சூழலில் முக்கியமான அரசியல் தீர்மானங்கள் கூட அவ்வாறு எடுக்கபடுவதாக நான் அறியவில்லை. வாராந்த, மாதாந்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் இல்லை.

ஆகக்குறைந்தது கட்சிக்காரியலங்கள் முறையாக இயங்குகின்றதா என்பதற்கான பதிவுகள் கூட இல்லை. விடுதலையை எதிர்பார்த்திருக்கின்ற இனமொன்றிற்கு தலைமையேற்று அமைப்பு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய வினைத்திறனுடன் செயற்படவில்லை. தந்தை செல்வா காலத்திலும் சரி அதன் பின்னர் தம்பி பிரபாகரனின் காலத்திலும் சரி தாயகத்திற்காக தங்களை அழித்துக்கொள்ளக்கூடிய ஈக உணர்வு தமிழினத்தவர்களிடத்தில் இருந்தது.

தற்போதைய நிலையில் அந்த உணர்வினை முற்றாக சிதைக்கின்ற வகையிலான செயற்பாடுகள் தான் அங்குள்ள தலைமைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதனைவிடவும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளும் அதிகமாக உள்ளதாக அறிகின்றேன். இந்த நிலைமைகள் விடுதலை நோக்கிய பயண உணர்வை முற்றாக மழுங்கடித்துவிடும் அபாயத்தின் சமிக்ஞையாகவே உள்ளது.

தொடரும் ஆதரவுகள்

நான் பச்சியப்பால கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது உங்களின் கல்வியோடு சேர்த்து தமிழீழ மக்களுக்காக இயலுமான உதவிகளை தமிழகத்திலிருந்து மேற்கொள்ளுங்கள் என்று என்னிடத்தில் வன்னியசிங்கம் ஐயா குறிப்பிட்டார். அன்று முதல் நான் அத்தகைய செயற்பாடுகளை ஆரம்பித்தேன். எமக்கு அண்டை நாடு இந்தியா. எமது போராட்டத்திற்கு இந்தியா பக்கபலமாக நிற்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நான் இந்த நிமிடம் வரையில் தமிழக, மத்திய அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காத்திரமான பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்.

விக்கி தலைமையில் எழுச்சி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக வந்திருந்தாலும் கூட அவர் தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள்ரூபவ் தலைவர்களில் விடுதலைக்கான இனத்திற்காக செயற்படக்கூடிய நம்பிக்கையான நபர் ஒருவராகவே உள்ளார். ஏனையவர்களை விடவும் அனுபவத்தில் குறைந்தவராகவும் பிற்பட்ட காலத்தல் விடுதலைக்கான பயணத்தில் இணைந்து கொண்டவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்ற ஒரு தலைவராக இருக்கின்றார்.

அறிவு, அனுபவம், அகவை, இன உணர்வு, நேர்மை ஆகியவற்றை மையப்படுத்திய விக்கினேஸ்வரின் கொள்கை வழியல் ஏனைய இளம் தலைவர்கள் ஒரு அமைப்பாக அணியமாவது தற்போதைய சூழலுக்கு அவசியமானதாக உள்ளதாக நான் கருதுகின்றேன். ஏனைய தலைவர்கள் தமிழ் மக்களுக்காக இயங்கினாலும் விக்கினேஸ்வரனின் தலைமையில் எழுச்சி ஏற்படுவதை வரவேற்கின்றேன்.

நேர்காணல்:- இந்தியாவிலிருந்து  ஆர்.ராம்

நன்றி வீரகேசரி 

Print Friendly, PDF & Email