SHARE
தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில், அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் விடுவிப்பு பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை.
புத்தாண்டுக்கு முன் தந்தை தம்முடன் இணைவார் என்ற ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை  ஜனாதிபதி வீணடிப்பாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி.
சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர் மகசின் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஆனந்தசுதாகரின் மனைவி யோகராணி நோய்வாய்ப்பட்டநிலையில் கடந்த மாதம் உயிரிழந்தார். மனைவியின் இறுதிக் கிரியைகளுக்காக ஆனந்தசுதாகர் கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.
மகசின் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட அவர் 3 மணிநேரங்களில் மீள அழைத்துச் செல்லப்பட்டார்.
தனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தவேளை ஆனந்தசுதாகர் அரசியல் கைதியாக தடுப்பில்வைக்கப்பட்டார். அதனால் தந்தையின் அரவணைப்பை நாடிய அவரது மகள் அவரைப் பிரிய விரும்பவில்லை.
அதனால் அந்தச் சிறுமி, தந்தையுடன் சிறைச்சாலைக்குச் செல்ல முற்பட்டாள். அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
இந்த நிலையில் தாயை இழந்து பெற்றோரின் ஆதரவின்றி தவிக்கும் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன் மற்றும் மகள் சங்கீதா இருவரும்
தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என ஜனாதிபதியிடம் கருணை மனு முன்வைத்தனர்.
அந்த சிறுவர்களின் ஆதரவுக்காக ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளிக்கவேண்டும் என  கோரும் பல நூறு மனுக்கள் வடக்கு – கிழக்கிலிருந்து ஜனாதிபதிக்குச் சென்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்களும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினர். அப் பிள்ளைகள் ஜனாதிபதியை சந்திக்க வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் இளையோர் அமைப்பு ஒன்று முந்திக்கொண்டது. ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றனர். பிள்ளைகள் இருவரையும் ஜனாதிபதியிடம் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். பிள்ளைகளால் தந்தையின் விடுதலை கோரிய மனுக்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
அவற்றைப் பெற்ற ஜனாதிபதி ஆனந்தசுதாகரின் பொதுமன்னிப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் சொல்லில் நம்பிக்கை கொண்ட பிள்ளைகள், புத்தாண்டுக்கு முன்னர் தந்தை தம்முடன் இணைவார் என காத்திருக்கின்றனர்.
இதனிடையே தனது கடிதத்தையும் ஜனாதிபதி கவனத்தில் எடுத்து, ஆனந்தசுதாகரின் விடுதலை பற்றிய நடவடிக்கையில் இறங்கியுள்ளார் – சிறைச்சாலை ஆணையாளரிடம் விவரங்களைக் கோரியுள்ளார் என்று வடக்கு முதலமைச்சரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் புத்தாண்டு நாளை பிறக்கவுள்ள நிலையில் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கை வீண் போகுமா – வீணடிக்கப்படுமா? என்பதே இன்றைய கேள்வி.
இதற்கான பதில் நாளை தெரியவருமா? ஜனாதிபதியின் கைகளிலேயே பதில் உண்டு.
Print Friendly, PDF & Email