SHARE

காதலர் தினத்தில் தமது அன்புக்குரிய உறவுகளை தேடி தலைநகர் கொழும்பில் ஒன்று கூடிய உறவுகள் கண்ணீர் மல்க தீர்வை வேண்டிநின்றனர்.

காதலர் தினமான நேற்று அன்புக்குரியவர்களுடன் காதலை அனைவரும் பகிர்ந்த சந்தர்ப்பத்தில், தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வித்தியாசமான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

காணாமற்போனோரின் குடும்ப அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, ‘காணாமல் போன காதல்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போன தமது உறவினர்களின் ஒளிப்படங்களை கைகளில் தாங்கியவாறு உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதோடு, அவற்றை பிரதிபலிக்கும் உணர்வுபூர்வமான சிற்பங்களும்  இந்நிகழ்வில் வைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் நிறைவடைந்த போதும், காணாமல் போனோர் பிரச்சினைக்கு எவ்வித காத்திரமான நடவடிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அதற்கான போதிய நகர்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது காணாமல் போனோரின் உறவினர்களது ஆதங்கமாக உள்ளது.

காணாமல் ஆக்கப்பட தமது உறவினர்களுக்காக வடக்கு கிழக்கில் சுமார் ஒரு வருடத்தைக் கடந்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  

Print Friendly, PDF & Email