SHARE

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கப் போகிறவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலையில் ஆரம்பமாகப் போகிறது. இந்த தேர்தல், அடுத்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருந்தாலும், தமிழர்களைக் பொறுத்தவரையில், அவர்களுக்குத் தலைமை தாங்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவது யார் என்பதற்கான போட்டி – அரசியல் களத்தில் தீவிரமாக எழுந்திருக்கிறது.

தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பையே அசைக்க முயன்றவர்கள் கூட தமிழ்த் தேசியம் பேசியவாறு, இந்த தேர்தலில் வெற்றிபெற நினைக்கின்றனர்.

இதனால், இந்த தேர்தலில் தமிழ் மக்கள் யாரைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்ந்தும் அந்த அங்கீகாரம் கிடைக்குமா?

அல்லது புதியதொரு தலைமைத்துவத்தை உருவாக்கும் புறச்சக்திகளின் திட்டமிடலுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்குமா,? என்பதே அதிகளவில் எதிர்பார்க்கப்படும் விவகாரமாகும்.

இவர்களில் மக்களின் செல்வாக்கு – ஆதரவு யாருக்கு என்பது நாளை வெளிப்படுத்தப்பட்டு விடும்.

ஆனால், இந்த தேர்தலை தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகள் எதிர்கொண்ட விதம், எந்தவகையிலும் நாகரீகமான அரசியல் வளர்ச்சிக்கு ஏற்புடையதெனக் கொள்ள முடியாது.

இலங்கையில், வடக்கு கிழக்கில், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இயல்பான அரசியல் வளர்ச்சி என்பது இல்லாத ஒரு சூழலே நிலவியது.

ஆயுதப் போராட்ட சூழல், தமிழ் மக்களை ஜனநாயக அரசியல் களத்தில் இருந்து விலகி நிற்கச் செய்தது.

ஆயுத மோதல்கள் முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் தான், வடக்கு, கிழக்கு முழுமைக்குமான ஒரு ஜனநாயக அரசியல் செயற்பாட்டுச் சூழல் மீளத் தலையெடுத்தது.

இந்த ஐந்து ஆண்டுகாலத்தில், தமிழர் பகுதிகளில் செயற்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்துமே, தேர்தல் காலங்களில் மாத்திரமே மக்களை நோக்கிச் செல்லும் நிலை ஒன்று பெரும்பாலும் அவதானிக்கப்பட்டது.

அரசியல் என்பது தேர்தலுக்காக வாக்களிக்கும்படி மக்களை கேட்டுச் செல்வது மட்டுமல்ல.

அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுடனான தொடர்பறாத வகையில் பிணைந்து நின்று செயற்படுவதே அரசியல்.

ஆனால் அத்தகைய பிணைப்பு அரசியல் களத்துக்குள் இன்னமும் தமிழ்த் தேசிய அரசியல் பிரவேசிக்கவேயில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மூன்று தசாப்த இடைவெளிக்குப் பிந்திய தமிழர் அரசியல், மக்களையும் அரசியல் கட்சிகளையும் ஒரு அந்நியோன்னிய நிலைக்கு கொண்டு வரத் தவறியிருக்கிறது.

இதனால் அரசியல்கட்சிகள், அவற்றின் கொள்கைகள், போராட்டங்கள், பேரணிகளின் மீது மக்களை ஈர்க்க முடியாத நிலை காணப்படுகிறது.

உண்மையில், விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், வடக்கில் நடத்தப்பட்ட பிரமாண்டமான பேரணிகள் என்றால், அது மகிந்த ராஜபக்சவினால் தான் நடத்தப்பட்டது.

தேர்தல் காலங்களில் எப்படியோ மகிந்த ராஜபக்சவின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால், அவ்வாறு பேரணிகளுக்கு சென்றவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கவில்லை.

தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக அவர்கள் வலுவாக நின்றதை வடக்கு மாகாணசபைத் தேர்தல் தெளிவாக எடுத்துக் காட்டியது.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நடத்தப்பட்டது போன்ற, ஒரு தேர்தல் பேரணியையாவது எந்தவொரு தமிழ்த் தேசியக் கட்சியாலும் இன்றுவரை ஒழுங்கு செய்ய முடியவில்லை.

அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின்னர் கூட அது சாத்தியப்படும் போலத் தெரியவில்லை.

அரசியல் பேரணிகளுக்காகவோ போராட்டங்களுக்காகவோ இப்போது தமிழ் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை என்பதை கடந்த ஐந்து ஆண்டு கால அரசியல் போக்கு தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது.

இலங்கையின் மற்ற பகுதிகளில் இப்படியான நிலை இல்லை.

தமிழர் பகுதிகளில் மாத்திரம்- அரசியலுடன் ஒட்டாத ஒரு போக்கு இருக்கிறது.  ஜனநாயக அரசியல் மீதான அவர்களின் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாகவும் இதனைக் கருதலாம்.

அல்லது, ஜனநாயக அரசியலில் ஈடுபடும் தரப்பினர் மீதான நம்பிக்கையீனமாகவும் கொள்ளலாம்.

எதுஎவ்வாறாயினும், தமிழரின் அரசியலுக்குள் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டிய அவசியம் வலுவாக உணரப்படுகிறது.

தமிழ்த் தேசிய சக்திகள் பிரிந்து நின்று மோதிய இந்தத் தேர்தல் களத்தில் பல உண்மைகள், பலராலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், எதிர்காலத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால், இளையவர்களை அதிகளவில் உள்வாங்க வேண்டும், அகமுரண்பாடுகளை தவிர்த்து கூட்டுப்பொறுப்புடன் செயலாற்ற வேண்டும், தாயகத்திலும், புலத்திலும் வாழும் மக்களின் விருப்பு வெறுப்புகளை மதித்து நடக்க வேண்டும் என்பது போன்ற பல விடயங்களில் தனது எதிர்கால நட.வடிக்கைகளை திட்டமிட வேண்டிய நிலையில் இருக்கிறது.

அவசரமான மாற்றங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லாது போனால் ஆபத்தான நிலை ஒன்றுக்குள் தள்ளிச் செல்லப்படுவது தவிர்க்க முடியாதாகி விடும் என்ற அபாயச் சங்கை இந்த தேர்தல் பிரசாரங்கள் எதிர்வு கூறியிருக்கின்றன.

ஒருவேளை, கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் மக்களின் முழுமையான ஆதரவு கிடைத்தால், அதனைச் சாக்காக வைத்துக் கொண்டு அவசரமான மறுசீரமைப்புக்குச் செல்ல மறுத்தால், இன்னொரு தேர்தலில் கடுமையான பாடங்களை கற்கவேண்டி வரலாம்.

இந்த தேர்தலில் கூட சில பாடங்களை கூட்டமைப்பு கற்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து அரசியல் செய்வதையே – அதனை சிதைப்பதையே ஒரே குறிக்கோளாக கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கொள்கை ரீதியாக எவ்வாறு தனது இலட்சியத்தை முன்னெடுக்கவுள்ளது என்பதை மக்களிடம் சரியாக நிறுவத் தவறியுள்ளது.

இந்த தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தான் ஏற்படும்.

ஆனால், அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைக்கு, அதன் செயற்பாட்டுக்கு கிடைத்த ஆதரவாக கருதமுடியாது.

உள்ளூர் அரசியல் களத்துக்கு வெளியில் இருந்து திடீரெனப் பிரயோகிக்கப்பட்ட பிரசார அழுத்தங்கள் கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை பரவச் செய்வதன் ஊடாக மட்டும், நிலையான அரசியல் தளம் ஒன்றை உருவாக்க முடியாது.

இந்த தேர்தலில் கூட்டமைப்பு மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் எல்லாமே, சரியானவை என்று அர்த்தமாகி விடாது.

தரம் தாழ்ந்த விமர்சனங்களும், அரசியல் நாகரீகமற்ற பிரசாரங்களும், வாக்காளர்களை குழப்புவதில் கணிசமான பங்காற்றியிருக்கின்றன.

ஆனால் இது தமிழரின் ஆரோக்கியமான அரசியல் எதிர்காலத்துக்கு உகந்த ஒன்றல்ல.

இதேவிதமான குற்றச்சாட்டுகளும், வசைமாரிகளும், இன்னொரு தேர்தலில் இடம்மாறக் கூடும் என்பதையும் மறந்து விடலாகாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தெளிவான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்.

அவர்களுக்கு மூன்றாம் தர அரசியல் விமர்சனங்களோ, பிரசாரங்களோ தேவையற்றது.

கொள்கை ரீதியாக- நடைமுறைச் சாத்தியமான அரசியல் திட்டங்களின் ஊடாக, எதிர்கால அரசியல் போக்கை திட்டமிடத் தவறினால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பாதகமான நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

இன்னொரு பக்கத்தில் புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருக்கும் ஜனநாயகப் போராளிகள், தாம் அரசியலுக்கு வந்துள்ள நோக்கத்தையும் பின்புலத்தையும், மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

அதாவது, எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகப் பயணிப்பதாயின், அதற்கான வேலைத் திட்டங்களை இடையறாமல், செய்ய முனைய வேண்டும்.

தேர்தல் காலத்தில் மட்டும் ஆசனம் கேட்டு நிற்பது போன்ற செயல்களின் மூலம், தம்மைக் கீழ் இறக்கிக் கொள்ளாமல்,  தமிழ்த் தேசிய அரசியலை தனித்துவமாக முன்னெடுப்பதாயின் அதற்குரிய ஆக்கபூர்வமான வழிமுறைகளை தேட வேண்டும்.

இவை தமிழ்த் தேசிய கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் கையாள வேண்டிய வழிமுறைகளாக இருக்கும்.

இந்த தேர்தலில் வெற்றி பெறும் இலக்குடன் எல்லோரும் போட்டியிடவில்லை. பெரும்பாலானவர்கள், சிலரைத் தோற்கடிக்கவே களமிறங்கியுள்ளனர், களமிறக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் ஆணை இவர்களில் யாருக்கும் கிடைக்கலாம்.

ஆனால், அதனை மட்டும் வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பை சிதைப்பதற்கோ, ஒற்றுமையை குலைப்பதற்கோ பயன்படுத்தி விடக்கூடாது என்பதே பொதுவான எதிர்பார்ப்பு.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் அரசியலில், தூய்மையும் நேர்மையும் மட்டுமன்றி, ஒற்றுமையும் அவசியம்.

ஒற்றுமை எந்தக் கட்டத்தில் குலைந்து போகிறதோ, அல்லது சிதைந்து போகிறதோ, அப்போதே தமிழ்த் தேசியத்தின் ஆணிவேரும் அசைக்கப்பட்டு விடும்.

தமிழ்த் தேசியத்தை சிதைக்க முயன்றவர்களே, இன்று அதனைக் கையில் எடுத்துள்ளதை கொண்டு, இது எந்தளவுக்கு ஆபத்தான நிலை என்ற உண்மை, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குப் புரிந்தால் சரி.

– சத்ரியன்

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Print Friendly, PDF & Email