SHARE

நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இனிமேல் சிறிலங்கா படையினரோ காவல்துறையினரோ யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையமாட்டார்கள் என்று யாழ். படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வாக்குறுதி அளித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவுடன், நடத்திய 3 மணிநேரப் பேச்சுக்களை அடுத்தே, அவர் நேற்று மாலை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“யாழ்.பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினரை அங்கிருந்து முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழலிலேயே, யாழ்.பல்கலைக்கழகத்தினுள் சிறிலங்கா படையினர் நுழைய வேண்டியேற்பட்டது.

அதுபோன்று இனிவரும் காலங்களில் சிறிலங்கா படையினரோ, காவல்துறையினரோ பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய மாட்டார்கள்.

அவ்வாறு நுழைய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிர்வாகத்திடம் உரிய அனுமதியைப் பெற்றே நுழைவார்கள்.

மாணவர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்ள வேண்டி ஏற்பட்டமை கவலை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது.

இந்தச் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களில் மருத்துவபீட மாணவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூவரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கின்றனர்.” என்றும் அவரமேலும் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email