SHARE

சிறிலங்காவின் பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு தென்னாபிரிக்க வழக்கு மையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளி ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை தென்னாபிரிக்க வழக்கு மையத்தின் பணிப்பாளர் நிகோல் பிரைட்ஸ், தென்னாபிரிக்க அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

தற்போது ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு எதிரான பரப்புரைகளில், மனிதஉரிமைகள் பவுண்டேசன், குவாடெங் தமிழ் கூட்டமைப்பு, தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவைக்கும் இந்தப் பரப்புரைகள் மற்றும் தென்னாபிரிக்க வழக்கு மையத்தின் எதிர்ப்புக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளதாகவும், அந்த நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு தென்னாபிரிக்க அதிபர் பணியகத்துடன் அல்லது அனைத்துலக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான திணைக்களத்துடன் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் முயற்சியிலும் தென்னாபிரிக்க வழக்கு மையம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Print Friendly, PDF & Email