அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகள் சுவர்க்கத்தை போன்றது. எனினும் நௌறு தீவு நரகத்தை போன்றது என்று அங்கிருந்து இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளரான சிங்களவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு தொடுதுவ என்ற மீனவக் கிராமத்தில் இருந்து புகலிடக் கோரிக்கையாளராக அவுஸ்திரேலியாவுக்கு சென்று நௌறு தீவுக்கு மாற்றப்பட்டமையால், மீண்டும் இலங்கை திரும்பிய அந்தனி சுஜித் என்பவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொக்கோஸ் தீவுகளில் உள்ள குடிவரவு முகாம் சுவர்க்கத்தை போன்றது. அங்குள்ளவர்கள் நல்லவர்கள். உணவு, உடை, விளையாட்டு, ஆங்கில கற்கை நெறி என்று அனைத்தும் அங்கு சிறப்பாக இருந்தன.
எனினும் நௌறு தீவு, மோசமான நிலையைக் கொண்டது. பாம்புகளும் மிருங்களும் அங்கு நிறையவே உள்ளன உரிய வீட்டு வசதிகள் இல்லை. இந்தநிலையிலேயே உரிய தொழிலை தேடமுடியாது என்ற காரணத்தினால் இலங்கை திரும்பியதாக சுஜித் குறிப்பிட்டுள்ளார்.
நௌறு தீவில் இருந்து கடந்த வாரம் இலங்கை திரும்பிய 18 இலங்கையர்களின் சுஜித்தும் ஒருவராவார். இதேவேளை தாம் ஆட்கடத்தல்காரர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பியே அவுஸ்திரேலியா சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையில் தமது வருமானத்தைக் கொண்டு மனைவி பிள்ளைகளை காப்பாற்ற முடியாது என்றக் காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா சென்று முடிவெடுத்ததாகவும் சுஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 31 இலங்கையர்கள் நௌறு தீவுகளுக்கு மாற்றப்பட்டனர்
அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்க முயன்ற, இலங்கையர்களில் மேலும் 31 பேர் நேற்று நௌறு தீவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றுமுன்தினம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இவர்கள் நௌறு தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடிவரவுக் கொள்கையின் பின்னர், 5 வது புகலிடக்கோரிக்கையாளர் குழு நௌறு தீவுக்கு மாற்றப்பட்டுள்ளது.