SHARE

மிக அண்மைக்காலம் வரை சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் அகதித் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்கள் போன்றோரும் சிறிலங்காவை விட்டு புலம்பெயர்வது அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு பிபிசியின் முன்னாள் செய்தியாளர் Frances Harrison* அண்மையில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும், அவரது மனைவி மற்றும் ஒன்பது வயதேயான பிள்ளையும் தமது கைப்பெட்டிகளுடன் ஒரு நாள் இரவு முழுவதையும் பாரிசிலுள்ள பூங்கா ஒன்றில் கழித்தனர் என்கின்ற இதயத்தை வெடிக்கச் செய்யும் தகவலை நான் அண்மையில் மின்னஞ்சல் மூலம் பெற்றிருந்தேன்.

உணவு விடுதி ஒன்றில் பகுதி நேரமாக பாத்திரங்களைக் கழுவுகின்ற வேலையை இந்த ஊடகவியலாளர் இழந்த பின்னர், இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வார இறுதி நாள் என்பதால் குறிப்பிட்ட அன்றைய தினம் ஊடக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த காரணத்தினாலும், குறிப்பிட்ட சிறிலங்கா ஊடகவியலாளரின் கைத்தொலைபேசியானது அதன் செலவைக் குறைப்பதற்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாலும், உடனடியாக இவருக்கான அவசர உதவியைப் பெற்றுக் கொடுப்பது கடினமாக இருந்தது.

பாரிசில் தங்கியிருந்த இந்த ஊடகவியலாளர் சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என்பது முதலில் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய விடயமாகும்.

சிறிலங்காத் தீவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், இதில் சிங்களவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் இந்நிலையில் வெற்றி பெற்ற, பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தனது சொந்த நாட்டில் வாழமுடியாது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதானது மிகவும் ஆச்சரியத்தை தருகின்றது.

மிக அண்மைக்காலம் வரை சிறிலங்காவிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் அகதித் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்கள் போன்றோரும் சிறிலங்காவை விட்டு புலம்பெயர்வது அதிகரித்து வருகின்றது.

தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கான கருவியாக சிறிலங்கா அரசாங்கமானது இராணுவத் தீர்வைப் பயன்படுத்தியதை எதிர்க்கின்ற, பாரிசில் நிர்க்கதியாகியுள்ள சிறிலங்கா ஊடகவியலாளர் போன்ற பல தாராளவாத, மிதவாத மனப்பாங்கைக் கொண்ட செயற்பாட்டாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரித்திருந்தால் அவர்கள் தமது சொந்த நாட்டில் சொகுசு வாழ்வை வாழ்ந்திருக்க முடியும்.

இதற்குப் பதிலாக அவர்கள் ‘பிறிதொரு’ சமூகத்திற்காக குரல் கொடுத்ததால் இன்று தமது நியாயத்தை நிலைநாட்டுவதற்காக தம்மை அர்ப்பணித்து, இதற்காக மிகப் பாரிய விலையை வழங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு நியாயத்தை தட்டிக் கேட்ட சிறிலங்கர்கள் பலர் தமது சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட பல சம்பவங்களும் நடந்துள்ளன.

சிறிலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள தமிழ் ஊடகவியலாளர்களும் இவ்வாறான கடினங்களை எதிர்நோக்குகின்ற போதிலும், இவர்களை ஆதரிப்பதற்கு குறைந்தது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளாவது உள்ளனர். ஆனால் சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்லும் சிங்கள ஊடகவியலாளர்களைத் தாங்குவதற்கு வெளிநாடுகளில் எந்தவொரு சமூகத்தவரும் இல்லை என்பதே உண்மையாகும்.

உளவியல் ரீதியாக நோக்கில், தமது சொந்த நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. தமிழ் ஊடகவியலாளர்கள் எப்போதும் சிறிலங்காவை விட்டுத் தப்பிப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆனால் சிறிலங்காவை விட்டு வெளியேற்றப்படும் சிங்கள ஊடகவியலாளர்களின் கதை இதற்கு மாறுபட்டது.

2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாண்டு ஆரம்பத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது சிறிலங்காவுக்கு எதிராக அழுத்தத்தை பிரயோகித்ததுடன் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருந்தது.

இதன் போது சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட, லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா தொலைக்காட்சியில் தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டார்.

இவர் சிறிலங்காவிலிருந்து மீண்டும் லண்டனுக்கு வந்தபோது இவர் தங்கியிருந்த இடத்திலிருந்த ஏனைய முப்பது சிங்களக் குடும்பங்களில் ஒரு குடும்பம் தவிர ஏனைய குடும்பத்தவர்கள் இவருடன் பேசுவதைத் தவிர்த்தன. அத்துடன் இவர் சிங்களவர் என்ற காரணத்தினால் பிரித்தானியாவில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஏனெனில் இவ் எரிபொருள் நிலையங்களில் பெரும்பாலானவற்றுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே உரிமையாளர்களாக இருப்பதால் சிங்களவர் என்ற காரணத்தினால் இவரைப் பணியில் அமர்த்துவதற்கு மறுக்கின்றனர். இதனால் தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக் கொள்வதிலும் குறித்த சிங்கள ஊடகவியலாளர் பெரும் இன்னல்களைச் சந்திக்கின்றார் என்பதை நானறிவேன்.

சிறிலங்காவில் நான் சந்தித்த பல ஒளிப்படக் கலைஞர்களும், ஊடக ஆசிரியர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐரோப்பாவில் உள்ள பண்ணைகளில் பழம் பறித்தல், தொழிற்சாலைகளில் கழிவுகளை அகற்றுதல், சுத்தம் செய்தல், கடைகளில் பணிபுரிதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதை நானறிவேன்.

அவர்கள் தமது வாழ்வில் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். ஆனால் அந்நிய தேசத்தவர்களின் இரக்கத்தையும், அன்பையும், பரிசுகளையும் பெறுகின்றனர். அவுஸ்திரேலிய பண்ணை ஒன்றில் பணிபுரியும் சிங்கள ஒளிப்படக் கலைஞர் ஒருவரின் வரலாற்றை அறிந்து கொண்ட அவரது முதலாளி தனது பிறந்த நாள் பரிசாக புதிய ஒளிப்படக் கருவி ஒன்றை வழங்கியிருந்தார்.

இதேபோன்று நோர்வேயிலுள்ள நூலகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான இறுதிக் கட்ட யுத்தத்தில் தனது எல்லா உடைமைகளையும் இழந்து தற்போது நோர்வேயில் வாழும் லோகீசன் என்கின்ற தமிழ் ஒளிப்படக் கலைஞருக்கு ஒளிப்படக் கருவி ஒன்றை வாங்கினர்.

முன்பு குறிப்பிட்ட பரிசில் உள்ள சிறிலங்கா ஊடகவியலாளருக்கு நோபளி ஒருவர் தனது சிறிய வீட்டில் தங்க இடம் கொடுத்திருந்தார். இதன் பின்னர் தமிழ் ஊடகவியலாளர்கள் இணைந்து குறித்த சிங்கள ஊடகவியலாளருக்கு பரிசில் தற்காலிகமாகத் தங்குவதற்கான இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தனர். இது அசாதரணமான சம்பவமாகும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தற்போதும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்கிவருகின்றனர். குறிப்பாக இவர்கள் தங்குவதற்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் ஈடுபடுகின்றனர். மீளிணக்கப்பாடு என்பது பெருமளவில் பேசப்படுகின்ற போதிலும் செயலளவில் இது மிகக் குறைவானதாகும். பல பத்தாண்டுகளாக ஏற்பட்ட கசப்புணர்வையும், குருதி சிந்தியதையும் வெல்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

சிறிலங்காவை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் தமக்கிடையே உதவிகளை பரிமாறிக் கொள்வதுடன், பொதுவான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

சிறிலங்காவின் யுத்த வலயத்தில் வளர்ந்த தமிழ் ஒளிப்படக் கலைஞரான லோகீசன் நோர்வேயில் அரசியல் தஞ்சம் புகுவதற்கு சிங்கள ஊடகவியாளர் ஒருவரே உதவிபுரிந்துள்ளார். அதாவது ஸ்கைப் மூலம் சிங்கள ஊடகவியலாளருடன் தொடர்பை ஏற்படுத்திய லோகீசன் சிறிலங்காவிலிருந்து தப்பிச் செல்வதற்குத் தேவையான விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் நிரப்புவதில் இவரது உதவியைப் பெற்றுக் கொண்டார். யுத்தவலயத்தில் வாழ்ந்த லோகீசன் சிங்கள ஊடகவியலாளர் ஒருவரை தனது நண்பராகக் கொண்டிருப்பது இதுவே முதற்தடவையாகும். தற்போது இவர்கள் இருவரையும் பிரிக்கமுடியாது.

பிரித்தானியாவில் உள்ள எனது சிங்கள ஊடகவியலாள நண்பன் ஒருவர் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை சந்திக்க ஏற்பாடு செய்தார். இத்தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்காவில் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்ததை நான் அவரது உடலில் காணப்படும் வடுக்களின் மூலம் அறிந்துகொண்டேன். இத்மிழ் ஊடகவியலாளரின் முழங்கால் சில்லுகள் தாக்கப்பட்டிருந்தன. அத்துடன் இவரது பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டதாக கூறினார்.

அகதித் தஞ்சம் கோரி பிரித்தானிய விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் ஒவ்வொருவரும், குறித்த தமிழ் ஊடகவியலாளர் வேதனை தாளாது வாய்விட்டு கத்தும் சத்தம் கேட்டு இரவில் திடுக்கிட்டு விழிக்கின்றனர். எனது சிங்கள நண்பர் இத்தமிழ் ஊடகவியலாளருக்கு துணையாக உள்ளதுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் கையெழுத்திடுவதற்காக இவரை அழைத்துச் சென்று வருகின்றார். இவர் சிறிலங்கா அரசாங்கத்தால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதன் பின்னர் கடந்த நான்கு மாதங்களின் முன் பிரித்தானியா வந்தடைந்திருந்தார்.

இவரது உடலம் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. இவரது வலது கை நிரந்தரமாக செயலற்றுவிட்டது. சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்திருக்கலாம். ஆனால் ஊடகவியலாளர்களைப் பொறுத்தளவில் சிறிலங்கா பாதுகாப்பற்ற இடமாகவே தற்போதும் உள்ளது.

Print Friendly, PDF & Email