SHARE

நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாக செயற்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவடைந்த பின்னரும் முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த மக்களின் ஆணைக்கு மாறாக, விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கட்சியும் சுயநலமாக நடந்துகொண்டிருக்கிறது.

இவ்விடயத்தில் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. பல விடயங்களை எதிர்பார்த்துத்தான் நாங்களும் இருந்தோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து, தனித்து போட்டியிட்டதால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

தமது தனித்துவ கட்சியின்மீது கொண்டிருந்த நம்பிக்கையினால்தான் முஸ்லிம்

மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களித்தனர் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிடக்கூடாது.

மக்களின் ஆணையை புறந்தள்ளி முடிவெடுத்துவிட்டு, முஸ்லிம் மக்களின் நலன்கருதியே அவ்வாறு செயற்பட்டதாக ஹக்கீம் கூறியிருக்கிறார். இது நலன்கருதிய தீர்மானமல்ல, சுயநலமான தீர்மானமாகவே எங்களுக்குப்படுகிறது.

தங்களுடைய சொந்த தேவைகளுக்காகவும் பதவிகளுக்காகவுமே அவர்கள் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பேரம் பேசும் சக்தி பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அதிகமாக பேசியது. ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் கிடைத்தன. எங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காகத்தான் இப்பொழுதும் பொறுமை காத்திருந்தோம்.

ஆனால், முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறித்துக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் எதனை வைத்து பேரம் பேசுகிறது என்று புரியவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.

ஆனால், அதனைக்கூட தட்டியொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம். இதுதான் அவரது பேரம் பேசும் திறமையா?

கட்சியை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என்றார் சம்பந்தன்.

Print Friendly, PDF & Email