SHARE

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

பனை அபிவிருத்திச்சபையின்  தலைவராக செல்வின் இரேனியஸ்சை கடந்த மாதம் அமைச்சர் விஜிதஹேரத் நியமித்தபோது பனை அபிவிருத்திச்சபைக்கு விடிவுகாலம் பிறந்திருப்பதாகவே நாம் நினைத்தோம். ஆனால், இருவார காலத்துக்குள்ளாகவே அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் போலப் பொருத்தமற்ற ஒருவர் பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

இந் நியமன மாற்றத்தின் மூலம்  பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சி மேலும் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. எமது மக்களில் சிலரும் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது.  

பனை வளத்துறை முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொண்டு அதனை வினைத்திறனுடன் இயங்கவைத்து அதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

இதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த தொழிற்சங்கவாதி கே.சி.நித்தியானந்தா முதலாவது தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றினார். அதன் பின்னர் தலைவர்களாக இருந்த நடராஜா, கோகுலதாசன் போன்ற  ஒருசிலரைத்தவிர பனை அபிவிருத்திச்சபைக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இதற்குப் பொருத்தமற்றவர்களாகவே இருந்தார்கள். தென்னிலங்கை அரசியல் கட்சிகளில் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றவர்களும் அக் கட்சிகளின் விசுவாசிகளுமே வேறு போக்கிடமின்றி நியமனம் செய்யப்பட்டதுபோல இங்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். 

பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. நீரைப் பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயே நிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதானமான பொருளாதார வளமும் பனைதான். ஆனால் பனை இன்று தேடுவாரற்ற, ஒதுக்கப்பட்ட மரம் போல் ஆகிவருகிறது. 

பனை அபிவிருத்திச்சபை இப்போது இருப்பது போன்றே தொடர்ந்தால் பனை மரத்துக்குச் சாபவிமோசனமே கிடையாது. மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பனை அபிவிருத்திச்சபையைத் தொடர்ந்தும் நம்பாமல் மாகாண நிர்வாகத்தின் கீழ் அல்லது சுயாதீனமாகவேனும் பனை வளத்தைப்பேணிப் பனைப் பொருளாதாரத்தை ஊக்குவிற்பதற்கு ஒரு அமைப்பை நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். துறைசார் வல்லுநர்கள் இதற்கு முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார். 

Print Friendly, PDF & Email