SHARE

மக்களைச்  சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மைய நாட்களாக இடம்பெற்ற திடீர் புகையிரதப் பணிப்புறக்கணிப்பு காரணமாக பெருமளவான பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சில தொழிற்சங்க தலைவர்கள் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பேரில் எடுக்கப்படும் தீர்மானங்களினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களை ஒடுக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும்  போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் வலியுறுத்தியுள்ளார்.

Print Friendly, PDF & Email