
உலகமெங்குமுள்ள கால்ப்பந்து ரசிகர்கள் இன்று இரு பெரும் திருவிழாவை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஆம்! ஐரோப்பாவின் கால்பந்து சம்பியன் யார்! என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும் தென் அமெரிக்காவின் (கோபா அமெரிக்கா) கால்பந்து சம்பியன் யார்! என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும் இன்று நடைபெறவுள்ளன.
அந்தவகையில் ஐரோப்பியன் சம்பியன் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து- ஸ்பெயின் அணிகளும் மறுபக்கத்தில் கோபா அமெரிக்கன் சம்பியன் தொடரின் இறுதியில் உலக்கிண்ண சம்பியன் ஆர்ஜன்டீனா – கொலம்பியா அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் இன்று இங்கிலாந்து நேரப்படி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பேர்லின் ஒலிம்பிக் அரங்கை இன்று அலங்கரிக்கும் சம்பியன் கிண்ணத்தை இன்று இங்கிலாந்து முதன் முதலாக தனது நாட்டிற்கு எடுத்து வரப்போகிறதா! அல்லது ஸ்பெயின் மீண்டுமொருமுறை கிண்ணத்தை எடுத்துச்செல்லவுள்ளதா! என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இவ் ஐரோப்பிய சம்பியன் தொடரில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆவது (2020 இல் நடைபெறவேண்டிய தொடர் கொரோனா காரணமாக 2021 இல் நடைபெற்றது) தொடரிலேயே முதன் முதலாக இறுதிப்போட்டியை களம் கண்ட இங்கிலாந்து அதில் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பை இத்தாலியிடம் (பெனால்டி) பறிகொடுத்தது.
இந்நிலையில் 17 ஆவது தொடரான நடப்பு தொடரிலும் மீண்டும் அதே உத்வேகத்துடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது இங்கிலாந்து. இளம் வீரர்களுடன் அவர்களின் துடிப்பான உத்வேகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இங்கிலாந்து இன்று இறுதிப்போட்டியிலும் ஆச்சரியம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் தொடரின் கடந்த போட்டிகளையும் நெதர்லாந்துடனான அரையிறுதி ஆட்டத்தையும் பார்க்கும் போது இங்கிலாந்து சற்று மந்தகதியான ஆட்டப்போக்கையே வெளிப்படுத்தியது.
இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான அணித்தலைவர் ஹரிக்கேய்ன் இத்தொடரில் தனது ஆட்டத்திறனை முழுமையாக வெளிப்படுத்த தவறியே வருகின்றார். சிறந்த பாசராகவும் சிறந்த ஸ்கோர் பினிசராகவும் திகழும் அவர் இத்தொடரில் தடுமாற்றத்தையே வெளிப்படுத்தி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
நெதர்லாந்துடனான அரையிறுதியாட்டத்தில் பயிற்றுவிப்பாளர் இறுதியில் அவரை வெளியில் எடுத்து மாற்று வீரரை களமிறக்கியதே அணியின் வெற்றிக்கு வித்திட்டது இங்கு குறிப்பிடப்படவேண்டியது.
இன்றைய போட்டியில் ஹரி முழுமையானதொரு ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அதிசயங்களை நிகழ்த்த தவறினால் அது ஸ்பெயின் வெற்றியை உறுதி செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஹரியின் ஆட்டத்தில் இன்று மாற்றம் காணப்டாவிட்டால் அவரை முன்னராகவே மாற்றீடு செய்வதே பயிற்றுவிப்பாளரின் சாதூரியமாக அமையும்.
தவிர, அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான சாக்கா. பெல்லிங்கம் மற்றும் ஃபோடன் ஆகியோரும் இன்று தமது ஆட்ட வேகத்தை துரிதப்படுத்த வேண்டும். ஸ்பெயின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் அதே எதிர் வேக ஆட்டத்தை இங்கிலாந்து வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றியை நெருங்க முடியும் என்பது எனது கணிப்பு.
அதேநேரம் இங்கிலாந்து அணியின் பின்கள தடுப்பில் பெரும் ஓட்டை ஒன்றே இத் தொடர் முழுவதும் காணப்படுகின்றது. காரணம் இங்கிலாந்து வீரர்கள் வேகமாக ஓடுவதை விரும்புகிறார்கள் இல்லை என்றே தோன்றுகின்றது. பந்து எதிர்க்களம் நோக்கி முன்னேறும் போது வேகமாக முன்னேறிச் செல்லும் பின்கள வீரர்கள், பின்னர் பந்து எதிரணியிடம் சேரும் போது அதே வேகத்துடன் பின்களத்தை பலப்படுத்த தவறிவருகின்றனர். இது கவனிக்கபடவேண்டியதே.
இவற்றுக்கிடையில் இன்றைய ஆட்டம் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி பெனால்ட்டி உதைக்கு நகராமல் முன்னரே வெற்றியை தனதாக்க இங்கிலாந்து முனைப்பெடுக்க வேண்டும். மாறாக பெனால்டியில் இங்கிலாந்தின் எந்தவொரு வீரர்களையும் நம்ப முடியாத ஒரு நிலையே உள்ளது.

மறுபக்கத்தில் 3 முறை இச் சம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் இம்முறையும் அதனை தனதாக்கி ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தை அதிகமுறை (4) வென்ற அணி எனும் பெயரை தனதாக்க உத்வேகத்துடன் காத்துள்ளது.
துடிப்பான இளம் வீரர்கள் கொண்டு மிரட்டும் ஸ்பெயின் இன்று இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக விளங்குவதுடன் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காலிறுதியில் ஜேர்மன், அரையிறுதியில் பிரான்ஸ் என பலம் பொருந்திய அணிகளை வெற்றி கண்டு வந்த ஸ்பெயின் இன்று இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட காத்திருக்கும்.
இதில் இன்று ஸ்பெயின் இளம் வீரர் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லெமின் ஜமால் மீது அதிக நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அரையிறுதியில் பிரான்சின் தோல்விக்கு வித்திட்ட அவர் இறுதிப்போட்டியிலும் ஸ்பெயினை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்; என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை ஸ்பெயின் வெற்றியை உறுதி செய்யும் போர்வீரன் ஜமாலே என அந்த ஒற்றை வீரன் மேல் அவரின் தோள் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள பெரும் அழுத்தமே இன்றைய ஆட்டத்தில் அவரை நிலைகுலைய வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தனது 16 ஆவது வயதில் அதிரடிக் கோலினைப் போட்டு ஸ்பெயினை இறுதிப்போட்டிக்குள் அழைத்துச் சென்ற ஜமால் இன்று தனது 17 ஆவது வயதில் ஜரோப்பியக் கிண்ணத்தை கரங்களில் ஏந்துவாரா என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது.
தனது 15 ஆவது வயதில் ஸ்பெயின் அணிக்காக இரு கோல்களையும் 16 ஆவது வயதில் ஸ்பெயினுக்காக மேலும் ஒரு கோலினையும் அதாவது அரையிறுதியில் பிரான்சிற்கு எதிராக அவர் போட்ட 3 ஆவது கோலினையும் போட்ட ஜமால் நேற்றைய தினம் 13 யூலை தனது 17 ஆவது பிறந்தநாளினை கொண்டாடினார்.
இரு அணிகளும் இதுவரையில் 27 போட்டிகளை களம் கண்டுள்ளன. அதில் 14 போட்டிகளை இங்கிலாந்தும் 10 போட்டிகளை ஸ்பெயினும் வெற்றி கொண்ட அதேவேளை 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இரு அணிகளும் மோதிய இறுதியான 5 ஆட்டங்களிலும் (2011 – 2018) தலா இரு வெற்றிகளும் ஒரு சமநிலையும் கண்டுள்ளன.
இந்நிலையில் முதன்; முறையாக கிண்ணத்தை தனதாக்கும் கனவுடன் சொந்தமண் அல்லாது வெளிநாடு ஒன்றில் பெரும் தொடரின் இறுதிப்போடியில் இன்று முதன் முதலாக களம் காணும் இங்கிலாந்தும் – 4 ஆவது முறையாக கிண்ணத்தை தனதாக்க துடிக்கும் ஸ்பெயினும் மோதவுள்ள இறுதியாட்டம் எந்த முடிவை கால்பந்து ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது என்பதை இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதேவேளை ஜேர்மனியில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள போதிலும் இங்கிலாந்திலும் ஸ்பெயினிலும் ரசிகர்கள் திருவிழாவை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
-சுகிர்தன்