SHARE

வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் குறித்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக தனியார் காணி ஒன்றில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன.

வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து குறித்த அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இரண்டு பேகோஹோ இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆயுதங்கள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும்  இதனால் தோண்டப்பட்ட இடங்களை மீண்டும்  மூடும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.