முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்று (14.08.2023) இந் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், உயிரிழந்த உறவுகளுக்கு சுடர்யேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் அனுஸ்ரிக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை.
குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (14.08.2023) மதியம் 12 மணியளவில் செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.