மன்னார் புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தால் பாதிக்கப்பட்ட தமது வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமாறு கோரி, அப்பிரதேச மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
விண்ட்போஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிருரெஸ் பவர் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 15 மெகாவோட் மின்னுற்பத்தி நிலையம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைக்கப்பட்டுள்ள காற்றாலை கோபுரங்கள் தமது வாழ்வை சீர்குலைத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் போராட்டகாரர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
அவற்றுள் 2 கோபுரங்கள் மக்கள் வசிக்கும் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் மாத்திரமன்றி அன்றாட வாழ்விற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்றாலை இயங்க ஆரம்பித்த நாள் முதல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் வருமானத்தை இழந்தனர். ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் சம்பாதித்தவர்கள் இப்போது 200 அல்லது 300 ரூபாயையே சம்பாதிக்கிறார்கள். சில நாட்களில் அதுவும் இல்லை. காரணம் இரண்டு காற்றாலை கோபுரங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ளன.
இரவில் மக்கள் தூங்க முடியாது. குழந்தைகள், பாலூட்டும் தாய்மார், பாடசாலை செல்லும் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.