SHARE

தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றான கறுப்பு யூலை படுகொலை இடம்பெற்று 40 ஆண்டுகால வலிசுமந்த நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவின் பெருநகர மத்தியில் இன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் நீதி வேண்டு எழுச்சி பேரணி ஒன்றை நடத்தினர்.

ஈழம் அமைதலே தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கான ஒரே தீர்வு அத்துடன் இலங்கையில் சுபீட்சத்திற்கும் ஸ்திரத்தன்மைக்குமான பாதையம் இதுவேதான் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசிற்கும் சர்வதேசத்திற்கும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரோடு ரயர்கள் போட்டு எரித்து கொல்லப்பட்டதுடன் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

இந்நிலையிலேயே இந்த மாபெரும் இனப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரையில் எந்தவித நீதியும் கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் இன்று மாலை Trafalgar சதுக்கத்தில் எழுச்சி பேரணியில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணியளவில் பிரத்தானிய கொடி மற்றும் தமிழீழ தேசிய கோடி ஆகியன ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் சங்கங்கள் போன்ற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்திய இந்நிகழ்வில் இனப்படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுத்திய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உரைகள் இடம்பெற்றதுடன் தமிழர் மீதான படுகொலைகளை மாணவர்கள் கலை வடிவில் வெளிப்படுத்தினர். அதேவேளை 1983 இனப்படுகொலையின் பதிவுகளை சுமந்த விளக்க புகைப்பபட கண்காட்சியும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இலங்கை வரலாற்றில் கறுப்பு யூலையின் முக்கியத்துவம் பல தசாப்த கால யுத்தத்தில் கறுப்பு யூலையின் தாக்கம் தமிழர்கள் நீதி மற்றும் உரிமைகளை தேடிக்கொண்டிருக்கும் இடம் எப்படி நமது இலக்குகளை அடைவோம் ஆகிய கருப்பொருட்களை உள்ளடக்கி  Dr மதுரா இராசரத்தினமும் 1983 இனக்கலவரத்தின் போது தனது நேரடி அனுபவத்தை திரு தணிகாசலமும் நிகழ்த்தினர். அத்துடன் சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டம் போன்ற சட்டத்துறைகளில் சர்வதேச சட்ட நிபுணரான Toby Cadman , மற்றும் PEARL அமைப்பின் பரதிநிதி அபிராபி ஆகியோரும் சிறப்புரைகள் ஆற்றினர்.

Print Friendly, PDF & Email