SHARE
image_pdfPRINT

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்தள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பகுதியில், கடந்த 3 ஆம் திகதியன்று மக்கள் சந்திப்பில், ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் காண்பிக்காத ஒருவர், துப்பாகியைக் காண்பித்து தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின், யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று முன்தினம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொள்ள மருதங்கேணி பொலிஸாருக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நான்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பொலிஸார் இன்று தமது காரியாலயத்தில் முன்னிலையாக உள்ளதாக, அறியப்படுத்தியுள்ளனர் என்றும் கனகராஜ் தெரிவித்தார்.

சாதாரணதரப் பரீட்சைக் கடமைகளின் நிமிர்த்தம், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்துள்ள ஏனைய இரு அதிகாரிகளும், பிறிதொரு தினத்தில் முன்னிலையாக உள்ளதாக அறியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.