SHARE

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் குறித்து தம்மிடத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமை இந்த சம்பவத்தின் ஊடாக மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  “அவருக்கு நாடாளுமன்ற சிறப்புரிமையின் பிரகாரம், நாடாளுமன்றுக்கு வருகை தர முழு உரிமையுள்ளது.

இவ்வாறான நிலையில், அவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக நான் இங்கு கதைக்கப் போவதில்லை.

எனினும், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நாடாளுமன்றுக்கு வருகைத் தந்து இங்கு உரையாற்ற அவருக்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் உரையாற்றிவிட்டு, பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் வழங்குவதாக சபாநாயகருக்கும் அவர் அறிவித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

2015, மார்ச் 3 ஆம் திகதியன்றி, அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

அதங்கிணங்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றுக்கு வருகைத் தரவிருந்தபோது, அவரை கைது செய்யவோ விளக்கமறியலில் வைக்கவோ முடியாது.

சபாநாயகர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டக் கொள்கிறேன்.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை பாதுகாக்கவும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email