SHARE

இலங்கை அரசாங்கத்தினால் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்டது மற்றம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பது இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியயோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாக முன்வைத்து பிரித்தானிய பிரதமரிடம் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் இனப்படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் 14 ஆண்டுகள் நினைவு தினமான இன்று, இனப்படுகொலையை தடுப்பதற்கும் மற்றும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) செயற்பாட்டாளர்களால் இலண்டன் 10 டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திலேயே மேற்படி மனு கையளிக்கப்பட்டது.

குறித்த மனுவில் சிறிலங்காவால் நிகழ்த்தப்படுது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை பிரித்தானியா பாராளுமன்றில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில் அதனையும் உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் குறிப்படப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இனஅழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று, சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்” என்றும் இந்த கோரிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.

இதேவேளை கனடாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழின அழிப்பிற்கான நினைவாலயத்துடன் இணைந்து (Tamil Genocide Memorial, Canada) ICPPG பிரித்தானிய பிரதமரை நோக்கிய இணையவழி கையொப்ப போராட்டம் ஒன்றை முன்னரே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICPPG யின் செயற்பாட்டாளர்களான மநுமயூரன் கிருபானந்த மநுநீதி தலைமையில் நிலக்ஜன் சிவலிங்கம், ஜனனி செல்லத்துரை, தங்கவேலாயுதம் வானுசன், புகழினியன் விக்டர் விமலாசிங்கம் மற்றும் சிந்துஜா ஜெயன் ஆகியோரே பிரதமரிடம் மேற்படி மனுவினை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email