SHARE

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு இந்தியாவின் சென்னையில் டிஸ்கவரி புக் பலஸ் ஏற்பாட்டில் நடிகர் நாசர் தலைமையில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

டிஸ்கவரி புக் பலஸின் பிரபஞ்சன் அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் ஓவியர் மருது, இயக்குனர் கவிதா பாரதி, கவிஞர் மண்குதிரை, ஈழ எழுத்தாளர் தமிழ்நதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்வில் தலைமையுரையாற்றிய நாசர், பயங்கரவாதி நாவல் போன்ற இலக்கியம் வழியாகவே தமிழ்நாடு ஈழத்தை அறிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேவேளை ஓவியர் மருது, ஈழப் போராளிகளுடன் இருந்த கலை இலக்கிய உறவு குறித்தும் தீபச்செல்வனின் நடுகல் நாவலில் வரும் வெள்ளையன் என்ற அண்ணாவை தனது கைகளால் வரைந்த நிகழ்வையும் உணர்வு ததும்ப நினைவுகூர்ந்தார்.

ஈழ நிலத்தில் இறுதிப் போரில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அறவழிப் போராட்டத்தை நுணுக்கமாக பயங்கரவாதி நாவல் பதிவு செய்துள்ளதாக ‘த இந்து’ பத்திரிகையில் பணி புரியும் கவிஞர் மண்குதிரை நிகழ்த்தினார்.

தொகுப்புரையை வழங்கி கவிஞரும் இயக்குனருமான கவிதா பாரதி, பயங்கரவாதி நாவலின் முக்கிய பக்கங்களை நிகழ்வில் படித்ததுடன் கண்ணீருடன் உணர்வுபூர்வமான உரையாற்றினார்.

அத்தோடு கவிஞர் தமிழ்நதி, பல்வேறு அச்சுறுத்தல்களை தாண்டி ஈழ மண்ணில் இருந்து இயங்கும் தீபச்செல்வனின் மிக முக்கியமான நாவல் பயங்கரவாதி என்றும் யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிலையை பயங்கரவாதி பதிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

இறுதியாக நிகழ்வில் ஏற்புரை ஆற்றிய எழுத்தாளர் தீபச்செல்வன், இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட அச்சுறுத்தல்களை நினைவுபடுத்தியதுடன் ஈழ மக்களின் ஈழப் போராளிகளின் கனவுகளுக்காக தொடர்ந்தும் எழுதுவேன் எழுத்தே எனது ஆயுதம் என்றும் பேசினார். தீபச்செல்வன் முன்னர் எழுதிய நடுகல் என்ற நாவல் இலங்கையில் சிங்கள மொழி பேசும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க தீபச்செல்வனின் பேச்சால் அரங்கம் நெகிழ்ந்தது. நாவல் குறித்த கேள்வி பதில் உரையாடல் இடம்பெற்றதுடன் டிஸ்கவரி புக் பலஸ் பதிப்பாளர் வேடியப்பனின் நன்றி உரையுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.

Print Friendly, PDF & Email