SHARE

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பான ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் நிறைவடைந்த உள்ளுராட்சி சபைகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக உள்ளூராட்சி மன்றங்களைக் கலைப்பதற்கு சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களில் பல உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய விசாரணைகள் நிறைவடைந்த உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளை கலைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உள்ளூராட்சி சபைகளை கலைப்பது தொடர்பாக ஆளுநர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் தலைவர் அல்லது மேயர் மாத்திரம் மோசடி மற்றும் ஊழல் செய்திருந்தால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், முழு சபையின் அங்கீகாரத்துடன் ஊழல் மோசடி இடம்பெற்றிருந்தால், முழு சபையுமே கலைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email