SHARE

கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் முகமாக செயல்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் மத்திய செயல்குழு கூடி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அவர் தனது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓர் அங்கத்துவ கட்சியாக இருந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஒரு புதிய அணுகுமுறையை சிபாரிசு செய்திருக்கின்றார்கள்.

அதாவது இந்த தேர்தல் வட்டார அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற அந்த முறையில் ஒரு புதிய அணுகல் முறையை நாங்கள் பரீட்சித்து பார்க்க வேண்டும் – அதில் வெற்றி பெறவேண்டும் என்று எங்கள் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு அந்த சிபாரிசை செய்திருந்தது.

அந்த சிபாரிசின் அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அனைவருமாக இணைந்து பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று புதிய அணுகுமுறையை செயல்படுத்த விரும்பினோம். ஆனால், தமிழ்த் தேசிய கூட்ட
மைப்பிலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் அதில் அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்தார்கள்.

தேர்தலின் பின்னர், நாங்கள் ஒவ்வொருக்கொருவர் முரண்படாமல் பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட, கிழக்கில் ஒன்றுபட்டு ஆட்சியை அமைப்போம். இதற்காக, எங்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகள் ஏற்படாமல் – பிளவுகள் ஏற்படாமல் – ஒற்றுமையாக நாங்கள் மீண்டும் கூடி வட, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஓர் அணுகல் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என கோரி இருக்கின்றோம்.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் – ஏனைய கட்சிகளை விமர்சித்தல், முரண்பட்ட கருத்துகளை வெளியிடுதல் போன்ற செயல்பாடுகள் அண்மை நாட்களில் அதிகரித்து வருகின்றன. இந்த வகையில் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றார்கள். இன்று காலையிலும் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

சுமந்திரனின் அறிக்கை, தவராசாவின் அறிக்கையின் அடிப்படையிலும் மிகவும் அதிருப்தி அடைந்த மக்கள், அவர்களின் பிரதிநிதிகள், கட்சி பிரதிநிதிகள் என்னிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த மாதம் 11, 12 இல் மத்திய செயல்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சியை பிளவுபடுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தவர்கள், பிரசார மேடைகளில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளேன் என்றார்.

Print Friendly, PDF & Email