SHARE
செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2021 நிகழ்வு சனிக்கிழமை டிசம்பர் 10 ஆம் திகதி இலண்டனில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி TIC யின் இவ்வாண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு இலண்டனில் சட்டன் (Sutton) பகுதியில் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்றது. இந்த வருட நிகழ்வுகள் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி தேடல்” (Justice For Enfored Disappearance in Sri Lanka) என்ற தலைப்பில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஐ.நா நிபுணரும், பேராசிரியரும் அமெரிக்க சட்ட வல்லுனருமான அல்பிரட் மொறைஸ் டீ சயாஸ் (Prof Alfred-Maurice de Zayas), இலண்டன் பல்கலைக்கழகத்தின் (University of London – SOAS) சர்வதேச மனித உரிமைகள் சட்டதுறை பேராசிரியர் லூட்ஸ் ஓட்டே (Prof Lutz Oette), வெஸ்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் சட்டதுறை பேராசிரியர் ராதா டி சோய்சா (Prof Radha D’Souza), ஐனநாயகம் ஊடாக அமைதிக்கான விதவைகள் அமைப்பின் (Widows for Peace through Democracy) தலைவரும் வழக்குரைஞரும் மகாராணியின் சிறப்பு பட்டம் பெற்றவருமான மாகிரட் ஓவண் (Magret Owen OBE), பிரான்ஸ் தமிழ் மனித உரிமைகள் அமைப்பின் (TCHR) நிறுவனரும் செயலாளர் நாயகமுமான திரு. S. V. கிருபாகரன், சட்டன் பகுதி கவுண்சிலர் குமார் சகானத்தன், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஏனைய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் தகவல் நடுவம் மற்றும் சமூக அபிவிருத்தி மையத்தின் (CCD)யின் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மங்களவிளக்கேற்றல் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதான சிறப்புரையினை ஜனநாயக மற்றும் சமமான சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துவதற்கான ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் Alfred-Maurice de Zayas நிகழ்த்தினார்.

இதனை தொடர்ந்து இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சனைகள், நீதிக்கான போராட்டம் மற்றும் அச்சுறுத்தகள் என்பவற்றை எடுத்துக்காட்டும் முகமாக, சர்வதேச விருதுபெற்ற திரைப்பட இயக்குனரான கண்ணன் அருணாச்சலம் அவர்களால் வெளியடப்பட்ட, திருமதி அனந்தி சசிதரன் அவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் “இலங்கையில் போராளியின் மனைவி” (Sri Lanka, Rebels Wife) என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏனைய சிறப்பு அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன் இலங்கையில் இடம்பெற்ற மாபெரும் மனித உரிமை மீறலை சித்தரிக்கும் குறியீட்டு நடாகம் ஒன்றும் மெய்வெளி நாடகக்குழுவினரால் அரங்கேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, TIC யினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மனித உரிமைகள் விருது வழங்கும் விழாவும் இடம்பெற்றது. TIC யின் நிறுவுனர்களில் ஒருவரும் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான காலம்சென்ற உயர்திரு வைரமுத்து வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது (Varadhakumar Memorial Award 2022) இம்முறை பேராசிரியர் லூட்ஸ் ஒட்டே (Prof Lutz Oette) அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர் கடந்த காலங்களில் TIC உடன் இணைந்து மேற்கொண்ட இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆய்வுப்பணிக்கும், இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலை தொடர்பாக அவர் எழுதிய நூலுக்காகவும் (The International Crime of Genocide: The Case of Tamil People) அவருக்கு இந்த விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெறுவது “இனப்படுகொலை” என்பதை முதன் முதலில் சட்டரீதியாக நிறுவிய இந்த ஆய்வு நூலை 1998 மார்ச் மாதம் TIC வெளியீடு செய்திருந்தது. தனது ஏற்புரையில், இலங்கை இனப்படுகொலையை நிரூபிப்பதில் உள்ள சட்ட மற்றும் அரசியல் சிக்கல்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

இந்த வருடத்துக்கான முதலாவது மனித உரமைகள் விருது (TIC Human Rights Award 2022) 30 வருட அயராத மனித உரிமைகள் மற்றும் ஊடக பணிக்காக, மனித உரிமைசெயற்பாட்டாளர் மதிப்பிற்குரிய திரு ச. வி. கிருபாகரன் அவர்களுக்கு வழங்கி கொளரவிக்கப்பட்டது. அவர் தனது ஏற்புரையில் தனது நீண்டகால இடைவிடாத மனித உரிமைகள் பணியில் தான் சந்தித்த சவால்கள் பற்றி எடுத்துரைத்தார்.

அதேபோல இரண்டாவது மனித உரிமைகள் விருது, நீண்ட கால சமூக சேவைக்கும் அர்ப்பணிப்புக்குமாக, TICயின் மூத்த பணிப்பாளர்களில் ஒருவரும் 1983 இனக்கலவரத்தின் போது சிறையில் படுகொலை செய்யப்பட்ட வைத்தியகலாநிதி இராஜசுந்தரம் அவர்களின் சகோரதரரான திரு சோமசுந்தரம் கனகசுந்தரம் அவர்களுக்கும் வழங்கி கொளரவிக்கப்பட்டது. இவர்களை வைத்தியகலாதிநி தேவா நாதன் அவர்கள் அறிமுகம் செய்துவைக்க, TIC பணிப்பாளர்கள் விருதுகளை வழங்கி வைத்தனர்.

இறுதியாக TIC யின் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, நிகழ்வு மிகச்சிறப்பாக நிறைவுபெற்றது.

Print Friendly, PDF & Email