SHARE

சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தரகர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

இடைத்தரகருக்கான கட்டணத்துக்கு மேலதிகமாக சிறுநீரக கொடையாளிக்காக வழங்கப்படும் பணத்திலும் ஒரு பகுதியையும் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டு பணம் வழங்காமை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேர் பொரளை காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய ஒருவர் கைதானார். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு தரகர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களை இலக்கு வைத்து இந்த மோசடி செயற்பட்டு வந்துள்ளதாக தற்போதைய விசாரணைகளில், தெரியவந்துள்ளது.

சிறுநீரகம் தானம் செய்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து பணம் கேட்டபோது இனி பணம் கேட்கமாட்டோம் என சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.அதில் முன்னாள் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தலையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடத்தல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தவர்கள் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுநீரகங்களை தானமாக வழங்குவதற்கு முன்னர் தமக்கு பெரும் தொகை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவ்வாறு எந்த பணத்தொகையும் வழங்கப்படவில்லையென முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வறுமையில் உள்ள ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம் வெளிநாட்டவரொருவருக்கு பொருத்தப்பட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றையும் சுகாதார அமைச்சு நியமித்துள்ளதுடன், குறித்த தனியார் வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email