SHARE

-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இராணுவத்தால் நடத்தப்படும் ‘புனர்வாழ்வு’ மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குறித்த கண்காணிப்பகம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுத்து வைக்கப்படுபவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு, குறித்த புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலமானது, ‘புனர்வாழ்வு’ மையங்கள் இராணுவத்தினரை பணியாளர்களாக கொண்ட? பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படும் புதிய நிர்வாகக் கட்டமைப்பை நிறுவும்.

ஏற்கனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனித உரிமைகள் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் இந்த சட்டமூலமானது, புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுவதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் எந்தவொரு குற்றத்திலும் தண்டனை பெறாதவர்களை வலுக்கட்டாயமாக ‘புனர்வாழ்வு’ செய்வதற்கான தன்னிச்சையான அதிகாரங்களை வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உத்தேச புனர்வாழ்வு பணியக சட்டமானது, குற்றஞ்சாட்டப்படாத ஒருவரை தடுப்புக்காவலில் வைப்பதன் புதிய வடிவம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘புனர்வாழ்வு சட்டமூலம், சித்திரவதை, தவறான சிகிச்சை மற்றும் முடிவில்லாத காவலில் வைக்கப்படுவதற்கான கதவைத் திறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு சட்டமூலம் என்பது, இலங்கையில் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை அங்கீகரிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு நெருக்கமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email