SHARE

உலகத்தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நாளை வரவுள்ள தீர்மானம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் ஒரு தொடர்ச்சியான ஏமாற்றம். தமிழர்களுக்கு நடைபெற்ற இனவழிப்புக்கான எந்தவொரு பொறிமுறையும் அதில் இல்லை என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் உலகத்தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ மரியதாஸ் நமது ஈழநாட்டிற்கு தெரிவித்தார்.

பிரித்தானியா தலைமையிலான கனடா, அமெரிக்கா, ஜேர்மனி போன்ற 7 நாடுகளினால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பிலான இறுதிவரைபு மீதான வாக்கெடுப்பு நாளை ஐ.நா.வில் நடைபெறவுள்ள நிலையிலேயே இன்று ஜெனிவாவில் நமது ஈழநாட்டிற்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ‘பாதிக்கப்பட்ட தமிழர்’ என்ற வார்த்தைகூட இல்லாத இத்தீர்மானத்தை எங்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் இதனை நிராகரிக்க வேண்டும் என உலகத்தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது. அதேவேளை, இதனை ஆதரிக்கும் தமிழ் தரப்புக்கள் இனவழிப்பை மூடிமறைக்கும் நோக்குடனே செயற்படுகிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என அவர் கூறினார்.

இதேவேளை நாளைய வாக்கெடுப்பில் 16 முதல் 17 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைமை காணப்படுவதுடன் பிரித்தானியாவுடன் சேர்ந்து இயங்குகின்ற நாடுகள் உட்பட 18 லிருந்து 21 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளது. தவிர, 12-14 நாடுகள் பொதுநிலைமை காக்கவுள்ளன எனவும் அவர் கூறினார்.

இதனிடையே அடுத்த வருடம் மார்ச் மாதம் 2 ஆவதாக ஒரு தீர்மானம் கொண்டுவரவேண்டும். அதில் நாடு சார்ந்த விசேட பிரதிநிதியை நியமித்தல் இடம்பெறும். அதற்கு பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சரை நியமித்தால் அதனை சாத்தியப்படுத்தலாம். எனவே எல்லோரும் அதனை நோக்கி தொடர்ந்து செயலாற்றுங்கள் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Print Friendly, PDF & Email