SHARE

நிழல் அமைச்சர் மத்தியூ பெனிகுக் அவர்களுடனான (Hon. Matthew Pennycook MP) இளையோரின் இராஜதந்திர சந்திப்பின் வெற்றி

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் கிரீன்விச் மற்றும் வூல்விச் (Greenwich and Woolwich) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், வீட்டுத்திட்டங்களுக்கான நிழல் அமைச்சருமான (Shadow Minister for Housing & Planning) மதிப்பிற்குரிய மத்தியூ பென்னிகுக் (Hon. Matthew Pennycook MP) அவர்களுடன் பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட சந்திப்பு இன்று (08/12/2021) மதியம் மெய்நிகர்வழி (Zoom) ஊடாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் தொழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் (Tamils for Labour) பணிப்பாளர் திரு சென் கந்தையா, ICPPG யின் பணிப்பாளர் திருமதி அம்பிகை கே செல்வகுமார், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அண்மையில் இலங்கையில் சித்திரவதையில் இருந்து தப்பிவந்தவர்கள் என பலர் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைப்பு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய தருணம் வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

FCDO க்கு இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்வதற்கு அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன் எங்களுடைய கஷ்டங்கள் மற்றும் இழப்புகளை அவமதிப்பது போல் உள்ளது என்று திரு சென் கந்தையா அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் ICPPG யின் பணிப்பாளர் திருமதி. அம்பிகை கே செல்வகுமார் அவர்கள் இந்த ஆண்டில் மட்டும் 120க்கு மேற்பட்ட சித்திரவதைக்கு உள்ளாகி தப்பியவர்களின் வாக்குமூலங்களை ICPPG சேகரித்து இருப்பதாகவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு வழங்க தயாராக உள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் சவேந்திர சில்வாவை தடைசெய்வதற்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான கோபிநாத், துவாரகன் சிவகுமார், பிரியன், ஜானுஷ்டன் நவரத்தினம், சிவகுமார் ஸ்ரீபிரவீகரன், சுபதர்ஷா வரதராசா மற்றும் சுபமகிஷா வரதராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். சவேந்திர சில்வா தலைமையிலான படைகளினால் சித்திரவதைக்கு உள்ளப்பட்டோர் தங்கள் சித்திரவதை அனுபவங்களை பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்து கூறினர்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

கடந்த வருடம் முதல் சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்ய கோரும் இந்த முயற்சியை பிரித்தானியா வாழ் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததுடன் அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றர்.

இந்த முயற்சியின் பலனாக, 18 மே 2021 அன்று ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய மக்லோக்லின் ஆன் அவர்களால் பிரித்தானிய பாராளுமன்றில் முன்பிரேரணைக்கு ஒன்று (EDM 64) கொண்டுவரப்பட்டது. இளையோரின் விடாமுயற்சியால் இதுவரை இப்பிரேரணைக்கு 31 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு யூலை 23 ஆம் திகதி பிரித்தானிய பிரதமருக்கு ICPPG இன் ஆதரவுடன் மனுவொன்றினையும் சமர்ப்பித்திருந்தார்கள். அத்துடன் இளையோர் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய அனைவரின் ஆதரவினையும் கோரி காணொளி ஒன்றினையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் தற்போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் சவேந்திர சில்வாவினை தடை செய்யக் கோரி காணொளிகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வா மீதான தடை கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிட்டுள்ள காணொளிகள் பின்வருமாறு,

Rt.Hon.Sir Ed Davey MP ,Hon.stephen timms MP, Hon. Janet Daby, Gareth Thomas MP, Hon.Elliot Colburn MP, Hon.Theresa Villiers, Hon. Bob Blackman

Print Friendly, PDF & Email