SHARE

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10பேரும் இன்று  (புதன்கிழமை) பிணையில் விடுதலைசெய்யப்பட்டனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்து. வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் ஆஜராகிய சட்டத்தரணி க.சுகாஸ் விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email