SHARE

சிறீலங்காவில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அணுசரணை நாடுகளினால் சிறீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உன்னிப்பான கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறீலங்காவில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான  சாட்சியங்களை சேகரித்தல், பாதுகாத்தல் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுடைய செயற்பாட்டிற்கான நிதி தடையின்றி கிடைப்பதையும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகமாக ஒதுக்கப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் சிறீலங்காவில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை திரட்டுதல் மற்றும் பாதுகாத்தல் செயற்பாட்டுக்காக 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும், அச்செயற்பாட்டிற்கான நிதியை கூடுதலாக அளிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலாவாய அபிவிருத்தி இராஜாங்க அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்திற்கு அளித்துள்ள பதிலிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email