SHARE

சிறீலங்கா காவல்துறையினருக்கு பிரித்தானிய காவல்துறை பயிற்சியளிப்பது மீளாய்வு செய்யப்படுகிறது என்று வெளிவந்த செய்தியை பல பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ITJP) அமைப்பின் நிறுவனர் ஜஸ்மிந் சூக்கா உட்படப் பல மனித உரிமை அமைபுகளும் வரவேற்றுள்ளன.

சிறீலங்கா காவல்துறையினரின் விசேட படையணிக்கு (Special Task Force (STF)), ஸ்கொட்டிஷ் காவல்துறை, 2007 முதல் பயிற்சியளித்து வருகிறார்கள். இவர்களால் பயிற்றப்பட்ட படையணியே இறுதிப் போரின்போது, பிரித்தானிய தனியார் இராணுவமான கீனி மீனி யின் ஒத்துழைப்புடன் மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்திருந்தார்கள் எனப் பிரித்தானிய ஊடகவியலாளர் ஃபில் மில்லர்Keenie Meenie: Britain’s Private Army என்ற விவரணப் படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஸ்கொட்டிஷ் காவல்துறை பயிற்சியளிப்பதை மீளாய்வு செய்ய வேண்டுமெனப் பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஊடகவியலாளர்கள், மனித உரிமை அமைப்புகள் பலவும், மே 2021 முதல் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன. இப் பயிற்சி தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக அறிக்கையொன்று வந்திருக்கிறது.

2016 இல், ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் கூட்டத்துக்கு சிறீலங்கா பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் இறுதிப் போரின்போது மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்தவரென ஐ.நா. வின் பட்டியலில் இடம்பெற்ற ஒருவர். இதைத் தொடர்ந்துITJP அமைபைச் சேர்ந்த ஜஸ்மின சூக்கா ஸ்கொட்டிஷ் பொலிஸ் பயிற்சியை மீளாய்வு செய்யும்படி கோரியிருந்தார்.

பிரித்தானிய கூலிப்படையின் ஒத்துழைப்புடன், இலங்கைவிசேட பொலிஸ் படையணி செய்த அட்டூழியங்களை கீனி மீனி விவரணப்படம்மிகவும் வலிதரும் வகையில் வெளிப்படுத்தியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஸ்கொட்டிஷ் பயிற்சியை மீளாய்வு செய்யும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தன.

ஜெனிவாவுக்கு வந்த இலங்கையின் பிரதிநிதிகள், ஸ்கொட்லாந்தில் தமக்கு வழங்கப்படும் பயிற்சி பயங்கரவாதத்துக்கு எதிரான பயிற்சி எனப் பூசி மெழுகிவிட்டமையால் பிரித்தானிய அரசும் இவ்விடயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து இலங்கையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) செய்த பலவகையான கடத்தல்கள், சித்திரவதைகள், கொலைகள் ஆகியன பற்றியும், அவற்றைப் புரிந்தவர்களின் பெயர்களையும் ஆதாரங்களுடன் சேகரித்த ITJP, அவற்றைப் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமர்ப்பித்து, இலங்கைப் பொலிசாருக்கு பயிற்சியளிப்பதை நிறுத்தும்படி கேட்டிருந்தது.

அதே வேளை “இப் படைப்பிரிவு செய்த அட்டூழியங்கள் பற்றி நான் மேற்கொண்ட விசாரணைகளை ஸ்கொட்டிஷ் பொலிசார் உதாசீனம் செய்துவிட்டனர். ஆனால் ஹிட்லரைப் புகழும் ஒருவரை கடந்த மே மாதம் பொலிஸ் சேவைகளுக்கான ராஜாங்க அமைச்சராக இலங்கை நியமித்தது பிரித்தானியாவுக்குத் தாங்க முடியவில்லைப் போலும்” என (பயிற்சி மீளாய்வு பற்றி) ஊடகவியலாளர் ஃபில் மில்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

2012 முதல் ஸ்கொட்லாந்து பொலிஸ் திணைக்களப் பயிற்சிக்குழுக்கள் 90 தடவைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2021 இல் இதுபற்றி ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘கொறோணா தொற்று காரணமாக பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” எனப் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email