SHARE
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

இலங்கையின் வடக்கு கிழக்கை பெரிதும் பாதித்த புரேவி புயல், யாழ். குடாநாட்டின் வெளிவேட அபிவிருத்தியையும்,  அரச அதிகாரிகள்  , குடாநாட்டு மக்கள் , அரசியல் தலைவர்களினது பொறுப்பற்ற  செயற்பாடுகளை வெளிக்காட்டி கடந்துள்ளது.

இந்த தாக்கத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அன்றாடக்கூலித்தொழிலாளிகளை மட்டுமன்றி,  விவசாயிகள்,  மீனவர்கள்,  வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள்,  மருத்துவர்கள், தாதியர்கள் என ஒட்டுமொத்த மனிதர்களையும் பாரபட்சமின்றி பாதித்தும் , போதித்தும் நகர்ந்துள்ளது.

யாழ். குடாநாடு மலைகளோ,  நீர்வீழ்ச்சிகளோ,  ஆறுகளோ இல்லாத தட்டையான சுண்ணக்கல் படிமத்தால் உருவான பூமி. ஆனாலும் கடல்வளத்தைக்கொண்டிருப்பதாலும், அதன்மூலமாக ஏற்படும் பருவப்பெயர்ச்சிக்காற்று மழைவீழ்ச்சியின் செல்வாக்கும், , சுண்ணக்கல் தரையில் பொசிவடைந்து இங்கு தரைக்கீழ் நீர்வளத்தை தாராளமாக்கி,  உயிர்வாழ்தலை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இயற்கையாக கிடைக்கும் மழைநீரை ,யாழ். மண்ணின் பிரதான நன்னீர்தேக்கும் விருட்சங்களான பனை, தென்னை,மற்றும் பெரும் விருட்சங்கள், குளங்கள்,  கேணிகள், காணித்தடுப்புக்கள், சிறு குட்டைகள்,  கிணறுகள், வயல் காணிகள் போன்றவை தரைக்கீழ்நன்னீர்ப்பொசிவை ஊக்குவிக்கும் ஊக்கிகளாக செயற்படுகின்றன.

ஆனால் இந்த தரைக்கீழ் நீர்ப்பொசிவை ஏற்படுத்தும் இவ்வாறான ஊக்கிகளை நவநாகரீகம் என்றும் அபிவிருத்தி என்றும் கூறி படிப்படியாக அழிக்கத்தொடங்கியதால் இந்த முறை நிவார்புயலால் ஏற்பட்ட வெள்ளம், யாழ். குடாநாட்டையே வெள்ளக்காடாக்கி , அல்லோல கல்லோலப்படுத்தி விட்டது.

 இதற்கெல்லாம் என்ன காரணம்?

1.சிறந்த வடிகால் அமைப்பும் பராமரிப்பும் இல்லை.

2. குளங்கள், ,கேணிகள் போன்றவை அபிவிருத்தி என்ற போர்வையில் மூடப்பட்டமை.

3.கிணறுகள் இடத்தைப்பிடிப்பதாக கூறி, குழாய்க்கிணறுகள் அடித்தமை. 

4. இனப்பெருக்கத்தால் காணிகளைத்துண்டாடி , மலசலகூடம், ,குழாய்க்கிணறென புதிய குடும்பங்கள் பெருகியமை.

5. தடுப்பணைகளை சரிவரப்பேணாமையால், சமுத்திர நீர் குடாநாட்டுக்குள் ஊடுருவியமை.

6. சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை மக்களுக்கோ அரச அதிகாரிகளுக்கோ அரசியல் தலைவர்களுக்கோ இல்லாமை.

7 . துறைசார்ந்த அதிகாரிகளின் அசமந்தப்போக்கு

8. வயல்காணிகளை நிலக்காணிகளாக்கி கட்டிடங்களை கட்டியமை.

9. பாரிய கட்டிடங்களை கட்டுவதற்காக சுண்ணக்கல் படைகளை துளையிடல்.

இவ்வாறு பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

யாழ். குடாநாட்டின் வடிகால் அமைப்புக்கள், மலசலகூட அமைப்புகள், கட்டட அமைப்புகளை நோக்கும் போது, வடிகால் செயற்பாடு பூச்சிய நிலையிலேயே காணப்படுகிறது. அரச அதிபரோ, அரச அதிகாரிகளோ,  சுகாதாரப்பிரிவினரோ இதுபற்றி அக்கறைப்படுவது மிகக்குறைவு. வடிகால்களை ஆண்டுக்கு ஒருதடவையாயினும் புணரமைப்பதில்லை. வடிகால்கள் எங்கும் புற்களும், பாத்தீனியச்செடிகளும் பெருக்கமடைந்து வடிகால் கழிவு நீரில் உயிர்வாழ்கின்றன. இவை இக்கழிவு நீரினை தரைக்கீழ் நீருடன் பொசியச்செய்வதால்,  தரைக்கீழ் நீர்வளமும் மாசடைகிறது. நுளம்புக்குடம்பிகளும் கிருமிகளும் போட்டி போட்டு பெருகுமிடமாகவும் இந்த வடிகால்கள் விளங்குகின்றன. 

வடிகால்கள் ஒரு சீரமைப்போடு ஓடிக்கொண்டிருந்தால் இத்தத்துயரம் ஏற்படப்போவதில்லை. மக்களும் வர்த்தகர்களும் தம் குப்பைகளைப்போடும் குப்பைத்தொட்டியாக இந்த வடிகால்களுக்குள் போடுவதும் வேதனைமிக்க செயலாக அமைகிறது. இதனால் வடிகால்கள் அடைபட்டு கழிவு நீர் ஓடாதநிலையை ஏற்படுத்தியதால் நகர்ப்புறம் முழுதும் இந்தப்புரவிப்புயல் கால வெள்ளம் வெள்ளோட்டத்தை விட்டுக்காட்டி, வெட்கப்படுத்தி நகர்ந்துள்ளது.

அத்தோடு மலசலகூடங்கள் அமைப்பதிலும் குறைபாடுகளுண்டு. நகர்ப்புறத்தில் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடங்கள்,  விடுதிகள் பல தோன்றியதால் அங்கு பாரிய குழிகளைத்தோண்டி கட்டப்பட்ட மலசலகூடங்களால், நிலத்தடி நீருடன் மலமும் கலந்து தரைக்கீழ்நீர்வளத்தை நாசப்படுத்துகின்றது. இதனால் வாந்திபேதி, வயிற்றோட்டம், கொலறா போன்ற நோய்த்தாக்கங்களும் ஏற்படுகின்றன. இதே நிலையே கிணறுகளுக்கும் ஏற்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகளில் கிணற்றுநீருடன் மலநீர் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் அன்றாடக்குடிநீரை பணம் கொடுத்தே வாங்கிப்பருகும் நிலை தோன்றியுள்ளது. 

கடல்நீர் குடிமனைகளுக்குள் புகுந்து விடாதிருக்க கட்டப்படும் அணைக்கட்டுக்கள் சரிவரக்கட்டுப்படாத காரணத்தால்,  

கடல்நீர் குடிமனைகளைநோக்கி புகுவதால் தரைக்கீழ் நன்னீர் வளம் பாதிப்படைந்துள்ளது. யாழ். குடாநாடு தொண்டைமானாறு கடல்நீரேரி, ஆனையிறவுக்கடல்நீரேரி, உப்பாற்றுக்கடல்நீரேரி, பூநகரிக்கடல்நீரேரி என சுற்றிவர கடலாலும் கடல்நீரேரிகளாலும் சூழ்ந்த நிலப்பகுதியைக்கொண்ட ஒரு தீபகற்பம். இந்த கடல்நீரேரிகளை அண்டி அணைகளைக்கட்டி, ,கடல்நீர் உள்நுழையாது பாதுகாப்பது வழமை. இந்த வழமைகள் சீர்குலைந்ததால், உவர்நீர் தரைக்குகீழ் நன்னீர்வளத்தோடு இணைந்து தரைக்கீழ் நன்னீரின் சுவையிலும் தரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

அணைத்தடுப்பு வழியாக மட்டுமன்றி, அதிகரித்த

துளையிட்டு தோண்டிய  குழாய்க்கிணற்றுப்பாவனை, மின்சார மோட்டர்மூலமான நீர் உயர்த்துகை,  சிக்கனமற்ற நன்னீர்ப்பாவனை போன்றவற்றால் நன்னீர்வளம் சுருக்கமடைகிறது. இவ்வாறு நன்னீர் சுருக்கமடையும் போது அந்த சுருக்கத்தை நிரப்புவதற்கு உவர்நீர் உட்புகுந்து கொள்கிறது. இது பெரும் நீர்ப்பற்றாக்குறையையும் வாழ்தல் பிரச்சனையையும் ஏற்படுத்தியுள்ளது. யாழ். குடாநாட்டின் 65% மான கடற்கரையோரப்பகுதிகள் தரைக்கீழ்வள நன்னீர் இழப்பை எதிர்நோக்கியுள்ளன. தீவகப்பகுதிகள்,  குருநகர், பாசையூர்,  கொட்டடி, நாவாந்துறை, காக்கைதீவு, அராலி, பருத்தித்துறையின் சில பகுதிகள், பொலிகண்டி,  பூநகரி போன்ற கரையோரப்பகுதிகள் உவராக்கத்தால் பாதிப்படைந்து வருகின்றன. அதுமட்டுமன்றி வலிகாமத்தின் செம்மண் முக்கோணப்பிரதேசங்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. 

யாழ். குடாநாடானது புவிச்சரிதவியல் வரலாற்றில் மயோசின் காலத்து சுண்ணக்கல் அடையற்பாறை அடுக்குகளை கொண்டமைந்த தட்டையான நிலத்தளமாகும். அடையற்சுண்ணக்கல்பாறைகள் அடுக்கு அடுக்காக அமைந்திருக்கும் இயல்பு கொண்டவை. இவற்றின் உடற்பாகத்திலே  மூட்டுக்களையும்  நுண்துளைகளையும் கொண்டிருப்பவை. இதன் காரணத்தாலேயே யாழ். தீபகற்பத்தின் நன்னீர் வளத்தை தம்முடலின் மேல் தாங்கி, உயிரினம் வாழ்வதற்கு ஏற்ற வசதியைக்கொடுத்துள்ளன. இயற்கையாக கிடைக்கும் மழைநீரை சேமித்து, கடலுடன் சென்றடையாமல் தாங்கி, உயிர்வாழ்தலையும் மண்ணின் உறுதித்தன்மையையும் பேணுகின்றன.

இவ்வாறான அடையற்சுண்ணப்பாறைகளை அதன் இயல்புகளை அறியாத யாழ்.குடாநாட்டு மக்கள்,  கட்டிடங்களை கட்டுவதற்காகவும்,சுண்ணக்கல் தேவைகளுக்காகவும், வேறு தேவைகளுக்காகவும் அகழ்ந்து சிதைவடையச்செய்கின்றனர். இதனால் நன்னீர் பாழடைகிறது. நிலக்கட்டுமானமும் அற்றுப்போகிறது.

புரெவி புயல் ஏற்படுத்திய  வெள்ளப்பெருக்கின் பின்னர் தான் பலர் குளத்தின் அருமையை உணரத்தொடங்கினர்.

வடமாகாணத்தில் கிட்டத்தட்ட 600 குளங்கள்/ குட்டைகள்/ நீர்நிலைகள் காணாமல் போயிருக்கலாம் என பேசப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் மட்டும் 249 குளங்கள் காணமற்போயுள்ளன.

2016 நடாத்தப்பட்ட குளக் கணக்கெடுப்பின் படி, யாழ் மாவட்டத்தில் உள்ள 16 நீர்ப்பாசன பிரிவுகளில் மொத்தமாக 1043 குளங்கள் அடையாளப்படுத்தப்படக் கூடியவாறு இருந்ததாகவும் தற்போது 794 குளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன அல்லது பாவனையில் உள்ளதாக அதே கணக்கெடுப்பில் ஆவணப்படுத்தபட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.  மீதி 249 குளங்கள் மூடப்பட்டு விட்டதாக அதே கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. எஞ்சிய குளங்களும் தூர்வாரப்படுவதில்லை. சிறந்த பராமரிப்பில்லை. குப்பைகளையும் கூழங்களையும் போடுமிடமாக மாறியுள்ளன.

மழைநீரைச்சேமித்து வைத்துப்பயன்படுத்திய மக்கள் அருகிவிட்டார்கள். வெளிநாட்டு மோகமும் நவநாகரீகப்போக்கும் தன் வாழ்விடம் குறித்த அக்கறையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் மனநிலை மாறிவிட்டது. நிர்வாக அதிகாரிகள் நிர்வாக கட்டமைப்பை கையாளாமல் அரசியலோடு தொங்கித்திரிவது, 

அரசியல்வாதிகள் அரச அதிகாரிகளின் வேலைகளுக்குள் மூக்கை நுளைப்பது, மக்களுக்கும் இளைய தலைமுறைக்கும்  விவசாயத்தின் மேலிருந்த ஈடுபாடு குறைந்தமை போன்ற காரணங்களே நிலக்கட்டுமானத்தில் குளங்களைப்பேண  முடியாமல் போனதற்கான பெருங்காரணங்களாகின்றன. அதுமட்டுமன்றி அரச அதிகாரிகளே சூழல்சார்ந்த எண்ணக்கருக்களை கடைப்பிடிப்பதில்லை.

தெல்லிப்பழை பிரதேச செயலகம், அண்ணமார் கோயில் குளம் என்ற குளத்தை நிரப்பி கட்டப்பட்டிருக்கிறது. யாழ் . நகரின் புல்லுக்குளத்தை நிரப்பி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இப்படி நிறையவே அடுக்கிக்கொண்டு போகலாம். இத்தமாதிரியான சுற்றுச்சூழல் சார்ந்த  அக்கறையற்றநிலை நீடித்தால் நாளை யாழ்.  தீபகற்பத்தில் வாழும் மனிதர்களின் வாழ்தல் நிலை கேள்விக்குறியதாகிவிடும். வாழ்வாதார பொருளாதார ரீதியாகவும்,  குடிநீருக்காகவும் பிற மாவட்டங்களில் தங்கியிருக்கும் நிலை தோன்றும். கடைசியில் வெள்ளத்தோடு வெள்ளமாகி கடலில் அமிழ்ந்தும் விடும். இந்த நிலை தோன்றாதிருக்க வேண்டுமாயின் கடந்து சென்ற நிவார்ப்புயல் புகட்டிய பாடத்தில் இருந்து, புதிய படிப்பினைகளை கற்று நிமிர்தல் அவசியமானது.

Print Friendly, PDF & Email