SHARE

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2020 நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதி லண்டனில் நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2020 நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதி லண்டனில் நடைபெற்றது.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய ஆண்டு நிறைவையிட்டு மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது உலகெங்கிலுமுள்ள கொவிட்-19 இடர்கால சூழ்நிலையினை கருத்தினில் கொண்டு Zoom தொழில் நுட்பம் ஊடாக நடைபெற்ற இந்த வருடத்துக்கான நிகழ்வில், நோர்வேயின் இராஜந்திரியும், முன்னாள் சமாதானத்தூதுவருமான திரு. எரிக்சொல்ஹெய்ம் (Erik Solheim) பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். 

இதில் சிறப்பு விருந்தினராக, இலங்கை தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரான அருட்தந்தை.திரு. லியோ ஆம்ஸ்ரோங் (Rev. Fr. Lio Armstrong), ஐநாவின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும் சிரேஸ்ட அதிகாரியுமான டேவிட் வெயிலி (David Whaley), பிரான்ஸ் மனித உரிமைகளுக்கான தமிழர் மையத்தின் (TCHR France)பணிப்பாளராரும் ஆய்வாளருமான டெயிட்றி மக்கொனல் (Deirdre McConnell), பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் (APPGT) தலைவருமான எலியட் கோல்பேர்ண் (Elliot Colburn) மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், Liberal Democrat கட்சியின் தலைவருமான மதிப்பிற்குரிய எட் டேவி (Rt.Hon. Ed Davey MP) ஆகியோர் கலந்து சிறப்புரைகளை வழங்கினர்.

ஐநாவின் மனித உரிமை பிரகடனம் மற்றும் உலகளாவிய மனிஉரிமைகள் தினத்தின் முக்கியத்துவம் பற்றிய ஆரம்ப உரையை எரிக்சொல்கெய்ம் வழங்கினார். அதனை தொடர்ந்து TIC இன் ஸ்தாபகரும் முன்னாள் பணிப்பாளருமான மறைந்த திரு வரதகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 1983 இன அழிப்பின் போது அவரால் BBCயில் வழங்கப்பட்ட பேட்டியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதில் அவர் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தனிநாட்டையே விரும்புகின்றனர் என ஆணித்தரமாக கூறியிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டதுடன், அது தற்போதய நிலையிலும் பொருந்தும் என்ற அடிப்படையில் கலந்துரையாடல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அருட்தந்தை. திரு. லியோ ஆம்ஸ்ரோங் தனது உரையின்போது இலங்கையில் தற்போதும் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், இலங்கையில் இனப்படுகொலை கலாச்சார படுகொலை, கட்டமைப்பு படுகொலை என பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது என்றும் விரிவாக குறிப்பிட்டார். மாவீர்ரகளை நினைவுகூரும் உரிமை, மத செயற்பாடுகளுக்கான உரிமை மட்டுமன்றி வாழும் உரிமைகூட மறக்கப்பட்ட நிலையிலேயே தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரு நாட்டுக்குள் வாழ்வது தமிழ் மக்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் எடுத்துரைத்தார்.

டெயிட்றி மக்கொனல் தனது உரையின் போது இலங்கையில் நடைபெற்றது தமிழருக்கு எதிரான இனப்படுகொலையே என்று சட்ட வரைவிலக்கணத்துடனும் ஆய்வு அறிக்கைளின் ஆதாரங்களுடனும் எடுத்துரைத்தார். அத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை மற்றும் கூட்டு மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணவேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

டேவிட் வெயிலி அவர்கள் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கான நீதியை பெறுவதற்கும் ஐ.நா கட்டமைப்பில் உள்ள வழிமுறைகள் என்ன என்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் விரிவான ஆலோசனையை வழங்கினார். இலங்கை இனப்படுகொலையை தடுக்க ஐ.நா தவறியது என்றும் ஐ.நா மனித உரிமைச்சபையின் இயலாமைகள் பற்றியும் விளக்கினார். குறிப்பாக விடுதலைப்புலிகளின் போராட்டம் நியாமானது என்றும் இலங்கை அரசு பயங்கரவாத வழிமுறைகளை கையாண்டதாலேயே புலிகளும் அதற்கு எதிர்வினையாற்ற தள்ளப்பட்டனர் என்றும் தெரிவித்தார். 
எலியட் கொல்பேர்ண் தனது உரையின் போது, தமிழர்களின் உரிமை தொடர்பில் பிரித்தானிய அரசால் மேற்கொள்ள கூடிய செயல்திட்டங்கள் குறித்தும் தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை பற்றியும் எடுத்துரைத்தார். 

இறுதியாக எரிக்சொல்ஹெய்ம் அவர்களிடம் சர்வதேச சமூக கண்ணோட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் புவிசார் அரசியல் எனும் கருப்பொருளிலும் உரை நிகழ்த்தும்படி கேட்கப்பட்டது. அண்மையில் சில தவறான கருத்துக்களை வெளியிட்டு, தமிழ் மக்கள் மத்தியில் கடும் சர்சையை கிளப்பியிருந்த எரிக் சொல்கெய்ம் அவர்களின் அந்த கருத்துக்களை தவறு என்று நிரூபிக்கும் முகமாகவே ஏனைய பேச்சுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிட்தக்கது. இதனால் தனது நிலைப்பாட்டை மாற்றும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

அதன்படி, தமிழர்கள் தனிநாட்டுக்காக போராடுவது சட்டவிரோதம் இல்லை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார். எனினும் வன்முறையை மேற்குலகு ஏற்காது என்றும் காந்தீய வழியில், ஒற்றுமையாக, போராட வேண்டும் என்றார். குறிப்பாக தமிழர்களுக்கு ஆக்குறைந்தது தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய சமஸ்டி தீர்வாவது கிடைக்கவேண்டும் என்றும் அதற்கு தான் உதவ தயார் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது எரிக் சொல்கெய்ம் கடுமையான கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கப்பட்டார். இந்த உரையாடலை நீண்ட கால மனித உரிமை செயற்பாட்டாளரும், கல்விமானுமான திரு ராஜ்குமார் அவர்கள் சிறப்பாக நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வின்போது, தமிழ் மக்களுக்காக போராடும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை வருடாந்தம் TIC கொளரவித்து வருவது வழமை.அதன்படி நடப்பாண்டுக்கான மனித உரிமைகள் காவலர் விருது M.C.M. இக்பால் அவர்களுக்கும் மறைந்த வரதகுமார் ஞாபகார்த்த விருது பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் பில் மில்லர் (Phil Miller) மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி றேச்சல் சோய்ஜி  (Dr Rachel Seoighe) ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. இவர்களை TIC பணிப்பாளர்களுள் ஒருவரான Dr ரட்ணேஸ்வரன் அறிமுகம் செய்து வைக்க, விருதுகளை Rt. Hon. Ed Davey வழங்கிவைத்தார். அத்துடன் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. 

பேரின்பநாதன் அவர்கள் கவிதை வாசித்ததை தொடர்ந்து வாகீசன், சதீஸ் மற்றும் உமாராஜ் தலைமையிலான “விடுதலைக்குரல்” இசைக்குழுவிரால் இறுதியில் தமிழர் பாரம்பரிய இசையான பறை இசை வழங்கப்பட்டது. 

லண்டன் கிங்ஸ்டனில் அமைந்துள்ள TIC யின் அலுவலகத்தில் பி.ப. 2 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் உலகளாவிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் TIC செயற்பாட்டாளர்கள் என 1000க்கு மேற்பட்டோர் Zoom ஊடாகவும், முகநூல் நேரடி ஒளிபரப்பு ஊடாகவும் கலந்து கொண்டனர். பிரித்தானிய முன்னாள் எதிர்கட்சித்தலைவர் Rt. Hon. Jeremy Corbin மற்றும் பேராசிரியர் Peter Scalk உட்பட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டது குறிப்படத்தக்கது. 

இம்முறை கொவிட்-19 இடர்கால சூழ்நிலையை கருத்திற் கொண்டு அதன்பால் பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு மேற்படி நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வினை செயற்பாட்டாளர்களான சிதம்பரசுப்பிரமணியம் திருச்செந்தில்நாதன் மற்றும் விஜய் விஜயநாதன் ஆகியோர் Zoom தொழில் நுட்பம் ஊடாக ஒளிபரப்பு செய்தனர். 

பிரதான ஒருங்கினணப்பாளர்களான சசிகரண் செல்வசுந்தரம் மற்றும் நவரட்ணம் திணேஸ் தலைமையில், சதீஸ் குலசேகரம், கிறிஸ்ரி நிலானி காண்டீபன், ராஜேந்திரம் சுதன், நிரோஜன் பாலசிங்கம், வினோதன் கந்தலிங்கம், ரவிச்சந்திரன் நிஷாந், சஞ்ஜீவன் ஸ்ரீதரன், குகதாசன் சுலக்சன், சுபதர்ஷா வரதராசா, சுபமகிஷா வரதராசா, அரவிந்தராஜ் நல்லதம்பி, தர்மபாலன் விமலாகரன், விஜய் விவேகானந்தன், வாகீஸ்வரன் பிரசாந்த், சுஜிதா கனகசபாபதி, சாந்தலொஜித்தன் புகலவன் மற்றும் கமில்டன் ஜோர்ச் பிரவிந்தனர் அடங்கிய அணி இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்திவைத்தனர்.

Print Friendly, PDF & Email