SHARE

தேசிகன்

சிறிலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் ஆட்சியில் இருக்கும் ராஜபக்ஷ சகோரர்களின் ‘அரசியல் இயலாமையை’ அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.
நாட்டின் தேசிய பாதுகாப்பையும், சிங்கள பௌத்த கடும்போக்கு வாதத்தினையும் கையிலெடுத்து கடந்த 2019 நவம்பரில் ஆட்சிப் பீடமேறியவர் கோட்டாபய. அவர் பதவிக்குவந்து முதலாவது ஆண்டு நிறைவடைந்திருக்கின்றது.

சிறிலங்காவில் கொரோனாவின் கட்டுறாத நிலையால் தனது அரசியல் வெற்றியை பெருமெடுப்பில் கொண்டாட முடியாத நிலையில் அவர் இருந்தார். இதனால் தொலைக்காட்சி வாயிலாக விசேட உரையொன்றை நாட்டு மக்களுக்கு ஆற்றினார்.
கொரோனா நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் சாதாரண மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாவின் உரை ‘நிவாரணங்களை’ வழங்குவதாக இருந்திருக்கவில்லை. அது பெருவாரியானவர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தனது முதலாவது ஆண்டு காலத்தில் தான் செய்த வீரதீர செயல்களை முன்னிலைப்படுத்தியும், வாக்குறுதி அளித்து செய்ய முடியாது போன விடயங்களுக்கு அரசியல் வாதிகளைப்போன்று காரணங்களையும் கூறியிருந்தார்.

2009 இற்கு பின்னர் ராஜபக்ஷவினருக்கு போர் வெற்றிவாதம் ஆட்சி அதிகாரத்தினை தக்கவைப்பதற்கான தீனியைப் போட்டுக்கொண்டிருக்கின்றது. இது வெளிப்படையான விடயம். ஆனால் கோட்டாபய, தன்னிலையை தக்கவைப்பதற்காக போர் வெற்றிவாதத்திற்கும் அப்பால் சென்றிருக்கின்றார். அதுவே அவருடைய முதலாவது ஆண்டு உரையின் சாரம்சம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் கோட்டாபய ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு இலகுவாக வழியமைத்துக் கொடுத்தது. அந்தக்காலத்திலிருந்தே ‘நாட்டின் தேசியப் பாதுகாப்பு’ என்பதையே பிரதான பொருளாக பேச ஆரம்பித்திருந்தார்.
தற்போது ஒருவருட ஆட்சிக்காலமும் நிறைவடைந்திருக்கின்றது. இன்னமும் தேசிய பாதுகாப்பு விடயத்தினையே அவர் முன்னிலைப்படுத்துகின்றார். அதன் ஊடாக தான் ‘தேசப்பற்றாளன்’ என்று பெரும்பான்மை சிங்களவர்களுக்கு சேதி சொல்லியிருக்கின்றார்.

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்புத்துறை கட்டமைப்புக்கள் மீளவும் கட்டியெழுப்பப்பட்டுவிட்டதாகவும் கோட்டாபய தனது உரையில் முதன்மைத் தானம் வழங்கி குறிப்பிட்டிருந்தார்.
சமகால பூகோளச் சுழலில் சிறிலங்கா மீது வேறெந்தவொரு நாடும் படையெடுக்கப்போவதில்லை. உள்நாட்டிலும் ஆயுதப்போராட்டம் உருவெடுக்கப்போவதும் இல்லை.

ஆகவே கோட்டாபயவினுடைய தேசிய பாதுகாப்பின் பலம், பலவீனத்தின் அளவுகோலை தற்போதைக்கு கணிப்பிடவே முடியாது. இன்னொரு சம்பவம் இடம்பெறும் வரையில் சிங்கள தேசியவாதிகளிடத்தில் அவருடைய தேசியபாதுகாப்பு பீடிகை நம்பிக்கைக்குரியதாகவே இருக்கப்போகின்றது. அது அவருடைய ஆட்சி அதிகாரத்தினையும் உறுதிப்படுத்தத்தான் போகின்றது.
தான் சிங்கள பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டமை, மற்றும் பௌத்த தேரர்களுடன் மாதமொருமுறை ஆலோசித்தே செயற்படுகளை முன்னெடுக்கின்றமை ஆகிய இரண்டு விடயங்களுக்குமே கோட்டபாய தனது உரையில் இரண்டாவது முக்கியத்துவம் அளித்திருந்தார்.

இந்த வெளிப்பாடுகள் மூலம், தான் சிங்கள பெரும்பான்மை இனமக்களுக்கே உரித்தானவர் என்பதையும், தன்னையொரு பௌத்த மேலாதிக்கவாதி என்பதையும் அவர் பிரதிபலித்திருக்கின்றார்.

பௌத்த பீடங்களை கைக்குள் போட்டு வைத்திருப்பதன் மூலம் தனது பதவிக்கு எவ்விதமான பங்கமும் ஏற்படாது என்பது கோட்டாவின் அரசியல் கணக்காக இருக்கலாம். ஆனால் சிறிலங்கா ஒரு பல்லினத்துவ நாடு. இங்கு சிங்களவர்களை விடவும் ஏனைய பூர்வீக சமூகங்களும் இருக்கின்றன என்பதை அவர் மறந்துவிட்டார்.
இந்த நிலைமையானது, தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய இனத்தினர் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்பதை முழு உலகிற்கும் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. இதனை கடும்போக்குச் சிந்தனையாளரான கோட்டாபய உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இனப்பிரச்சினையே இல்லையென்றும், வேலையில்லாப் பிரச்சினையே இருக்கின்றது என்றும் கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டவர் கோட்டபாய. அவ்விதமான ஒருவரிடத்தில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்பார்ப்புக்களை கொள்வதே வீணானது.

ஆனால், தனது அதிகாரப்பரப்பினை விஸ்தரிப்பதற்காக, தான் எல்லோருக்கும் ஜனாதிபதி என்று ஒருவருடத்திற்கு முன்னதாக ருவன்வெலிவிசாயவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர் கூறியதை இப்போது மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் பேசும் சமூகம் மறக்கவில்லை.

ஆகமொத்ததில் கோட்டாபய, தன்னுடைய ‘அரசியல் ஆளுமை’ இன் இயலாமையை மறைப்பதற்காக தேசியபாதுகாப்பு, சிங்கள பௌத்த தேசியவாதம், கொரோனா ஆகிய சொற்பதங்களை கனகச்சிதமாக தனது உரையில் பயன்படுத்தி பெரும்பான்மை சமூகத்தை மயிலிறகால் வருடிக்கொடுத்திருக்கிறார்.

இந்தப்புரிதல் தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத்தமிழர்களும் நன்றாகவே உள்ளது. அவ்விதமான புரிதலொன்று தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு உருவாக இன்னும் சில காலமெடுக்கலாம்.
தம்பியாரின் நிலைமை இவ்வாறிருக்க, தமையனார் பிரதமர் மஹிந்த. அவர் சிறிலங்காவின் 75ஆவது வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்திருந்தார். ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியீடடிய பொதுஜனபெரமுன கட்சியின் கன்னி வரவு செலவுத்திட்டம்.

முன்னாள் நீதி அமைச்சர் ரொனி டி மலுக்கு (12தடவை) அடுத்தபடியாக 11ஆவது தடவையாக 75 வயதான மஹிந்த வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்தார். வழமையாக கம்பீரமாக நின்று உரையாற்றும் மஹிந்தவால் இம்முறை அவ்வாறு செய்ய முடிந்திருக்கவில்லை. உடல் தளவடைந்திருந்தது.
வெறுமனே 51 பக்கங்கள் கொண்ட இந்த வரவு செலவுத் திட்டத்தினை அவரால் நின்றவாறு முழுமையாக வாசித்திருக்க முடிந்திருக்கவில்லை. இடைவெளிகோரினார். பின்னர் அமர்ந்து வாசித்தார்.

ஒருகட்டத்தில் மஹிந்த எப்படியாது வாசிப்பை பூர்த்திசெய்துவிடவேண்டும் என்ற நிலைமையும் ஆளும் தரப்பிடத்தில் காணப்பட்டது. இவ்விதமாக தளர் நிலையில் மஹிந்த சமர்ப்பித்த இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மீது சிறிலங்காவின் அனைத்து தரப்பினதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

அந்த எதிர்பார்ப்புக்கான அடிப்படைக் காரணம் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளே. சாதரண மக்கள் முதல், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் என்று அனைவருமே முடங்கியிருக்கும் நிலையே தற்போதுள்ளது.

அவ்வாறான நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவுத்திட்டம் ஏமாற்றத்தினையே அளித்துள்ளது. இந்த வரவு – செலவுத்திட்டத்தின் மொத்த வருமானம் 1961 பில்லியன் ரூபா, செலவீனம் 3525 பில்லியன் ரூபா. துண்டு விழும் தொகையாக 1564 பில்லியன் ரூபா. வழமைக்கு மாறாக துண்டுவிழும் தொகை, 45சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு கொரோனா பதிப்பால் நிவாரணங்கள் வழங்க வேண்டியுள்ளதாக காரணம் கூறப்பட்டிருக்கின்றது.

சிறிலங்காவின் சர்வதேச கடன்களின் தொகை 35.4 பில்லியன் டொலர்கள். இதில் இவ்வருடத்துக்கு மட்டும் 4.5 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டியுள்ளது. அதேபோன்று 6700 பில்லியன் ரூபா உள்நாட்டு கடன்களும் உள்ளன.
இந்த கடன்களை செலுத்துவற்கு அப்பால் இவற்றுக்கான அடுத்த தவணை வட்டியை எவ்வாறு செலுத்தப்போகின்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதனைவிடவும் பொhருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகின்றது. உலகப்பொருளாதாரம் முடங்கிக் கிடக்கையில் அது சாத்தியமா என்பதும் கேள்விக்குறியே.

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்கான இறக்குமதி செலவினத்தில் 300 கோடி டொலர்களை அரசாங்கம் சேமித்துள்ளது. இதனால் அந்நிய செலாவணி சந்தையில் 300 மில்லியன் டொலர்களை கொள்வனவு செய்யவும் மத்திய வங்கிக்கு முடிந்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் ஸ்திரமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் சூத்திரத்தினை தொடர்ந்து கடைப்பிக்க முடியாது. உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தால் அதற்கு முதலாவதாக முதலீடுகள் அவசியம், அடுத்தாக சந்தைவாய்ப்பு விஸ்தரிக்கப்பட வேண்டும். சமகாலச்சூழல் அதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கப்போவதில்லை.

ஆக, மொத்தத்தில் மஹிந்தவின் 2021வரவு செலவுத்திட்டம், கற்பனைக்கு அப்பாற்பட்டே இருக்கின்றது. அதில் உள்ள முன்மொழிவுகள் அனைத்துமே கவர்ச்சிகரமானவை.
அவற்றை நiடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தொகை நிதி தேவை. ஆதற்காக எந்த திட்டங்களையும் கூறாது வெறுமனே வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்துள்ளமை அரசியல் அனுபவம் மிக்க மஹிந்தவின் இயலாமையை புடம்போட்டு காட்டுகின்றது.

நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு கடன்கள், நன்கொடைகள் என்பனவற்றுக்கு அப்பால் தற்போதைக்கு சிறிலங்காவின் பெருநம்பிக்கைக்குரிய ‘குபேரனாக’ இருப்பது சீனா தான்.
அரசாங்கத்தினை ஸ்தரப்படுத்த சிறிலங்கா சீனா பக்கம் வெகுவாக சாய்கின்றபோது, இயல்பாகவே பூகோள, பிராந்திய மூலோபாய குழப்ப நிலை சிறிலங்காவில் மேலும் அதிகரிக்கும். அது ராஜபக்ஷ குடும்பத்திற்கு தொடர் தலைவலியாகவே நீடிக்கப்போகின்றது.

Print Friendly, PDF & Email