SHARE
வன்னிமகள்
எஸ்.கே. சஞ்சிகா

காலத்திற்கு காலம் இறைதூதர்களும் சீடர்களும் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறான இறைதூதர்களையும் சீடர்களையும் மீட்பர்கள் என மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். இந்த மீட்பர்கள் கருத்தில் எடுக்கப்படாத மக்களுக்காக,  மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்க யாருமே இல்லை என ஏங்கும் போது, ஒரு சமூகமக்களால் இன்னொரு சமூகமக்களாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாதைகளை அனுபவிக்கும் போது, ஒடுக்கப்பட்டு நீதியும் நியாயங்களும் பக்கச்சார்பாகவும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் போதும், அவர்களை அவர்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்காக, மானிடநேயமுள்ளவர்களின் கவனத்திற்கு இப்படியும் ஒரு சமுகம் தத்தளிக்கும் செய்தியை தெரிவிப்பதற்காகவும், மானிடநேயம் மலரவேண்டும் என்பதற்காகவும் அவர்களில் இருந்தே பிறப்பெடுப்பவர்களாக , இந்த மீட்பர்கள் விளங்குகிறார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு விடுதலைப்போராட்ட வரலாற்றிலும் இறைதூதர்களும் சீடர்களும் பிறப்பெடுத்தவாறே இருக்கிறார்கள். இவர்கள் விடுதலைக்காக பாடுபடுகிறார்கள். விடுதலைசார்ந்த கருத்துக்களையும் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்குகிறார்கள். அவர்களின் விடுதலைக்காக தமது உயிரையும் உதிரத்தையும் தியாகத்தோடு அர்ப்பணிக்கிறார்கள்.  அந்தவகையில் எங்கள் தமிழினத்தின்  மீட்பர்களாக மாவீரர்கள் விளங்குகிறார்கள்.

மீட்பர்களின் கனவை ஏந்திச்செல்ல இறைதூதனால் வழிநடத்தப்பட்ட சீடர்கள் இறைதூதனின் கனவை ஏந்திச்சென்று அந்த மக்களின் பூரண விடுதலைக்கு ஊன்றுகோலாகுவர்கள். ஆனால் எங்கள் தமிழினத்துக்கு அவ்வாறான சீடர்கள் வாய்ப்பாக அமையவில்லை. மீட்பர்களின் கனவை ஏந்தி தமிழினத்துக்கு பூரண விடுதலை கொடுக்க யாரும் தயாராக இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும் தடம்மாறிப்போனார்கள். தமிழ் புத்திஜீவிகளும் தடம்மாறிப்போனார்கள்.

தமிழர்க்குக்கட்சிகள் சார்ந்தும் நல்ல வழிகாட்டிகள் இல்லை. தமிழ்க்கட்சிகள் ஒவ்வொன்றும் மாவீரர்களின் தியாகத்தை ஏலம்விட்டுப்பிழைப்பு அரசியல் செய்கிறது. மாவீரர் தியாகங்களை வைத்து, மக்களின் உணர்ச்சிகளை பகடையாக்கி,  தங்களின் பதவிகளையும் தலைமையையும் தக்கவைக்கும் சுயநல அரசியலை மேற்கொள்வதையே காண முடிகிறது.

நியாயமான குறிக்கோள்களோ,  நியாயமான விடுதலை சார்ந்த பேரம்பேசல்களையோ மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களையும் கைநழுவ விட்டுவிட்டு, பேரினவாதிகளின் அற்பசலுகைகளுக்காக வாலாட்டும் நாய்களாக மாறிவிட்டனர். இந்த அரசியல் பெருச்சாளிகள் இந்தப்பேரினவாதிகளுக்காக இன்னொரு கைங்கரியத்தையும், மிகத்தந்திரமாக மேற்கொள்கிறார்கள்.

தேர்தல் வரும் காலத்தில் , விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களையும், அந்த விடுதலை சார்ந்த கருத்துக்களை பின்பற்றும் மக்களையும் வாக்கு வேட்டைக்காக மிகத்தந்திரமாகப் பயன்படுத்தி, அவர்களை தேர்தல் முடிந்த கையோடு பாராமுகமாக்கி, அவர்களின் தேசியம் சார்ந்த எண்ணக்கருக்களை உடைத்து பிளவுபடுத்துவதோடு, அரசுக்கு சார்பான எண்ணங்களுக்கு வலுவூட்டும் நரித்தந்திரத்தையும் கையாள்கிறார்கள்.

இன்னொரு புறத்தில் இந்த அரசியல் கோமாளிகளின் நரித்தனத்தை உணராது, தாயகத்துப்புத்திஜீவிகளும், தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த புத்திஜீவிகளும்,  எது இல்லாமல் போனால் எமது தமிழ்ச்சமுகம் ஒன்றுபட்டு வாழும் என நினைத்தார்களோ! இந்தச்சமுகம் எவ்வாறெல்லாம் வாழவேண்டுமென்று தம்மை தியாகித்தார்களோ! அதை எல்லாம் கிஞ்சித்தும் மனங்கொள்ளாமல் சாதி,மத பேதங்களை கிளறிக்கொண்டிருக்கிறார்கள். 

சாதி, மத ,பேதமற்ற சமதர்ம தமிழீழத்தை கட்டி எழுப்புவதே எங்கள் இலட்சியம் ” என தம் உயிரை அர்ப்பணித்தவர்களை சற்றும் நினைத்துப்பார்க்காமல், தூர்ந்ததை கிளறி,  மேலும் இந்தச் சமுகத்துக்கு அநீதியை செய்பவரேகளாக இருக்கிறார்கள். 

தேவையான விடயத்தை நோக்கி நேர்கோட்டில் நகர்ந்து , விடுதலைக்கு தேவையான வழிவகைகளை செய்யாமல், மறைகோட்டில் பயணித்து எல்லாவற்றையும் தம் சுயநலத்துக்காக பாழாக்குபவர்களாக விளங்குகிறார்கள். பின்னடைவுகளுக்கு வழிகாட்டுகிறார்கள். மாவீரர்கள் ஒவ்வொருவரும் இந்தத் தேசத்து தாய்மாரில் பிளவு காணவில்லை. மாவீரர்கள் ஒவ்வொருவரும் இந்த தேசத்தில் வாழ்ந்த சகோதர, சகோதரிகளில் பிளவு காணவில்லை.

அவர்களுக்குத் தெரிந்ததும் போதிக்கப்பட்டதும்,  அவர்களின் சந்ததிக்கென்று ஒரு வாழ்விட நிலம். தமது இனம் வாழ்வதற்கு நிரந்தர விடுதலை. சுபீட்சமான எதிர்காலத்திற்குள் எமது மொழி, எமது இனம் உயரிய அடையாளத்தோடு, இந்த உலகப்பந்தில் மிளிர வேண்டும் என்பதே. ஒவ்வொருவரும் நெஞ்சத்தை தொட்டுச்சொல்லுங்கள்,  நாம் அவர்களின் உயரிய தியாகத்துக்கு என்ன கைமாறு செய்கிறோம்? 

பேரினவாதிகள் காலத்துக்கு காலம் தமது நகர்வை தந்திரமாக மேற்கொண்டவண்ணமே இருக்கிறார்கள். நாம் இன்னும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். காணாமல் போனவர்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.  எமது நிலம் இராணுவத்தின் வாழ்விடமாக மாறிக்கொண்டிருக்கிறது. தந்திரமாக இராணுவக்குடியிருப்புகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

தந்திரமாக வேலைவாய்ப்பு என்ற போர்வையில், பெரும்பான்மையை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் என்ற போர்வையில் குடியேற்றப்படுகிறார்கள். அண்மையில் விவசாயப்பங்கீட்டுக்காணிகள் என்ற நடவடிக்கையும் நிலமிழப்புக்கு காரணமாக வாய்ப்புள்ளது. வெளியில் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு என்ற நாடகங்களுக்குள் இந்த தந்திரங்கள் மறைக்கப்பட்டு தமது நகர்வை மேற்கொள்கிறார்கள். 

ஒரு பெரும் போராட்டக்காலத்துக்குள் எந்தவித வெளிநாட்டு உதவிகளும் கிடைக்கப்பெறாத காலத்தில்,  உள்ளூர் உற்பத்தியில் உயிர் வாழ்ந்த மக்களை கையேந்தும் வெட்கமற்ற சமுகமாக தொண்டு நிறுவனங்களும் சமுக சேவைகளும் மாற்றியுள்ளன. உயர்ந்த வாழ்வியலும் பண்பாடு, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, மொழி வளர்ச்சி, விவசாய அபிவிருத்தி, காட்டுவளப்பாதுகாப்பு, விளையாட்டுத்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை, பாதுகாப்பென வாழ்ந்த சமுகம் போரற்ற காலத்தில் சின்னாபின்னமாகி சிதறுண்டு போகிறது. எனில்,  விடுதலைத்தாகத்தையும் அர்ப்பணிப்போடும் வழிகாட்டி,  செயற்படக்கூடிய சீடர்கள் சுயநலமானவர்களாக மாறியது இந்த  தமிழ்ச்சமுகத்துக்கு கிடைத்த சாபமானதா? இந்த சாபத்தில் இருந்து மீண்டெழுவது எப்போது?

பொது நலனுக்காக , இந்த ஒடுக்கப்பட்ட சமுகத்தின் அபிலாசைகளை உலகத்தின் திசைகளுக்கு வெளிப்படுத்திய, ஆயிரமாயிரம் மாவீரர்களின் விருப்பை மறந்து, ஒரு நாளில் மட்டும் அழுவதும்,  தொழுவதும் என ஒரு அடையாள தினமாக்கி நகரப்போகிறோமா?

யார் இந்த மாவீரர்கள்? எங்கள் சகோதரிகள், எங்கள் சகோதரன்கள், எங்கள் உறவுகள், எங்கள் நண்பர்கள்,எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த விடுதலையின் தீபக்குறிகாட்டிகள்.

இந்த ஒப்பற்ற வீரர்களின் தியாகத்துக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்?

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதல் முதல் வீரச்சாவடைந்த லெப்டினன். சங்கர் அவர்களின் நினைவாக, ஒரு பொது நாளில் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறதே தவிர, மற்றும்படி ஒவ்வொரு நாளும் இந்த மண்மீட்புக்காக, நிரந்தர விடுதலைக்காக தம்மை ஈகம் செய்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மாவீரர்தித்தின் குமுறல்கள் நிறைந்த நாட்களே. விடுதலைத்தீ சுமந்தோர் பயணித்த நாட்களே. இந்த இன விடுதலைக்காக தம் முகத்தை மறைத்து தம் உயிரைத் தியாகம் செய்தவர்களும் அடங்குகிறார்கள். கரும்புலிகளாக வெடித்து காற்றோடு கலந்தவர்களின் நினைவைச் சுவாசித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிக்கிறோம். கடலோடு கடலாக கலந்தவர்களும்,  எங்கள் கடலோடு தான் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனியாவது எமது சுயநலன்களை மாற்றி , விடுதலையின் நாட்களை விரைவு படுத்துவோமா?  என்ன செய்யப்போகிறோம்?

”எங்கே எங்கே ஒரு கணம் விழிகளை இங்கே திறவுங்கள்.. ஒரு கணம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்..”

திறக்கப்பட வேண்டியது மாவீரர்களை நினைத்திருக்கும் மனங்களே . மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளைத்தான் எதிரியால் அழிக்க முடியும். மாவீரர்கள் நிறைந்திருக்கும் ஒவ்வொரு  தமிழனின்  மனங்களில் நிறைந்த கல்லறைகளை அழித்துவிட முடியாது. மனங்களில் இருக்கும் கல்லறைகளில் இருந்து மாவீரர்கள் கேட்கிறார்கள். 

இந்தச் சமுகத்திற்கு நிரந்தர விடுதலையை எப்போது கிடைக்குமென. மனங்களை திறந்து பதிலளிப்போம். கல்லறைகளும் பேசும். மனக்கல்லறைகளை மனச்சாட்சியோடு பேச வையுங்கள்.

Print Friendly, PDF & Email