SHARE

-தாயகன்

இன அழிப்புச் செய்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறும்போதே தமிழினம் அடக்குமுறைக்குள் தான் தன் வாழ்வியலை நடத்தப்போகின்றது என்பதற்கான அத்தனை எச்சரிக்கை மணிகளும் ஒலித்தாகிவிட்டது. அவ்வாறிருக்க தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களை நினைவு கூருவதற்கான கூட்டுரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய பேரினவாத அரசு மவீரர்களை நினைவு கூருவதற்கு இடமளிக்காது  என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதனால் அதனை இட்டு பெரிதாக  அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

ஏனென்றால் முள்ளிவாய்க்காலில் இனவழிப்புச் செய்த  வேளையோடு, விடுதலை வேட்கையோடு வித்தாகி மண்ணில் உறங்கிக்கொண்டிருந்த மறவர்களின் துயிலும் இல்லங்களை டோசர்கள் மூலம் நிர்மூலமாக்கியது இதே ராஜபக்ஷ அரசு தான்.

போரில் வெற்றி பெற்றுவிட்டதாக மமதை கொண்டு அவ்வெற்றி கண்ணை மறைக்கவும், மண்டவர்களை கூட தமிழர்கள் மறந்துவிட வேண்டும் என்றும் கங்கணங்கட்டி தயாகத்தில் காணப்பட்ட விடுதலை வீரர்களின் நினைவாலயங்களை அழித்தொழிக்கப்பட்டன.

அந்த அழித்தொழிப்பு நடைபெற்றபோது தற்போதைய ஜனாதிபதி அன்று பாதுகாப்புச் செயலாளர் என்ற வேறுபாடு மட்டுமே இருந்தது. ஆனால் நிகழ்ச்சி நிரல் ஒன்றாகத்தான் இருந்தது. தற்போதும் அந்த நிகழ்ச்சி  நிரல் அப்படியே தான் இருக்கிறது.

அதுமட்டுமன்றி அரச இயந்திரத்தின் முழுமையான துணையுடன் அந்த நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது. ஏற்கனவே தமிழர் தாயகத்தில் ஒன்றரை இலட்சம் படைகள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாயகத்தில் சாதாரணமாக நடமாடும் வெகுசன மனிதனுக்கான சுதந்திரமே பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சிங்கள தேசியவாதத்திடம் விடுதலைக்காக தம் உயிர்களை ஈகம் செய்ய புனிதர்களை நினைவு கூருவதற்கான அனுமதியை எதிர்பார்ப்பதே அபத்தமானது.

அதனைவிடவும், அரசாங்கத்தினை சூழவும் போரில் முன்னின்று போர்க்குற்றங்களை இழைத்த அத்தனை அதிகாரிகளும் பதவி நிலைகளில் காணப்படுகின்றார்கள். தம்மிடம் தோற்றவர்களை நினைவு கூருவதற்கு இடமளிப்பதா என்ற குறுகிய மனோநிலையினைக் கொண்ட அத்தரப்பினர் எள்ளளவு நினைவு கூரலுக்கான இடைவெளியையும் வழங்கி விடக்கூடாது என்பதில் திடமாக இருக்கின்றனர்.

கடந்த தடவை கோட்டாபயவுக்கு அதிகாரம் கைக்குவந்து சொற்ப நாட்கள் என்பதால் சடுதியாக எதுவும் செய்திருக்க முடிந்திருக்கவில்லை. வெறுமனே புலனாய்வாளர்களை முடுக்கிவிட்டு தகவல்களை மட்டுமே திரட்டி வைக்க முடிந்தது. ஆனால் அதற்கு பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஆகியவை திட்டமிட்டு தடுக்கப்பட்டன.

இந்த சந்தர்ப்பங்களில் தமிழினம் விழித்துக்கொண்டது. ஆனால் ஒரு தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஊடாக இணக்கப்பாடொன்றை எட்டியிருக்காதுள்ளமையும், பொறிமுறையொன்றை ஏற்படுத்தியிருக்காமையும் துரதிஷ்டம்  தான்.

அரசியல் ரீதியான பேதங்கள் இருந்தாலும், கொள்கைகள் ரீதியான கோபதாபங்கள் இருந்தாலும், மாவீரர்கள் நம் அனைவருக்குமாகவே களம் கண்டு மடிந்தார்கள் என்ற புரிதல் தாயகத்தில் உள்ள அனைத்து அரசியல் தரப்பிடமும் ஏற்பட வேண்டியது கட்டாயமானது.

எனென்றால், வீர விழுதுகளாய் திளைத்தவர்களை மாண்ட பின்னர் அஞ்சிலிப்பதற்கு வழியில்லை. அவர்கள் அமைதியாக உறங்கிய ஆலயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு கற்குவியல்களாக்கப்பட்டுள்ளன. இன்னும் சில இடங்கள் பிணந்தின்னி கழுகுகள் போன்று படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தமக்காக சமர்களமாடியவர்களை அஞ்சிலிப்பதற்கு கூட முடியாவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கும் தாயகத்தின் சாதாரண வெகுஜன மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாக இருக்கின்றது.

வீரர்களுக்கான மரியாதையையும், அன்புக்குரிய உறவுகளின் மன ஆற்றுப்படுத்தலையும் மையப்படுத்திய புரிதலின் காரணமாகவே மேதகு.வே.பிரபாபகரன் அவர்கள், தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த வீரர் லெப்ரினன்ட் சங்கர்  (சத்தியநாதன்) அவர்களின் நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை 1989 ஆம் ஆண்டு மாவீரர்கள் நாளாக பிரகடனப்படுத்தினார்.

அன்றிலிருந்து தாயகமெங்கும் தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களாலும், உலகத் தமிழர்களாலும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் மறவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலித்து அவர்களின் அன்புக்குரியவர்களும் மனங்களும் ஆற்றுப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றது.

ஆனால் இம்முறை, அவ்வாறான நிலைமை இருக்கவில்லை. உள ஆற்றுப்படுத்தலுக்கு பதிலாக உளக்குமுறலும், ஏக்கமும், தாகமும் தான் அதிகரித்துள்ளது. அந்தமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தி நடைமுறைச்சாத்தியமான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டியது அந்த மக்களின் ஆணை பெற்றவர்களின்  பொறுப்பாகின்றது.

ஆணைபெற்றவர்கள் பிரிந்து நிற்பதும், ஆணைபெற துடிப்பவர்கள், நினைவு கூரலை அரசியல் மயப்படுத்தவதும், ஆணைபெற்றிருப்பவர்களில் சிலர் அரசியலில் நிலைபெறுவதற்காக மாவீரர்களின் உறவுகளை உரிமை கொண்டுவதும் என்று வேடிக்ககைகள் பல அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

விடுதலைக்காக ஏங்கி நிற்கும் இனமொன்றின் பிரமுகர்கள் இவ்வாறு நடந்துகொள்வதானது, மிக கீழ்த்தரமான மூன்றாம் நிலைச் செயற்பாடாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. மக்களுக்கான அரசியலை மறந்து மாண்டவர்கள் மீது அரசியல் செய்வது போன்ற இழிநிலை வேறெங்கும் இல்லை.

அதுவொருபுறமிருக்கையில், இந்தமுறை மாவீரர்களின் நினைவு கூரல்களுக்கு காவல்துறையினரின் முழுமையான பின்னணியில் நீதிமன்றங்களின் ஊடாக  தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவுகளுக்கு மேலதிகமாக கொரோனா தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.

அதனைப்பயன்படுத்தியும், கூட்டு நினைவு கூரல்களுக்கான தடைகள் முறையாக பெறப்பட்டுள்ளன. 

இந்த தடைகளை சட்ட ரீதியாக உடைப்பதற்கு இம்முறை முயற்சியொன்று எடுக்கப்பட்டது. ஆனாலும் யாழ்.மேல்நீதிமன்றம் அதற்கான ‘அதிகாரம்’ தன்னிடமில்லை என்று கைவிரித்துவிட்டது.

வடக்கில் உள்ள மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் மட்டும், சட்டங்களை மீறினால் கைது செய்யுங்கள் என்று கூறி தடை உத்தரவை விதிப்பதற்கு மறுதலித்துள்ளது. மல்லாகம் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த காங்கேசன்  துறை காவல்துறையினர் தாம் தோல்வி கண்டுவிட்டதாக எண்ணி, கைதுகளை செய்வதற்கு திட்டமிட்டு வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சிறிலங்கா நீதிமன்றங்களின் ஊடாக நீதியைப் பெற முடியும் என்றால் இனவழிப்புக்கான நீதிக்காக சர்வதேச விசாரணையொன்றை கோர வேண்டிய அவசியமே இருந்திருக்காது. இந்த பட்டறிவு கூட இல்லாது  சட்டரீதியாக நினைவுகூரலுக்கு அனுமதி பெற முயன்ற ‘சட்டாம்பிகளை’ என்னவென்று கூறுவது. சரி, அவர்களும் முயன்று பார்த்தார்கள் என்று விட்டுவிடலாம்.

ஆனால் நினைவு கூரல் விடயமானது வெறுமனே சட்டப்பிரச்சினை அல்ல. தனிமனித அடிப்படை உரிமைப் பிரச்சினை, தமிழர்களின் கலாசார, பண்பாட்டுப் பிரச்சினை, தமிழீழ கூட்டுரிமைப் பிரச்சினை. அரசியல் ரீதியான பிரச்சினை, ஆகவே இந்த விடயத்தினை இத்துடன் மறந்துவிடலாகாது.

இந்தவிடயத்தினை அரசியல் தரப்பினர் கையாளவும் இடமளிக்க முடியாது. ஏனென்றால் வெறுமனே இது அரசியல் பிரச்சினை மட்டுமல்ல. இனமொன்றின் பிரச்சினை, பாரம்பரிய சமூகமொன்றின் பிரச்சினை. தாயகத்தில் வாழும் அத்தனை தமிழுறவுகளின் பிரச்சினை. ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்றால் தாயகத்தின் அனைத்து தரப்புக்களும் அணி திரள வேண்டும். நினைவாலயங்கள் சீராக பராமரிக்கப்பட வேண்டும். புனரமைக்கப்பட வேண்டும். மறவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இவை அனைத்திற்குமான பொறிமுறையொன்றும் வேண்டும். இந்த மாவீரர்கள் நாள் அதற்கான அடித்தளத்தினை இடவேண்டும். இதில் புலம்பெயர் உறவுகளும் துணையாக தூண்களாக இருக்க வேண்டும். உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் நாளாக இது அமைய வேண்டும்.

Print Friendly, PDF & Email